இரா என்டர்டெயின்மென்ட் தயாரித்து, ட்ரைடண்ட் ஆர்ட்ஸ் வெளியிட்டுள்ள படம், நந்தன். இதில் சசிகுமார், ஸ்ருதி பெரியசாமி, பாலாஜி சக்திவேல், சமுத்திரக்கனி, மாதேஷ், மிதுன், கட்டெறும்பு ஸ்டாலின் உள்ளிட்ட பலர் நடித்திருக்க இரா. சரவணன் இயக்கியிருக்கிறார். ஜிப்ரான் இசையமைத்திருக்கிறார்.
‘வணங்கான்குடி’ என்ற ஊரில், ஊராட்சி மன்றத் தலைவருக்கான தேர்தல் வருகிறது. அந்த ஊரின் வழக்கப்படி மேல் சாதியை சேர்ந்தவர்கள் மட்டுமே தேர்தலில் போட்டியிட முடியும். அதோடு, மேல் சாதியைச் சேர்ந்த ‘கோப்புலிங்கம்’ (பாலாஜி சக்திவேல்) என்பவரது குடும்பத்தினர் மட்டுமே பரம்பரை, பரம்பரையாக அந்த பதவிக்கு போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்படுகின்றனர். இந்நிலையில், வணங்கான் குடி ஊராட்சித் தொகுதி ரிசர்வ் தொகுதியாக அறிவிக்கப்படுகிறது. அதனால், வேறு வழியின்றி ‘கோப்புலிங்கம்’ (பாலாஜி சக்திவேல்) தனது வீட்டில் எடுபிடியாக வேலை செய்துவரும், தாழ்த்தப்பட்ட சதியைச்சேர்ந்த அம்பேத்குமாரை (சசிகுமார்) ஊராட்சிமன்றத் தலைவராக்குகிறார். சில நாட்களிலேயே சசிகுமாருக்கு நிலைமை புரிகிறது. அந்த பதவியின் மூலம் தன் மக்களுக்கு எதுவும் செய்யமுடியாது என்பதையும் புரிந்து கொள்கிறார். இதன் பிறகு என்ன நடந்த்து என்பது தான், நந்தன் படத்தின் கதை.
ரிசர்வ் தொகுதியில் நின்று வெற்றி பெறும் தலித் தலைவர்கள், இன்றளவிலும் தமிழ்நாட்டின் சில இடங்களில் மேல் சாதியினரால் அவமதிக்கப்பட்டு வருவது நடைபெற்று வருகிறது. இந்த உண்மை சம்பவத்தினை, மைய்யப்படுத்தியே நந்தன் திரைப்படம் உருவாகியிருக்கிறது.
சமூகத்திற்கான ஒரு நல்ல கருத்தினை பதிவு செய்ய முயற்சித்திருக்கும் இயக்குநர் இரா.சரவணன், அதற்கான திரைக்கதையினையும், பாத்திரப்படைப்பினையும் உயிர்ப்பில்லாததாக படைத்திருப்பது படத்தின் மிகப்பெரும் பலவீனம். மிகைபடுத்தப்பட்ட பல காட்சிகள், வலிய திணிக்கப்பட்டதாக இருக்கிறது. இதனால் படம் பார்ப்பவர்களிடையே எந்த ஒரு உணர்வினையும் ஏற்படுத்தவில்லை! மேல் சாதியினரால், கீழ்சாதியினர் மீது நடத்தப்படும் அத்துமீறல்கள் எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை!
அம்பேத்குமாராக சசிகுமார், அழுக்குப்படிந்தவராக பரட்டைத்தலையுடன் அந்த கதாபாத்திரத்தின் தேவையினை உணர்ந்து நடித்திருக்கிறார். மக்கள் முன்னே அம்மணப்படுத்தப்பட்ட மாடி வாங்கும் காட்சிகளில் சிறப்பாக நடித்திருக்கிறார்.
சசிகுமார் மனைவியாக ஸ்ருதி பெரியசாமி. பெரிதாக குறை சொல்ல எதுவும் இல்லை.
பதவி, சாதி வெறி பிடித்தவராக கோப்புலிங்கம் கதாபாத்திரத்தில் இயக்குநர் பாலாஜி சக்திவேல் மிகச்சரியாக பொருந்தியிருக்கிறார்.
சமுத்திரக்கனி ஒரு சில காட்சிகளில் வந்து போகிறார்.
ஜிப்ரானுடைய இசை படத்திற்கு எந்த விதத்திலும் உதவவில்லை!
ஆர்.வி. சரனுடைய ஒளிப்பதிவு ஓகே!
‘நந்தன்’ – அவசியமாக, அழுத்தமாக, சமூகத்திற்கு சொல்ல வேண்டிய கதை. திரைக்கதையால் தடுமாறியிருக்கிறது!