ஒலிம்பியா மூவிஸ் தயாரித்து, ராஜு முருகன் எழுத்து, இயக்கத்தில், சசிகுமார், சைத்ரா ஜே. ஆச்சார், குரு சோமசுந்தரம், ஜெயபிரகாஷ், ஆஷா சரத், கோபி நயினார், வசு மித்ரா, அருள் எழிலன் உள்ளிட்ட பலரது நடிப்பினில் வெளியாகியிருக்கும் திரைப்படம், மை லார்ட். இத்திரைப்படத்திற்கு நீரவ்ஷா ஒளிப்பதிவு செய்துள்ளார். ஷான் ரோல்டன் இசையமைத்துள்ளார்.
‘டூரிஸ்ட் ஃபேமிலி’ படத்தின் மிகப்பெரிய வெற்றிக்குப்பிறகு, சசிகுமார் நடிப்பில், ரசிகர்களின் மிகுந்த எதிர்பார்ப்பிற்கிடையே வெளிவந்திருக்கும் திரைப்படம், மைலார்ட், எப்படி இருக்கிறது?
தீப்பெட்டித் தொழிலை மட்டுமே நம்பி வாழும், கோவில் பட்டியில் வசிக்கும் விளிம்பு நிலை மனிதர் சசிகுமார். ஆதரவற்ற நிலையில், அவரைப் போலவே இருக்கும் சைத்ரா ஜே. ஆச்சாரை கல்யாணம் செய்து கொள்கிறார். தனது மனைவியின் மருத்துவ சிகிச்சைக்காக, வாங்கிய கடனை திருப்பி கொடுக்க முடியாத நிலையில், கடன் கொடுத்தவர் பணத்திற்கு பதிலாக கிட்னியைக் கொடுக்குமாறு நிர்பந்திக்கிறார். இந்த சூழலில், மத்திய அமைச்சர் ஒருவருக்கு சசிகுமாரின் கிட்னி தேவைப்படுகிறது. அதனால் அவர் கடத்தப்படுகிறார். இதன் பிறகு என்ன நடந்தது? என்பது தான், ‘மை லார்ட்’ படத்தின் கதை.
விழிப்புணர்வு இல்லாத, அப்பாவி பாமரர்களிடமிருந்து எப்படியெல்லாம் கிட்னி திருடப்படுகிறது. என்பதை தெளிவாக சொல்லியிருக்கிறார், இயக்குநர் ராஜு முருகன். வள்ளலாரின் வழிபாட்டையும், கொள்கையையும் சசிகுமார் மூலமாகவே, க்ளைமாக்ஸில் சொல்லிவிட்டார். ஒவ்வொரு காட்சியும் சிறப்பாக படமாக்கப்பட்டிருக்கிறது. காட்சிகளுக்கேற்ற வசனம் இன்னும் சிறப்பாக இருக்கிறது. சென்சார் என்ற பெரிய கட்டுப்பாட்டிற்குள் இருந்தபோதும், இயக்குநர் சொல்ல வந்ததை சரியாக சொல்லி விட்டார்.
முத்துச் சிற்பி, கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் சசிகுமார், சிறப்பான நடிப்பினை வெளிப்படுத்தி நடித்திருக்கிறார். அப்பாவித்தனமான முகத்துடன் சசிகுமார் செய்யும் அட்ராசிட்டி சூப்பர். வசு மித்ராவிடம் கிரிக்கெட் பேட்டால் அடிவாங்கும் காட்சியில் அழ வைத்து விடுகிறார். ரசிகர்களை எளிதில் தன்பக்கம் ஈர்த்து விடுகிறார்.
சுசீலா கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் சைத்ரா ஜே. ஆச்சாரின் நடிப்பு நன்றாகவே இருக்கிறது. அவர், சாமியாடும் காட்சிகள் ரசிக்க வைக்கின்றன.
மத்திய அமைச்சர் கதாபாத்திரத்தில் அப்படியே பொருந்தியிருக்கிறார், ஆஷா சரத். அழுத்தமான கதாபாத்திரம் அசால்ட்டாக கையாண்டிருக்கிறார்.
அநியாயங்களை எதிர்த்து போராடும் ‘மக்கள் குத்து’ பத்திரிக்கை ஆசிரியராக நடித்திருக்கும் குரு சோமசுந்தரம், சிறப்பு செய்திருக்கிறார். ஜெயப்பிரகாஷ், கோபி நயினாரும் கவனம் ஈர்க்கிறார்கள்.
மருத்துவ உலகில் நடக்கும் மோசடிகளையும், வள்ளலாரின் போதையையும் இணைத்து சிந்திக்க வைத்திருக்கிறார்கள்.
‘மை லார்ட்’ – வள்ளலாரின் போதனை!