‘நரி வேட்டை’ –  விமர்சனம்!

‘இந்தியன் சினிமா கம்பெனி’ சார்பில், திப்பு ஷான், ஷியாஸ் ஹாசன் ஆகியோரது தயாரிப்பில், அபின் ஜோசப் எழுதி, அனுராஜ் மனோகர் இயக்கத்தில் வெளிவந்திருக்கும் படம், நரி வேட்டை. மலையாளத்தில் உருவாகியிருக்கும் இந்தப்படம், தமிழில் டப் செய்யப்பட்டுள்ளது. இதில் டொவினோ தாமஸ், சுராஜ் வெஞ்சார மூடு, சேரன், பிரியம்வதா கிருஷ்ணன், ஆர்யா சலீம், பிரசாந்த் மாதவன், பிரணவ் தியோ ஃபைன், நந்து, கிருஷ்ணன் பாலகிருஷ்ணன், சுதி கேலிகட், ரினி உதயகுமார், அப்புன்னி சசி , குமார் சேது, உன்னிகிருஷ்ணன், வினோத் போஸ் , தொம்மன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

ஒளிப்பதிவு விஜய், இசை ஜேக்ஸ் பிஜாய்.

ஸ்சிறிய அளவிலான விவாசய நிலத்திலிருந்து கிடைக்கும், சொற்ப வருவாயைக் கொண்டு, அம்மாவுடன் வசித்து வருகிறார், (டொவினோ தாமஸ்)  வர்க்கீஸ். அவரது கனவு லட்சியம் எல்லாமே ‘பப்ளிக் சர்வீஸ் கமிஷன்’ தேர்வு மூலம் வேலைக்கு செல்வது தான்.  அவரும், வங்கியில் வேலை செய்து வரும் (பிரியம்வதா கிருஷ்ணன்) நான்சியும் காதலித்து வருகின்றனர். இந்நிலையில் அவருக்கு, போலீஸ் கான்ஸ்டபிள் வேலைக்கு அழைப்பு வருகிறது. அம்மாவின் வற்புறுத்தலால், பிடிக்காத அந்த வேலைக்குச் செல்கிறார்.

போலீஸ் கான்ஸ்டபிள் வேலைக்கு புதிதாக சேர்ந்த (டொவினோ தாமஸ்) வர்க்கீஸூக்கு, மூத்த போலீஸ் கான்ஸ்டபிள் (சுராஜ் வெஞ்சார மூடு) பஷீருடன் ஆழ்ந்த நட்பு உருவாகிறது. கேரள மலைப்பகுதியில் வசிக்கும் ஆதிவாசிகள், குடியிருப்பதற்கான நிலங்களையும், வீடுகளையும் கட்டித்தர கோரிக்கை விடுக்கின்றனர். அரசு தரப்பிலிருந்து, ஆதிவாசிகளின் கோரிக்கை நீண்டகாலமாக கிடப்பில் கிடக்கிறது. இதனால், ஆதிவாசிகளின் போராட்டம் தீவிரமாகிறது. அதை தடுக்க போலீஸ் படை குவிக்கப்படுகிறது. அதில், வர்க்கீஸூம் பஷீருடன் செல்கிறார். அந்த போலீஸ் படைக்கு சேரன் தலைமை தாங்குகிறார். நாளுக்கு நாள் போராட்டம் தீவிரமடைய, காட்டுக்குள் கடுமையான பதற்றம் நிலவுகிறது. இதற்கிடையே, ஆதிவாசி மக்களின் போராட்டத்தில், மாவோயிஸ்டுக்கள் கலந்து விட்டதாக போலீஸூக்கு தகவல் கிடைக்கிறது. அந்த மாவோயிஸ்டுக்களை பிடிக்க, போலீஸாருடன் ராணுவத்தினரும் இணைகின்றனர். அப்போது பஷீர் கொல்லப்படுகிறார். கொலையாளியை கண்டுபிடிக்கும் முயற்சியில் இறங்கும் வர்க்கீஸூக்கு அதிர்ச்சிகரமான உண்மை தெரிய வருகிறது.  இதுவே ‘நரிவேட்டை’ படத்தின் கதை.

நரிவேட்டை, படத்தின் முதல் பாதி முழுவதும் டொவினோ தாமஸூம், அவரது காதலியாக  நடித்திருக்கும் பிரியம்வதா கிருஷ்ணன் ஆகியோரின் காட்சிகளே அதிகம். அது ரசிக்கவும் செய்கிறது. தனக்கு பிடித்த வேலைக்கு மட்டுமே செல்வது என்ற குறிக்கோளுடன் வேலை தேடும் இளைஞனாக டொவினோ தாமஸ் சிறப்பாக நடித்திருக்கிறார். காதலிஅயை சுற்றி வரும் போதும், காதலியின் அப்பா தன்னை அவமானப்படுத்தும் போதும், உடன் வேலை பார்த்த காவலர் பஷீர் கொல்லப்பட்டபோதும், உயரதிகாரி சேரனுடன் ஏற்படும் மோதலிலும் சிறப்பான நடிப்பினை வெளிப்படுத்தியிருக்கிறார்.

பிரியம்வதா கிருஷ்ணன், தனக்கு கிடைத்த கதாபாத்திரத்தில் கச்சிதமாக நடித்திருக்கிறார்.

மலையாள சினிமாவில் அறிமுகமாகியிருக்கும் சேரன், கதாபாத்திரத்தின் தன்மை உணர்ந்து நடித்திருக்கிறார். போலீஸூக்கான அதிகாரத்திமிரினை சிறப்பாக வெளிப்படுத்தியிருக்கிறார்.

நியாயமான போலீஸ்காரராக, பஷீர் பாத்திரத்தில் நடித்த  சுராஜ் வெஞ்சார மூடு, அந்த கதாபாத்திரத்தினை உயர்த்திப்பிடித்திருக்கிறார்.

ஆர்யா சலீம், பிரசாந்த் மாதவன், பிரணவ் தியோ ஃபைன், நந்து, கிருஷ்ணன் பாலகிருஷ்ணன், சுதி கேலிகட், ரினி உதயகுமார், அப்புன்னி சசி , குமார் சேது, உன்னிகிருஷ்ணன், வினோத் போஸ் , தொம்மன் உள்ளிட்டோரும் அந்தந்த கதாபாத்திரங்களுக்கு வலு சேர்க்கும் விதமாக நடித்துள்ளனர்.

ஜேக்ஸ் பிஜாயின் இசையும், விஜய்யின் ஒளிப்பதிவும் படத்தின் பலமாக இருக்கிறது.

ஆதிவாசிகள் தரப்பிலிருந்து எந்த அழுத்தமும் இல்லாதபோது, வலுக்கட்டாயமாக  போராட்டத்தை முடிவுக்கு கொண்டுவர, அரசும் சேரனும் எடுக்கும் முடிவுகள் ஏற்றுக்கொள்ளும்படி இல்லை.

அதனால், நரியே இல்லாத காட்டில் வேட்டைக்கு சென்ற மாதிரியாக இருக்கிறது!