மலேஷியாவில் கோலோச்சிய ‘நம்பிக்கை குளாபல் லான்ச்’ இந்தியாவில் தொடக்கம்!

மலேசியாவில் கடந்த 27 ஆண்டுகளாகத் தனி முத்திரை பதித்து வரும் ‘நம்பிக்கை’ ஊடகம், இந்தியாவில் தனது புதிய கிளையைச் சென்னையில் கோலாகலமாகத் தொடங்கியது. இதன் தொடக்க விழாவில், அனைத்து அரசியல் கட்சிகளின் தலைவர்கள், திரைத்துறை பிரபலங்கள், ஊடகப் பிரதிநிதிகள் உள்ளிட்ட பல முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

நிகழ்வில் கலந்து கொண்ட நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசியதாவது,

“கட்சி சார்புடைய அல்லது தலைவர்கள் கையில் இருக்கும் இன்றைய ஊடகங்களுக்கு மத்தியில் பெரும் நம்பிக்கையாக என் போன்றவர்கள் இந்த ‘நம்பிக்கை’யை தான் பார்க்கிறோம். நம்பிக்கை என்பது வெறும் வார்த்தை மட்டுமல்ல! சிங்கப்பூர், மலேசியா போன்ற நாடுகளில் ’நம்பிக்கை’ கிளை பரப்புகிறது என்றார்கள். அது ஆழமான வேர் பரப்ப வேண்டும் என்பதுதான் என் விருப்பம். தேர்தல் வருகிற காலக்கட்டத்தில் நேர்மையும் உண்மையுமாக செய்திகளை ‘நம்பிக்கை’ கொண்டு போய் சேர்க்கும் என்பது என் நம்பிக்கை. உலகம் முழுவதும் உள்ள தமிழர்களின் நம்பிக்கையை இது நிச்சயம் பெறும் என உள்ளன்போடு வாழ்த்துகிறேன்” என்றார்.

பள்ளிக்கல்வித்துறை அமைச்சர், அன்பில் மகேஷ் பொய்யா மொழி பேசியதாவது,

“நம்பிக்கை விதைக்கூடிய நாளாக இன்று இருக்கிறது. நம்முடைய செயல்பாடுகள் மூலம்தான் நம்பிக்கை பெற முடியும். சோஷியல் மீடியா யுகத்தில் யதார்த்த தன்மையை இழக்கும் சூழலில் உள்ளோம். அதனால், களத்தில் இருந்து உண்மைத்தன்மையுடன் செய்திகளை எந்தளவுக்கு நேர்மையாக கொடுக்கிறோம் என்பதில்தான் நம்பிக்கையை பெற முடியும். மலேசியாவை தொடர்ந்து இங்கும் ‘நம்பிக்கை’ வந்திருக்கிறது. சீமான் அண்ணன் சொன்னதை போல உள்ளது உள்ளபடி சொல்லுங்கள். மக்கள் எங்களை வழிநடத்துவாரகள். தனது பேச்சு, கவர்ச்சி மூலம் முதலில் ஊடகங்கள் முட்டாள்களைத்தான் முதலில் கவரும். பின்பு, புத்திசாலிகளை வாயடைக்க வைத்துவிடும். அப்படி இல்லாமல், தவறு யார் செய்திருந்தாலும் அதை தைரியமாக சுட்டிக்காட்டி சொல்லுங்கள். இன்று வந்திருக்கும் அனைத்து ஆளுமைகளோடு இணைந்து நான் சார்ந்திருக்கும் இயக்கத்தின் சார்பாக ‘நம்பிக்கை’க்கு எனது வாழ்த்துகளை தெரிவித்து கொள்கிறேன்”.

நடிகர் சரத்குமார் பேசியதாவது,

“மலேசியாவில் தொடங்கி இன்று சென்னை நோக்கி அனைவரின் நம்பிக்கை பெற வந்திருக்கும் ’நம்பிக்கை’ குழுமத்திற்கும் இங்கு குழுமியிருக்கும் அனைவருக்கும் வணக்கம்! என் பெரியப்பா ஆதித்தனார் மிகுந்த உழைப்பைக் கொடுத்து ஆரம்பித்த பத்திரிகைதான் தந்தி. அவருடன் என் அப்பாவும் சில காலம் பயணித்தார். நானும் சில காலம் பத்திரிகை உலகில் இருந்தேன். உண்மைகள் மட்டுமே பேச வேண்டும் என்ற நோக்கத்தில்தான் பத்திரிகை இயங்க வேண்டும். 27 ஆண்டுகளாக ’நம்பிக்கை’ இயங்கி வருகிறது. மலேசியாவை தொடர்ந்து சிங்கப்பூர், இந்தியா, துபாய் செல்ல இருக்கிறார்கள். இன்னும் பல நாடுகளுக்கு சென்று பலரது நம்பிக்கையை இந்த ‘நம்பிக்கை’ பெற வேண்டும் என வாழ்த்துகிறேன்” என்றார்.

நடிகை ராதிகா சரத்குமார் பேசியதாவது,

“’நம்பிக்கை’ டிஜிட்டல் லான்ச் இன் இந்தியா’ நிகழ்விற்கு வந்திருப்பது மகிழ்ச்சி. ஒரு குரல், ஒரு பார்வை, ஒரு வாக்குறுதியோடு வந்திருக்கிறீர்கள். அதற்கு என்னுடைய வாழ்த்துக்கள். மீடியா என்பது பிரேக்கிங் செய்திகளை தருவது மட்டுமல்லாது, பொறுப்புணர்வோடு செயல்பட வேண்டும். நியாயம், துணிவு, நேர்மையான பார்வையோடு செயல்படுவதுதான் பத்திரிகை தர்மம். பெரும் வெற்றி பெற வாழ்த்துக்கள்!” என்றார்.

நடிகர் நாசர் பேசியதாவது,

“இன்றைய காலக்கட்டத்தில் ஊடகங்கள் மீது மக்கள் நம்பிக்கை இழந்து வருகிறார்கள். பரபரப்பாக இருக்க வேண்டும் என்று பல செய்திகள் திரித்து கூறப்படுகிறது. குறிப்பாக, எங்கள் சினிமா துறையில் பல நல்ல படங்கள் திரித்து கூறி காணாமல் போய்விடுகிறது. இதனால் நான் செய்தி சேனல்களை பார்ப்பதையே தவிர்த்து விட்டேன். ஆனால், என்னை மீண்டும் செய்திகள் பார்க்க வைக்கிறது இந்த ‘நம்பிக்கை’. இன்று ஒரு கஷ்டம் வந்தாலும் நாளை நல்லது நடக்கும் என்ற நம்பிக்கையில்தான் இந்த மனிதகுலம் இயங்கி வருகிறது. தெளிவான, உண்மையான செய்திகள் ‘நம்பிக்கை’யில் நமக்கு கிடைக்கும். சீமான் அவர்கள் சொன்னது போல நீங்கள் வேர் விட வேண்டும். உங்களுக்கு வாழ்த்துக்கள்” என்றார்.