தேசிய விருது பெற்ற இயக்குநர் மணிகண்டன் மற்றும் இயக்குநரும், படத்தொகுப்பாளருமான பி. அஜித் குமார் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘முத்து என்கிற காட்டான்’ இணையத் தொடரில் விஜய் சேதுபதி, மிலிந்த் சோமன், சுதேவ் நாயர், முத்துக்குமார், சிங்கம் புலி, கலைவாணி பாஸ்கர், வி ஜே பார்வதி, ரிஷா ஜேக்கப், வடிவேல் முருகன், அபி நட்சத்திரா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். பத்து அத்தியாயங்கள் கொண்ட இணையத் தொடரை விளம்பரப்படுத்தும் வகையில் நிகழ்ச்சி ஒன்று சென்னையில் நடைபெற்றது. ஜியோ ஹாட் ஸ்டார் டிஜிட்டல் தளத்திற்காக இந்த இணையத் தொடரை விஜய் சேதுபதி புரொடக்ஷன்ஸ் நிறுவனம் சார்பில் நடிகர் விஜய் சேதுபதி தயாரித்திருக்கிறார். மார்ச் 27 ஆம் தேதி முதல் ஜியோ ஹாட் ஸ்டார் டிஜிட்டல் தளத்தில் வெளியாகும் இந்த இணையத் தொடரை விளம்பரப்படுத்தும் நிகழ்ச்சியில், இணையத் தொடர் குழுவினர் கலந்து கொண்டனர்.
இதில் கலந்து கொண்டு பேசிய இயக்குநர் – படத்தொகுப்பாளர் பி. அஜித் குமார் பேசுகையில்,
நான், முதலில் பட தொகுப்பாளராகத்தான் பணியாற்றினேன். முதல் கட்ட படப்பிடிப்பிற்கு பிறகு, இயக்குநருடனான கதை விவாதம் தொடர்ந்து நடைபெற்றது. இந்த இணைய தொடருக்கான மணிகண்டனின் ஐடியா மிகவும் அருமையானதாக இருந்தது. இதனை நாங்கள் அனைவரும் ஒன்றிணைந்து பேசி இன்று அனைவரும் பார்த்து ரசிக்கும் வகையிலான படைப்பாக வழங்கி இருக்கிறோம். இதற்காக உழைத்த அனைவருக்கும் என்னுடைய மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். இந்த இணையத் தொடர் அனைத்து தரப்பு ரசிகர்களுக்கும் பிடிக்கும் என்று உறுதியாக நம்புகிறேன்” என்றார்.
நடிகர் மிலிந்த் சோமன் பேசுகையில்,
‘’தமிழில் தயாராகும் இணைய தொடரில், முதன் முதலாக நடித்திருக்கிறேன். இந்த கதை எனக்கு மிகவும் பிடித்திருந்தது. அதிலும் குறிப்பாக இந்த கதையின் தொடக்கம் முன்னணி நட்சத்திர நடிகர் ஒருவரின் வெட்டப்பட்ட தலையில் இருந்து தொடங்குகிறது. இதுவே எனக்கு ஆச்சரியத்தை தந்தது. இந்தப் படத்தில் இடம்பெற்ற அந்த கதாபாத்திரத்திற்கு நான் ஏன்? என்ற கேள்வியை இயக்குநரிடம் கேட்டபோது , அவர் அதற்கான விளக்கத்தை முழுமையாகவும், நேர்த்தியாகவும் அளித்தார். என் மீது நம்பிக்கை வைத்து அந்த கதாபாத்திரத்தை வழங்கியதற்காக இயக்குநருக்கு நன்றி. என் கதாபாத்திரம் மட்டுமல்ல இந்த தொடரில் பணியாற்றிய அனைவரும் ஒன்றிணைந்து குழுவாக பணியாற்றினார்கள். அதுவும் என்னை கவர்ந்தது. இதற்காகவும் அனைவருக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்” என்றார்.

கதாசிரியர் ஆர். ராஜ்குமார் பேசுகையில்,
” இதில் இயக்குநர் மணிகண்டனுடன் இணைந்து திரைக்கதை உருவாக்கத்தில் பங்கு பெற்றேன். அந்த அனுபவம் சிறப்பானதாக இருந்தது. இது மணிகண்டனின் அப்பாவின் வாழ்க்கையில் நடைபெற்ற ஒரு உண்மை சம்பவம். அதை விவாதித்து விரிவு படுத்தலாம் என பேசத் தொடங்கினோம். மாதக்கணக்கில் விவாதித்தோம். தலை கிடைத்து விட்டது முண்டம் எங்கே? அவன் நல்லவனா? கெட்டவனா? கொலைகாரனா ?கொள்ளைக்காரனா? என விசாரிப்பது போல் ஏராளமான கிளை கதைகளை உருவாக்கி, சுவாரசியமான புதிய எதிர்பாராத திருப்பங்களுடன் இதனை உருவாக்கினோம். இது ஒரு வகையான புது முயற்சி. நாங்கள் இருவரும் பேசிய விசயங்களை வைத்து இன்னும் இரண்டு இணைய தொடர்களை உருவாக்கலாம். அந்த அளவிற்கு கதாபாத்திரங்களை பற்றி பேசி இருக்கிறோம்.
இந்த கதையை விஜய் சேதுபதி தேர்வு செய்தது மிகப்பெரிய விசயம். எந்த ஒரு மாஸ் ஹீரோவும் இதை ஒப்புக்கொள்ள மாட்டார்கள். ஆனால் விஜய் சேதுபதி இந்த ஸ்கிரிப்டை பெரிதாக நம்பினார். இந்த இணைய தொடர் ஒரு புது முயற்சி புது முயற்சியை எப்போதும் தமிழ் ரசிகர்கள் கொண்டாடுவார்கள்” என்றார்.
நடிகர் விஜய் சேதுபதி பேசுகையில்,
‘’முத்து என்கிற காட்டான் இந்த வெப்சீரிசை தொடங்கியதிலிருந்து இந்த தருணம் வரை இதற்கு பின்னால் நடைபெற்ற விசயங்களை வைத்து இரண்டு மூன்று தொடர்களை உருவாக்கலாம். அனைத்தையும் கடந்து இன்று இந்த இணைய தொடர் வெளியாவதற்க்காக உழைத்த அனைவருக்கும் நன்றி. குறிப்பாக ஜியோ ஹாட் ஸ்டார் நிறுவனத்திற்கு பெரிய நன்றி.
மணிகண்டனின் அறிவு எனக்கு எப்போதும் ஆச்சரியத்தை தரும். ஒவ்வொரு விசயத்தையும் அவர் பார்க்கும் கோணங்கள் வித்தியாசமாக இருக்கும். இங்கு அவருடன் பணியாற்றியவர்கள் அனைவருக்கும் தெரியும் ..அவர் ஒரு விசயத்தை பார்த்தவுடன் மிக விரைவாக புரிந்து கொள்வார். அவர் நடிகர்களிடமிருந்து மிக எளிதாக நடிப்புத் திறனை வாங்கி விடுவார். சில சமயங்களில் நடித்து முடித்த பிறகு தான் அவர் அந்த காட்சியில் அவ்வளவு விசயங்களை யோசித்து வைத்திருக்கிறார் என்பது புரியும். அப்படி என்னை எப்போதும் ஆச்சரியப்படுத்தும் மனிதர். அவர் எழுதுவது எல்லாம் சுவாரசியமாக இருக்கும். ஆச்சரியமாகவும் இருக்கும். இந்த வெப் சீரிஸ் உள்பட பல அற்புதமான படங்களை வழங்கி இருக்கிறார்.
மணிகண்டனால் தொடர்ந்து பணியாற்ற முடியாத ஒரு சூழலில், எடிட்டராக பணியாற்றிய அஜித்குமார் அதை அழகாக அவருடைய கையில் எடுத்துக்கொண்டு தெளிவாக நிறைவு செய்தார். அஜித் குமார் இதை இயக்கும்போது, நான் தான் அவருக்கு உதவியாக இருக்கும் என்று ‘உடன் பால்’ படத்தினை இயக்கிய இயக்குநர் கார்த்திக்கை அழைத்து இதில் பணியாற்றுமாறு கேட்டுக் கொண்டேன். நம்ம ஊரைப்பற்றி உணர்வுபூர்வமாக தெரிந்தவர் என்பதால் அவரிடம் உரிமையுடன் கேட்டேன். என் அழைப்பை ஏற்று இதில் பணியாற்றினார்.
இதில் பணியாற்றிய ஒளிப்பதிவாளர்கள், இசையமைப்பாளர், நடிகர்கள், நடிகைகள், மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் அனைவருக்கும் நன்றி. முத்து என்கிற காட்டான் இணைய தொடர் மார்ச் 27 ஆம் தேதி ஜியோ ஹாட்ஸ்டார் இல் வெளியாகிறது. எல்லோருக்கும் பிடிக்கும் என்று நம்புகிறேன்” என்றார்.