தமிழ்சினிமாவில் புதிய இயக்குநர், புதிய தயாரிப்பாளர் மற்றும் புதிய நட்சத்திரங்களின் கூட்டணியில் உருவான பல படங்கள் ரசிகர்களிடத்தில் பெரிய வெற்றியை பெறும். அந்த வகையில், ‘நண்பன் ஒருவன் வந்த பிறகு’ திரைப்படம் முழுக்க முழுக்க புதிய முகங்களின் முயற்சியினால் உருவாகி இருக்கிறது. விரைவில் வெளிவரவிருக்கும் இப்படத்தை பார்த்தவர்கள் பாராட்டி வருவது குறிப்பிடத்தக்கது.
‘நண்பன் ஒருவன் வந்த பிறகு’ திரைப்படத்தினில் ‘மீசையை முறுக்கு’ படத்தில் ஆதியின் தம்பியாக நடித்த அனந்த், இயக்குநராகவும், கதாநாயகனாகவும், இப்படத்தின் மூலம் அறிமுகமாகிறார்.
மசாலா பாப்கார்ன் மற்றும் ஒயிட் ஃபெதர் ஸ்டுடியோஸ் நிறுவனங்கள் சார்பில் ஐஸ்வர்யா.எம் மற்றும் சுதா.ஆர் இணைந்து தயாரித்துள்ளனர். இப்படத்தை இயக்குநர் வெங்கட் பிரபு வழங்குவதோடு, ரசிகர்களுக்கு தான் வழங்கும் பரிசு என்றும் இப்படத்தை குறிப்பிட்டுள்ளார். அவர் இயக்கிய முதல் படமான ‘சென்னை 600028’ ரசிகர்களிடம் எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்தியதோ, அதே தாக்கத்தை ஏற்படுத்தும் வகையில் இப்படத்தின் கதைக்களம் அமைந்திருக்கிறதாக சொல்லப்படுகிறது.
அனந்த், கதையின் மையக்கதாபாத்திரமாக நடித்திருக்க, அவருடன் ஆர்ஜே விஜய், பவானி ஸ்ரீ, இர்பான், வில்ஸ்பேட், தேவ், மோனிகா, கே.பி.ஒய் பாலா, ஆர்ஜே ஆனந்தி, சபரிஷ், குகன், ஃபென்னி ஆலிவர், தர்மா, வினோத் உள்ளிட்ட பல புதுமுகங்கள் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார்கள். இப்படத்தின் பாடல்கள் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று, படத்தின் மீது எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
‘நண்பன் ஒருவன் வந்த பிறகு’, திரைப்படம் குறித்து, இயக்குநர் மற்றும் நடிகர் அனந்த், கூறியதாவது..,
“பல படங்களில் சிறு சிறு வேடங்களில் நடித்திருக்கிறேன். மீசையை முறுக்கு படத்தில் ஆதியின் தம்பியாக நடித்த வேடம் எனக்கு நல்ல பெயர் வாங்கி கொடுத்தது. நாளைய இயக்குநர்கள் ஐந்தாவது சீசனில் கலந்துக்கொண்டு இறுதிப் போட்டி வரை பயணித்திருக்கிறேன். நண்பன் என்ற குறும்படத்திற்காக விகடன் விருது பெற்றேன். பிறகு என் வாழ்க்கையில் ஒரு தரமான சம்பவம் நடந்தது. என் வாழ்க்கையில் மட்டும் அல்ல, இது பலரது வாழ்க்கையில் நடந்திருக்கும். என் நண்பனுக்கு நடந்த அந்த சம்பவம் பற்றி எழுத ஆரம்பித்தேன், அது தான் இந்த கதை. இந்த கதை அனைவரின் வாழ்விலும் நடந்திருக்கும். இந்த கதையை கேட்டவர்கள் அனைவரும், ”இது என் வாழ்க்கையில் நடந்த சம்பவம் போல இருக்கே” என்று சொன்னார்கள்.
ஒரு நல்ல கதை தனக்கானதை தானாகவே தேடிக்கொள்ளும் என்று சொல்வார்கள், சென்னை 600028 போன்ற படங்களுக்கு அப்படி தான் நடந்ததாக சொன்னார்கள், அதுபோல தான் இந்த படத்திற்கான அனைத்து விசயங்களும் தானாகவே நடந்தது. வெங்கட் பிரபு சாரிடம் கதை சொன்ன போது, ”‘சென்னை 600028’ மூன்றாம் பாகத்திற்கான ஐடியாவாக இருக்கே” என்று சொன்னது மட்டும் இன்றி, தன்னுடைய பங்களிப்பும் இதில் இருக்க வேண்டும் என்பதற்காக, இந்த படத்தை அவர் வழங்குகிறார்.
இது ஏதோ நண்பர்களுக்கான படம் என்பதால் இளைஞர்களுக்கான படம் என்று நினைக்க வேண்டாம். 60 வயதுடையவர்கள் கூட இந்த கதையுடன் தங்களை தொடர்புப்படுத்திக் கொள்வார்கள், அவர்கள் வாழ்க்கையிலும் இதுபோன்ற சம்பவங்கள் நடந்திருக்கும். அதனால், இந்த கதை அனைத்து வயதினரையும் நிச்சயம் பாதிக்கும். நீங்கள் பலரை பார்த்திருப்பீர்கள், அவர்களுடைய பேச்சை கேட்டிருப்பீர்கள். நான் பேசுவது கொஞ்சம் அதிகம் என்று உங்களுக்கு தோன்றலாம், ஆனால் படத்தை பார்க்கும் போது நான் பேசியது அனைத்தும் சரி என்று உங்களுக்கு புரியும். ‘சென்னை 600028’, ‘அட்ட கத்தி’போன்ற படங்கள் எப்படி ஒரு தாக்கத்தை ஏற்படுத்தியதோ அதுபோல் ‘நண்பன் ஒருவன் வந்த பிறகு’ படமும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும்.” என்றார்.
அனந்த் கதை, வசனம் எழுதி இயக்கியிருக்கும் இப்படத்திற்கு, அனந்த் மற்றும் ராஜேஷ்.வி திரைக்கதை எழுதியிருக்கிறார்கள். தமிழ் செல்வன் ஒளிப்பதிவு செய்திருக்கிறார். ஃபென்னி ஆலிவர் படத்தொகுப்பு செய்ய, ராகுல் கலை இயக்குநராக பணியாற்றியிருக்கிறார்.