‘நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்’ –  விமர்சனம்!

‘வுண்டர் பார் பிலிம்ஸ் பிரைவேட் லிமிடெட்’ தயாரிப்பில் பவிஷ் நாராயண், அனிகா சுரேந்திரன், மேத்யூ தாமஸ், பிரியா வாரியர், வெங்கடேஷ் மேனன், ரம்யா ரங்கநாதன், சித்தார்த்தா ஷங்கர், சரத்குமார், சரண்யா பொன்வண்ணன் ,ஆடுகளம் நரேன், உதய் மகேஷ், ஸ்ரீதேவி உள்ளிட்ட பலரது நடிப்பினில் வெளிவந்துள்ள படம், ‘நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்’. எழுதி இயக்கியிருக்கிறார், தனுஷ்.

‘நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்’ திரைப்படத்தினை பார்க்கும் போது, பல வெற்றி படங்களின் கதை, உங்கள் நினைவுக்கு வந்து போகும். கதையே இல்லாமல் படம் எடுக்கும்போது, அட்லீஸ்ட் பழைய படங்களின் சாயலில் படம் எடுப்பது தவறில்லையே!

பழைய கதையோ, புதுக்கதையோ திரைக்கதை சுவாரசியமாக இருந்தால், படம் வெற்றி பெறுவது உறுதி. அந்த வகையில் தனுஷ் எழுதி இயக்கிய, ‘நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்’ படத்தின் திரைக்கதை சுவார்சியமாக இருக்கிறதா? என்றால், இருக்கிறது. அதனால், இந்தப்படத்தின் வெற்றியும் உறுதி!

கதைக்கு வருவோம். ‘நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்’ திரைப்படத்தின் நாயகன் பவிஷ் நாராயண், தயாரிப்பாளர், இயக்குநர், நடிகர் தனுஷின் அக்காள் மகன். அவர் ஒரு “செஃப்” (Chef). சாப்பாடு பிரியரான அனிகா சுரேந்திரனை சந்தித்த பிறகு, அது காதலாக உருவாகிறது. சந்தோஷமாக நாட்கள் செல்கிறது. இருவரது பெற்றோரிடமும், இருவரும் தங்களது காதலை சொல்கிறார்கள். பவிஷ் நாராயனண் பெற்றோரிடம் சம்மதம் கிடைக்கிறது. அனிகாவின் தந்தை சரத்குமார், மறுக்கிறார். அனிகா அவரது காதலில் உறுதியாக இருக்கிறார். சரத்குமார், அனிகாவிடம் சமாதானம் கூறி வருகிறார். அதன் பிறகு, பவிஷ் நாராயணன் அனிகா சுரேந்திரனிடமிருந்து விலகுகிறார். இதனால், பவிஷ் – அனிகா காதல் பிரேக் அப் ஆகிறது. இதையடுத்து, அனிகா, தனக்கு திருமணம் நடக்கவிருப்பதாக, பவிஷை அவரது திருமணத்திற்கு அழைக்கிறார். பவிஷ் திருமணத்திற்கு சென்றாரா? அதன் பிறகு என்ன நடந்த்து என்பது தான், படத்தின் மீதிக் கதை.

நாயகன் பவிஷ். அறிமுகப் படத்திலேயே அட்டகாசம் செய்திருக்கிறார். சாயலில் தனுஷை போலவே இருக்கும் அவர், அனைத்து உணர்வினையும் அழகாக வெளிப்படுத்தி, நடிப்பில் சோடை போகாமல் இருக்கிறார்.  நடனம் ஆடும் போதும் கவனிக்கத்தக்க வகையில் நன்றாகவே நடனமாடியிருக்கிறார். சிறப்பு!

அனிகா சுரேந்திரன், ஜாலியாக சுறி வரும்போதும், காதலுக்காக உருகி, மருகும் போதும் சூப்பரான நடிப்பினை கொடுத்திருக்கிறார். க்ளைமாக்ஸ் காட்சியில் சிறப்பான சம்பவம் செய்திருக்கிறார்.

மேத்யூ தாமஸ், அனைத்து காட்சிகளிலும் சிரிக்க வைக்கிறார். பவிஷ் நண்பராக நடித்து ரசிகர்களை எளிதில் கவர்ந்து விடுகிறார்.

வெங்கடேஷ் மேனன் – ராபியா கதூன் திரைக்கதை ஓட்டத்திற்கு பயன்பட்டிருப்பதோடு சிறப்பு கவனம் ஈர்க்கிறார்கள்.

மற்றபடி, சித்தார்தா ஷங்கர், ரம்யா ரங்கநாதன், பிரியா வாரியர், ஆர்.சரத்குமார், சரண்யா பொன்வண்ணன், உதய் மகேஷ், ஸ்ரீதேவி ஆகியோர் திரைக்கதையின் நகர்வுக்கு உதவியிருக்கிறார்கள் நன்றாகவும் நடித்திருக்கிறார்கள்.

அனிகாவின் அப்பாவாக நடித்திருக்கும் சரத்குமார், ஒவ்வொரு படத்திலும் தனித்த நடிப்பினால் ரசிகர்களின் கவனம் ஈர்க்கும் அவர், இந்தப்படத்திலும் சிறப்பாக நடித்திருக்கிறார்.

எழுதி, இயக்கியிருக்கும் நடிகர் தனுஷ், தற்போதைய இளைஞர்களின் காதல் குறித்த உணர்வுகளையும், புரிதல்களையும் அழகாக படமாக்கியிருக்கிறார். வழக்கமான, பார்த்து ரசித்த காதல் கதை என்றாலும், சலிப்பில்லாத, இளமை துள்ளும் திரைக்கதையின் மூலம், படம் பார்ப்பவர்களை போரடிக்காமல் செய்திருக்கிறார்.

ஜி.வி.பிரகாஷ் குமாரின் இசை, படத்தின் வெற்றிக்கு அடித்தளம் போட்டுள்ளது. பாடல்கள் அனைத்தும் ரசிக்கும் படி இருக்கிறது. இளைஞர்களை ஆடிப்பாடி கொண்டாட வைக்கிறது. அதோடு அவருடைய பின்னணி இசை காட்சிகளை உயிரோட்டமாக கடத்துவதற்கு உதவியிருக்கிறது.

ஒளிப்பதிவாளர் லியான் பிரிட்டோவின் ஒளிப்பதிவில், இளமை.. வளமை. படமே வண்ணமயமாக இருக்கிறது.

பிரசன்னா.ஜி.கே படத்தொகுப்பு, நேர்த்தி. அதேபோல், கலை இயக்குநர் ஜாக்கி, நடன இயக்குநர் பாபா பாஸ்கர், ஆடை வடிவமைப்பாளர் காவ்யா ஸ்ரீராம் ஆகியோர் படத்திற்கு பலம் சேர்த்திருக்கிறார்கள்.

மொத்தத்தில், ’நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்’ –  இளைஞர்களுக்கானது.