அஜய் அர்ஜுன் புரொடக்ஷன்ஸ் நிறுவனம் சார்பில் டாக்டர் அர்ஜுன் தயாரிப்பில் அஜயன் பாலா இயக்கத்தில் ஸ்ரீராம் கார்த்திக் நடிப்பில் தயாராகி இருக்கும் ‘மைலாஞ்சி’ திரைப்படத்தின் இசை மற்றும் டீசர் வெளியீட்டு விழா சென்னையில் சிறப்பாக நடைபெற்றது. இப்படத்திற்கு சிம்பொனி செல்வன் இசைஞானி இளையராஜா பாடல்களை எழுதி இசையமைக்க இயக்குநர் வெற்றிமாறன் வழங்குகிறார்.
இந்நிகழ்வில் திருமதி அகிலா பாலுமகேந்திரா மற்றும் இசைக்கலைஞர் கங்கை அமரன் ஆகியோர் இசை மற்றும் டீசரை வெளியிட, சிறப்பு விருந்தினர்களாக படக்குழுவினருடன் கலந்து கொண்ட நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், இயக்குநர்கள் ஆர். வி. உதயகுமார், பேரரசு, ஏ. எல். விஜய், மீரா கதிரவன், காவல்துறை உயரதிகாரி தினகரன் (ஏடிஜிபி) ஆகியோர் பெற்றுக் கொண்டனர்.
எழுத்தாளரும், தமிழ் இலக்கிய சிந்தனையாளருமான அஜயன் பாலா இயக்குநராக அறிமுகமாகும் ‘மைலாஞ்சி’ திரைப்படத்தில் ‘கன்னி மாடம்’ பட புகழ் நடிகர் ஸ்ரீராம் கார்த்திக் கதையின் நாயகனாக நடிக்க, அவருக்கு ஜோடியாக நடிகை க்ருஷா குரூப் நடித்திருக்கிறார். இவர்களுடன் முனீஷ்காந்த், சிங்கம் புலி, தங்கதுரை உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். ஒளிப்பதிவு மேதை செழியன் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு சிம்பொனி செல்வன் இசைஞானி இளையராஜா இசையமைத்திருக்கிறார். உன்னதமான காதல் உணர்வை போற்றும் வகையில் தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை அஜய் அர்ஜுன் புரொடக்ஷன்ஸ் நிறுவனம் சார்பில் டாக்டர் ப. அர்ஜுன் தயாரித்திருக்கிறார்.
திரையரங்குகளில் விரைவில் வெளியாகவுள்ள இந்த திரைப்படத்தின் இசை மற்றும் டீசரை வெளியிடுவதற்காக சென்னையில் நடைபெற்ற விழாவில் படக்குழுவினருடன் திருமதி அகிலா பாலு மகேந்திரா, கங்கை அமரன், நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், இயக்குநர்கள் ஆர். வி. உதயகுமார், பேரரசு, ஏ. எல். விஜய், மிஷ்கின், மீரா கதிரவன், தயாரிப்பாளர் தனஞ்செயன், காவல்துறை உயரதிகாரி தினகரன் ஆகியோர் கலந்து கொண்டனர். டிரென்ட் மியூசிக் நிறுவனம் ‘மைலாஞ்சி’ பாடல்களை வெளியிட்டுள்ளது.
இயக்குநர் மிஷ்கின் பேசுகையில்,
“இயக்குநர் அஜயன் பாலா பேரன்பு மிக்கவர். என்னுடைய சினிமா ஆய்வை, அறிவை உரசி பார்க்கக்கூடியவர். எப்போதும் சினிமாவைப் பற்றி ஆரோக்கியமான விவாதத்தை முன் வைப்பவர். நான் சினிமாவில் வந்ததற்கு அஜயன் பாலாவும் ஒரு காரணம். அன்பான மனிதர், பண்பான மனிதர். அதனால் அவருக்கு சினிமா வாய்ப்பு எளிதாக கிடைக்கவில்லை. சினிமாவில் தேவையில்லாமல் ரொம்ப நல்லவர்கள் சில பேர் இருப்பார்கள். அதில் மீரா கதிரவனை போல் அஜயன் பாலாவும் ஒருவர். உண்மையை சொல்ல வேண்டுமென்றால் எனக்கு முன்னால், வெற்றிமாறனுக்கு முன்னால், அஜயன் பாலா இயக்குநராகி இருக்க வேண்டும்.
இந்த படத்தில் எனக்கு மிகவும் பிடித்த விஷயம் இசைஞானி இளையராஜாவை இணைத்துக் கொண்டது தான். இந்தப் படத்தின் பாடல்களை கேட்டேன், பார்த்தேன். சில இடங்களில் அவருடைய தனித்துவம் தெரிந்தது.
தயாரிப்பாளர் நட்பை பற்றி குறிப்பிட்டார் வேறு துறையில் நட்பு இருக்கிறதா, இல்லையா என எனக்குத் தெரியாது. ஆனால் சினிமா துறை போல் நட்பை போற்றும் ஒரு துறை கிடையாது.
தான் கண்டறிந்த விஷயத்தை சமூகத்துடன் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்பதுதான் ஒவ்வொரு படைப்பாளியின் ஆசை. தான் கஷ்டப்பட்டு சிறுக சேகரித்த ஒரு விசயத்தை மக்களிடம் திருப்பி தர வேண்டும் என்பது ஒரு தயாரிப்பாளரின் ஆசை. சினிமாவை எந்த கோணத்திலிருந்து பார்த்தாலும் அது ஆக சிறந்ததாகவே இருக்கிறது. இதற்கு நட்புதான் அடித்தளம். சினிமா என்பது மிகப்பெரிய நட்பு சமுத்திரம்.
இந்தத் திரைப்படம் மிக முக்கியமான படம். கதாசிரியனும் இந்த சமூகத்திற்கான மனநல மருத்துவன் தான். நல்ல படங்கள் இந்த சமூகத்திற்கு ஒரு தெரபி, சமூகத்திற்காக இப்படி சிந்திக்கும் தெரபிஸ்ட்கள் எப்போதும் மகிழ்ச்சியாக இருந்ததில்லை.
கடந்த 30 வருடமாக இந்த சினிமாவில் நான் புரிந்து கொண்ட விஷயத்தை பகிர்ந்து கொள்கிறேன். உங்கள் அனைவருக்கும் முக்கோணம் என்ற ஒரு வடிவத்தை பற்றி தெரிந்திருக்கும். அதில் ஐந்து வகையான முக்கோணங்கள் இருக்கிறது என்பார்கள், மூன்று பக்கமும் ஒரே அளவுள்ள முக்கோணம் தான் தனித்துவமானது. அதேபோன்றுதான் இந்த சினிமா. தயாரிப்பாளர் – கதாசிரியர் & இயக்குநர் – தொழில்நுட்பக் கலைஞர்கள்- என இந்த மூவரும் சமமாக இருந்தால் படைப்பு நன்றாக இருக்கும்.
எங்கள் காலத்தில் சினிமா என்பது ஒரு கனவாகவே இருந்தது. ஆனால் இப்போது அப்படி அல்ல. 365 திரைப்படங்கள் உருவான இந்த தமிழ் சினிமாவில் தற்போது 35 திரைப்படங்கள் தான் உருவாகின்றன. ஐந்து படங்கள் தான் வெற்றி பெறுகின்றன. அடுத்த தலைமுறை சினிமாவிற்கு வரும் தயாரிப்பாளர்கள் ஒரு மூன்று படங்களை உருவாக்குவதற்கான திட்டமிடலுடன் வர வேண்டும். முதல் படம் அனுபவம். இரண்டாவது படம் எப்படி தோல்வி அடையாமல் படம் தயாரிப்பது, எப்படி வெற்றி பெறுவது என்று அனுபவத்தை தரும். மூன்றாவது படத்தில் பொருத்தமான நடிகர்கள், நடிகைகள், தொழில்நுட்ப கலைஞர்கள் ஆகியோரை தேர்வு செய்து வெற்றி படத்தை எப்படி அளிக்க வேண்டும் என்ற அனுபவத்தை பெறுவார்கள். இது என்னுடைய கணிப்பு,” என்றார்.
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசுகையில்,
“நாம் ஒருவரை சந்தித்தால் உடல்நிலை எப்படி இருக்கிறது என்று தான் கேட்கிறோம். மனநிலை எப்படி இருக்கிறது என்று யாரும் கேட்பதில்லை. எவ்வளவு பணம் இருந்தாலும் மனம் சரியில்லை என்றால் அது பயனற்று போகும். பாதிக்கப்பட்டவர்களுக்கு தான் அதன் அருமை தெரியும். அதனால் மருத்துவத்திலேயே மகத்தான மருத்துவம் மனநல மருத்துவம் தான்.
மனநலத்தை சரி செய்யும் மருத்துவர் அர்ஜுன் இந்தப் படத்தை தயாரித்திருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. தன் மண்ணின் மக்களுக்காக தான் பயின்ற கல்வி பயன்பட வேண்டும் என்று அவர் சேத்துரிலேயே பணத்தை பெரிதாக எண்ணாமல், மனத்தை நலப்படுத்தி வரும் மகத்தான மருத்துவர் தான் தயாரிப்பாளர் அர்ஜுன்.
என் தம்பி அஜயன் பாலா தமிழ் திரை உலகில் சிறந்த படைப்பாளிகள் அனைவரையும் சந்தித்து இருப்பார். கேரளா போன்ற மாநிலங்களில் முதலில் எழுத்தாளர்களுக்கு தான் மரியாதை. அங்கு முதலில் கதையை வாங்கிய பிறகு தான் இயக்குநர், நடிகர் போன்றவற்றை தீர்மானிப்பார்கள். ஆனால் இங்கு அப்படி இல்லை. அஜயன் பாலா ஒரு சிறந்த எழுத்தாளர். நான் அவருடைய எழுத்தின் ரசிகன். பல தருணங்களில் நான் வாசிப்பதற்கு நேரம் இல்லாத போது தலைவர்களைப் பற்றிய சுருக்கமான எழுத்துகளை எழுதித் தருவார். தலைவர்களைப் பற்றி முன்னணி வார இதழில் கட்டுரையாக அவர் எழுதி இருக்கிறார்.
இன்றைய தலைமுறையினருக்கு அம்பேத்கர் என்றால் யார் என்று தெரிந்து கொள்வதற்கு அவர் எழுதிய புத்தகம் உதவும். அவருடைய எழுத்தில் ஒரு ஈர்ப்பு இருக்கும். புத்தகத்தை வாசிக்கத் தொடங்கினால் இறுதிப் பக்கம் வரை தொடர்ந்து வாசிப்பார்கள்.
எழுத்தாளரான அஜயன் பாலா திரைப் படைப்பாளியாக வருவது எனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது. இலக்கியம் பொய் பேசலாம். புராணம் பொய் பேசலாம். வரலாறு உண்மையை மட்டும் தான் பேசும். அப்படி ஒரு வரலாற்று உண்மையை பதிவு செய்யக் கூடியவர் தான் அஜயன் பாலா.
இயக்குநர் வெற்றிமாறன் புதினங்களை திரைப்படமாக்குவார். ஆனால் இப்போது ஒரு எழுத்தாளனே திரைப் படைப்பாளியாக வந்திருக்கிறார். இந்த தலைமுறையில் இதுதான் தமிழ் திரையுலகத்தில் முதன்முறை. இதற்காக அவரை பாராட்டுகிறேன்.
ஒளிப்பதிவாளர் செழியன், கலை இயக்குநர் லால்குடி இளையராஜா போன்ற எனக்கு நெருக்கமான உறவுகள் பலரும் இப்படத்தில் பணியாற்றி இருக்கிறார்கள்.
ஜப்பானில் நூறு வயது வரை வாழ்வது எப்படி என்று ஒரு உரையாடல் நடைபெற்ற போது, அங்குள்ளவர்கள் சிரித்திருக்கிறார்கள். ஏனென்றால் அவர்கள் அனைவரும் 110 வயது உள்ளவர்கள். அவர்களிடம் எப்படி இவ்வளவு நாள் வாழ்கிறீர்கள் என கேட்டபோது, முதலில் மொழி. அதனைத் தொடர்ந்து எங்களின் இயற்கை. மூன்றாவதாக மனமகிழ்ச்சி ஆகியவற்றை குறிப்பிட்டிருக்கிறார்கள்.
என் தம்பி சிங்கம்புலி அருகில் இருந்தால் போதும். உங்களுக்கு எந்த நோயும் வராது. ஏனெனில் அவன் உங்களை எப்போதும் சிரிக்க வைத்துக் கொண்டிருப்பான்.
‘வாழ்வே மாயம்’ என்பது ஒரு வாழ்க்கை தத்துவம். அந்தப் படத்தில் உச்சகட்ட காட்சியில் சண்டை காட்சி இல்லாமல் ஒரு பாடல் காட்சியை வைத்து, ஒரு படத்தை இசையமைப்பாளர் ஒருவர் வெற்றி பெற செய்திருக்கிறார் என்றால் அவர் கங்கை அமரன் மட்டும்தான். அதெல்லாம் மிகப் பெரும் சாதனை.
தாய்ப்பாலும், தண்ணீரும் மலிவாக கிடைப்பதால் தான் மனிதன் அதனை மதிப்பதில்லை. இதுபோன்ற கலைஞர்கள் நம் அருகே அமர்ந்திருப்பதால் அவர்களின் மகத்துவம் புரிவதில்லை. இதுதான் இங்கு சிக்கல். அந்த வகையில் இங்கு வருகை தந்திருக்கும் அனைத்து சிறப்பு விருந்தினர்களுக்கும் என் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
இந்த விழாவில் நான் கலந்து கொள்வதில் மகிழ்ச்சியும், நெகிழ்ச்சியும் அடைவது திருமதி அகிலா பாலு மகேந்திரா கலந்து கொண்டிருப்பதால் தான். அவர்களை இங்கு சந்திக்க வைத்ததற்காக தயாரிப்பாளருக்கு என் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
தென்னிந்திய சினிமாவின் சிறந்த படைப்பாளியாக சிலரை தேர்வு செய்தால் அதில் பரதன், மணிரத்னம் போன்றவர்கள் இருப்பார்கள். அனைத்து படைப்பாளிகளுக்கும் அவர்களின் முதல் படைப்பில் பாலுமகேந்திரா தான் ஒளிப்பதிவாளர். அவரிடம் இருந்துதான் ஏராளமான விஷயங்களை கற்றுக் கொண்டிருக்கிறார்கள்.
இங்கு ‘சிம்பொனி செல்வன்’ என இளையராஜாவை குறிப்பிட்டு இருக்கிறார்கள். அவர் இசையமைத்த ஒவ்வொரு பாடலிலும், பாடல் வரிகளை தவிர்த்து விட்டு, இசையை மட்டும் கேட்டால் அவை ஒவ்வொன்றும் ஒரு சிம்பொனி தான். அதனால் நாங்கள் சொல்கிறோம் அவர் சிம்பொனி செல்வன் அல்ல, இசைஞானி அல்ல, இசை இறைவன். ஏன் இறைவன்? இறைவனிடம் என்ன கேட்டாலும் கொடுப்பார். எல்லோரையும் மனதார வாழ்த்துவார். அதனால்தான் அவர் இசை இறைவன்.
நான் சின்ன வயதில் படம் பார்க்கும்போது கதாநாயகனுக்கு கிடைக்காத கைத்தட்டல் இசைஞானி இளையராஜா என்று பெயர் போட்டதும் எழுந்தது. தமிழ் திரையுலகில் இசையமைப்பாளர் என பெயரை போட்டதும் கைத்தட்டல் எழுந்தது என்றால் அது இளையராஜாவிற்கு மட்டும்தான்.
என் நண்பர் மு. களஞ்சியம் இயக்கிய ‘பூமணி’ திரைப்படத்தை நண்பர்களுடன் திரையரங்கில் பார்த்துக் கொண்டிருந்தோம். வண்டியில் கதாநாயகியை உட்கார வைத்து கதாநாயகன் வண்டியை ஓட்டுகிறான். அந்த சூழலில் ‘என் பாட்டு என் பாட்டு’ எனத் தொடங்கும் பாடலை இடம்பெறச் செய்து ரசிகர்களை உற்சாகமடைய செய்தவர் இளையராஜா. அதில் ‘நெஞ்சைத் துவைக்கிற ராகம் இது’ என்னும் வரிகள் கடந்ததும் திரையரங்கில் அனைவரும் எழுந்து ‘ஒன்ஸ்மோர்’ சொன்னபோது தான் இசையின் ஆக்கிரமிப்பை, இசையின் ஈர்ப்பை நான் உணர்ந்தேன்.
‘இசையால் அடைய முடியாத இன்பமும் இல்லை. இசையால் துடைக்க முடியாத துன்பமும் இல்லை’ என்கிறார்கள். எல்லா நோய்க்கும் ஒரு மருந்து இருக்கிறது என்றால் அது இசைதான். அதுபோன்றதொரு இசையை இந்த மண்ணுக்கு அளித்த மகத்தான மருத்துவர்தான் என் அப்பன் இளையராஜா. மனநல மருத்துவர் தயாரித்த இந்தத் திரைப்படத்தில் குணநல மருத்துவர் இளையராஜா இசையமைத்திருப்பது சிறப்பு. இந்தப் படம் மிகச்சிறந்த வெற்றியை பெறுவதற்கு என்னுடைய வாழ்த்துக்கள்,” என்றார்.