கோலிவுட்டின் புதிய திரைப்பட தயாரிப்பு நிறுவனம் ’லயோனா & லியோ பிக்சர்ஸ்’ (LIONA & LEO Pictures)! – பத்திரிகையாளர்கள் முன்னிலையில் அறிமுகமானத.
வாழ்க்கையில் பல்வேறு சாதனைகள் படைக்க வேண்டும் என்பதை தான் ஒவ்வொருவரும் லட்சியமாக கொண்டு பயணிப்பார்கள். ஆனால், சாதனைப் படைத்தவர்களையும், உழைப்பால் உயர்ந்தவர்களையும் அங்கீகரித்து மக்களின் வெளிச்சத்தில் அவர்களை மிளிரச் செய்ய வேண்டும், என்பதையே லட்சியமாக கொண்டு ஒருவர் பயணித்திருக்கிறார்.
ஆம், தனிமனித எதிர்காலத்தைப் பற்றி சிந்திக்கும் இவ்வுலகில், மற்றவர்களைப் பற்றி சிந்தித்ததோடு, சாதனையாளர்களை அங்கீகரித்து கெளரவிக்க வேண்டும் என்பதை சிந்தித்துக்கொண்டிருந்தவர் தான் திரு.ஜான் அமலன். திரைத்துறை மட்டும் இன்றி தொழில், விளையாட்டு, அரசியல், மருத்துவம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் சாதித்தவர்களை கண்டறிந்து அவர்களுக்கு விருது வழங்கி கெளரவிக்க வேண்டும், என்பதை கனவாக கொண்டிருந்தவர், ’இந்தியன் மீடியா ஒர்க்ஸ்’ (INDIAN MEDIA WORKS) என்ற நிறுவனத்தை ஆரம்பித்து, அதன் மூலம் ‘இந்தியன் விருதுகள் ‘ (INDIAN AWARDS) என்ற பெயரில் பல்வேறு துறைகளைச் சேர்ந்தவர்களுக்கு விருது வழங்கி கெளரவித்து வருகிறார்.
இரண்டு வருடங்களுக்கு ஒரு முறை நடைபெறும் ‘இந்தியன் விருதுகள் ’ (INDIAN AWARDS) நிகழ்ச்சியின் 3 வது சீசன் வரும் 2024, டிசம்பர் 21,22 ஆகிய தேதிகளில் இரண்டு நாட்கள் நிகழ்வாக, சென்னை, சேத்துபட்டில் உள்ள ‘லேடி ஆண்டாள்’ அரங்கில் நடைபெறுகிறது. இதில், சினிமாத்துறையில் சிறந்த நடிகர், நடிகை, இயக்குநர், ஒளிப்பதிவாளர், இசையமைப்பாளர் உள்ளிட்ட 60 பிரிவுகளின் கீழ் விருதுகள் வழங்கப்படுகிறது. மேலும், அரசியல், தொழில், விளையாட்டு, மருத்துவம், கல்வி, ராணுவம், காவல்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளில் 30 பிரிவுகளில் விருதுகள் வழங்கப்படுகிறது.
மேலும், இறந்தும் மக்கள் மனதில் வாழ்ந்துக் கொண்டிருக்கும் நடிகரும், அரசியல் தலைவருமான திரு.விஜயகாந்த் அவர்களின் நினைவாக ‘கேப்டன் விஜயகாந்த்’ என்ற பெயரில் சினிமாத்துறையில் சாதித்தவர்களுக்கு விருது வழங்கப்பட உள்ளது. அதேபோல், சினிமாத்துறையில் கடந்த 40 ஆண்டுகளாக மக்கள் தொடர்பாளராக பணியாற்றிக் கொண்டிருக்கும் திரு.டைமண்ட் பாபு அவர்களின் 40 வது திரையுலக வாழ்க்கையும் கொண்டாடப்படுகிறது.
விருதுகள் வழங்குவது மட்டும் இன்றி இந்திய ராணுவத்தில் பணியாற்றி உயிர் நீத்த ராணுவ வீரர்களின் குடும்பங்கள் மற்றும் ஏழை எளிய சிறுவர்களுக்கு நிதி உதவி வழங்க இருக்கும் இந்தியன் மீடியா ஒர்க்ஸ் நிறுவனம், இத்தகைய பணியை தமிழக அரசு வழிகாட்டுதல்படி செய்கிறது.
‘இந்தியன் விருதுகள் 2024 ’ (INDIAN AWARDS 2024) நடைபெறும் அதே மேடையில், இந்திய அளவில் மிக முக்கியமான அழகுப் போட்டியான ’Mr Miss & Mrs தமிழகம் 2024 – சீசன் 4’ நடைபெற உள்ளது.
3வது ஆண்டாக ‘இந்தியன் விருதுகள் 2024 ’ நிகழ்ச்சியை வெற்றிகரமாக நடத்தும் ’இந்தியன் மீடியா ஒர்க்ஸ்’ (INDIAN MEDIA WORKS) நிறுவனம், கடந்த மூன்று வருடங்களாக ’Mr Miss & Mrs தமிழகம்’ அழகுப் போட்டியை வெற்றிகரமாக நடத்தி வருகிறது. குறிப்பாக தென்னிந்தியாவைச் சேர்ந்த ஒரு நிறுவனம், வட இந்தியாவில் இத்தகைய அழகுப் போட்டியை வெற்றிகரமாக நடத்துவது என்பது சாத்தியமில்லாத ஒன்றாக இருந்த நிலையை, தனது இந்தியன் மீடியா ஒர்க்ஸ் நிருவனம் மூலம் மாற்றியிருக்கும் திரு.ஜான் அமலன், அவர்கள் கோவாவில் சொகுசு கப்பலில் இந்த அழகுப் போட்டியை இரண்டு முறை நடத்தி ஒட்டு மொத்த இந்தியாவையும் திரும்பி பார்க்க வைத்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
விருது விழா, அழகுப் போட்டிகள் ஆகியவற்றை தனது தொலைநோக்கு பார்வையின் மூலம் வித்தியாசமாக நிகழ்த்தி மீடியா மற்றும் பொழுதுபோக்குத் துறையின் கவனம் ஈர்த்த திரு.ஜான் அமலன், அவர்கள் தற்போது திரைத்துறையில் தயாரிப்பாளராகவும் கால்பதிக்கிறார். இதற்காக ’லயோனா & லியோ பிக்சர்ஸ்’ (LIONA & LEO Pictures) என்ற பெயரில் தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கியிருப்பவர், இந்நிறுவனம் மூலம் பல தரமான மற்றும் வித்தியாசமான திரைப்படங்களை தயாரிக்க இருக்கிறார்.
’இந்தியன் மீடியா ஒர்க்ஸ்’ நிறுவனர் திரு.ஜான் அமலன், சினிமாத்துறையில் தயாரிப்பாளராக கால்பதிப்பது பற்றி கூறுகையில்,
“நான் கல்லூரி படிக்கும் போதே, சினிமா பிரபலங்கள் மற்றும் பிறத்துறைகளில் சாதிப்பவர்களுக்கு விருது வழங்க வேண்டும் என்று நினைத்தேன். அதற்காக ஒரு நிறுவனத்தை ஆரம்பித்து அவர்களை மிகப்பெரிய அளவில் கெளரவிக்க வேண்டும் என்பது தான் என் ஆசை. குறிப்பாக நடிகர் விஜய் அவர்களுக்கு என் கையால் விருது வழங்க வேண்டும் என்று ஆசைப்பட்டேன். நான் தீவிர விஜய் ரசிகர் என்பதால் இதை என் லட்சியமாக கூட வைத்திருந்தேன். கல்லூரி முடித்த பிறகு என் ஆசை என்னை தொடர்ந்ததால், இத்துறையை என் எதிர்காலமாக எடுத்துக்கொண்டேன். அதன்படி, ’இந்தியன் மீடியா ஒர்க்ஸ்’ என்ற நிறுவனத்தை ஆரம்பித்து அதன் மூலம் ‘இந்தியன் விருதுகள்’ என்ற பெயரில் இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை சினிமா உள்ளிட்ட பல்வேறு துறைகளைச் சேர்ந்த சாதனையாளர்களுக்கு விருது வழங்கி வருவதோடு, அழகுப் போட்டிகளையும் வெற்றிகரமாக நடத்தி வருகிறேன். தென்னிந்தியாவைச் சேர்ந்த ஒரு நிறுவனம் வட இந்தியாவில் அழகுப் போட்டியை நடத்த முடியும் என்பதை முதலில் நிகழ்த்திக் காட்டியது நான் தான்.
விருது விழா மற்றும் அழகுப் போட்டி ஆகியவற்றுடன் நின்றுவிடாமல் இப்போது திரைத்துறையில் தயாரிப்பாளராகவும் கால் பதிக்கிறேன். ’லையோனா & லியோ பிக்சர்ஸ்’ (LIONA & LEO Pictures) நிறுவனம் சார்பில் திரைப்படங்கள் தயாரிக்க இருக்கிறேன். திறமை மிகு இயக்குநர்கள், நடிகர்கள், நடிகைகள், தொழில்நுட்ப கலைஞர்கள் உள்ளிட்ட அனைத்து தரப்பினருக்கும் வாய்ப்பு வழங்க வேண்டும் என்பது தான் எங்கள் நோக்கம். அதேபோல், நாங்கள் தயாரிக்கும் திரைப்படங்கள் குறைந்த முதலீட்டில், தரமான மற்றும் வித்தியாசமான படைப்பாகவும் இருக்கும்.
நாங்கள் தயாரிக்கும் முதல் படத்திற்கான கதை தேர்வில் தற்போது ஈடுபட்டுள்ளோம். எங்கள் முதல் படம் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை என அனைத்து தரப்பினரும் ஜாலியாக பார்க்க கூடிய பொழுதுபோக்கு படமாக மட்டும் இன்றி, அனைத்து வயதினரையும் தொடர்பு படுத்தும் ஒரு திரைப்படமாகவும் இருக்கும். அப்படம் பற்றிய மற்ற தகவல்கள் இந்தியன் விருதுகள் 2024 நிகழ்ச்சி மேடையில் அறிவிக்கப்படும்.” என்றார்.