சிக்னேச்சர் புரொடக்ஷன்ஸ் மற்றும் ஜி எஸ் சினிமா இன்டர்நேஷனல் நிறுவனம் சார்பில் தயாராகி எதிர்வரும் மார்ச் மாதம் ஏழாம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகும் ‘நிறம் மாறும் உலகில்’ எனும் திரைப்படத்தின் இசை மற்றும் முன்னோட்ட வெளியீட்டு விழா சென்னையில் சிறப்பாக நடைபெற்றது.
அறிமுக இயக்குநர் பிரிட்டோ J B இயக்கத்தில் உருவாகியுள்ள ‘நிறம் மாறும் உலகில்’ எனும் திரைப்படத்தில் ‘இயக்குநர் இமயம்’ பாரதிராஜா, நட்டி நட்ராஜ், ரியோ ராஜ், சாண்டி மாஸ்டர், விஜி சந்திரசேகர், லவ்லின் சந்திரசேகர், நிவாஸ் ஆதித்தன், சல்மா, சுரேஷ் மேனன், ‘ஆடுகளம்’ நரேன், மைம் கோபி, வடிவுக்கரசி, விக்னேஷ் காந்த், ரிஷி காந்த், கனிகா, ஆதிரா , காவ்யா அறிவுமணி, துளசி, ஐரா கிருஷ்ணன், லிசி ஆண்டனி, நமோ நாராயணன், சுரேஷ் சக்கரவர்த்தி, ஏகன், விஜித், ஜீவா சுப்ரமணியம், திண்டுக்கல் சரவணன், பாலாஜி தயாளன் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். மல்லிகார்ஜுன்- மணிகண்ட ராஜா ஆகியோர் இணைந்து ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு தேவ் பிரகாஷ் இசையமைத்திருக்கிறார். ராம் – தினேஷ் – சுபேந்தர் – ஆகிய மூவர் கலை இயக்குநர்களாக பணியாற்றியிருக்கும் இந்த திரைப்படத்தின் படத்தொகுப்பு பணிகளை தமிழரசன் கவனித்திருக்கிறார்.
தமிழ் திரையுலகின் பிரபலமான நட்சத்திர பட்டாளங்கள் இணைந்து நடித்திருக்கும் ‘நிறம் மாறும் உலகில்’ எனும் திரைப்படத்தின் இசை மற்றும் முன்னோட்ட வெளியீட்டு விழா சென்னையில் பிரம்மாண்டமாக நடைபெற்றது. இந்த நிகழ்விற்கு பட குழுவினருடன் ‘பிக் பாஸ்’ முத்துக்குமரன் , தயாரிப்பாளரும், விநியோகஸ்தருமான தனஞ்ஜெயன் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர்.
நடிகை ஆதிரா பேசுகையில்,
” இந்தப் படத்தில் நான் ரியோ ராஜின் தாயார் பரிமளம் எனும் கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறேன். இயக்குநர் பிரிட்டோவின் அன்பிற்காக அனைத்து நட்சத்திரங்களும் இந்த திரைப்படத்தில் இணைந்து பணியாற்றினார்கள். படப்பிடிப்பு தளத்தில் மிகவும் பொறுமையுடன் அனைவரையும் மதித்து நடந்து கொண்டார். இதற்காகவே அவருக்கு நான் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். ஒவ்வொரு பெண்ணின் வெற்றிக்கும் பின்னால் ஒரு ஆண் இருப்பார். ஒவ்வொரு ஆணின் வெற்றிக்கும் பின்னாலும் ஒரு பெண் இருப்பார். இதைத்தான் இந்த திரைப்படம் வலியுறுத்துகிறது” என்றார்.
நடிகை விஜி சந்திரசேகர் பேசுகையில்,
” இந்த படத்தில் நடிப்பதற்கான வாய்ப்பு என் மகள் மூலமாக கிடைத்தது. இந்தப் படத்தில் என் மகள் லவ்லின் நடித்திருக்கிறார். அவருடைய அம்மாவாக நடிக்கிறீர்களா? என கேட்டார்கள். இந்தப் படத்தில் நானும், என் மகளும் நடித்திருக்கிறோம்.
இந்த திரைப்படத்தில் ரசிகர்கள் எதிர்பாராத விசயங்கள் நிறைய இருக்கிறது. உங்கள் வாழ்க்கையில் மிகவும் நெருக்கமாக பார்த்த பல விசயங்கள் இந்த திரைப்படத்தில் இடம் பிடித்திருக்கிறது. ” என்றார்.
நடிகர் ஏகன் பேசுகையில்,
” நண்பர்களாக இணைந்து திரைப்படத்தில் பணியாற்றுவது உண்டு. இந்த திரைப்படத்தில் அனைவரும் சகோதரர்களாக இணைந்து பணியாற்றிருக்கிறோம். சகோதரர்களாக இணைந்து பணியாற்றினால்.. அது அம்மாவை பற்றிய படமாக தான் இருக்கும். இது அம்மாவை பற்றிய படம். மார்ச் ஏழாம் தேதி வெளியாகிறது. அனைவரும் திரையரங்கத்திற்கு வருகை தந்து ஆதரவு தர வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்” என்றார்.
நடிகை காவ்யா அறிவுமணி பேசுகையில்,
” இது எனக்கு மிகவும் ஸ்பெஷலான தருணம். ஆம்பூர் எனும் ஊரிலிருந்து நன்றாக படிப்பதற்காக ஒரு பெண் சென்னைக்கு வருகிறாள். சென்னையில் அரசு பேருந்தில் அந்தப் பெண் பயணித்துக் கொண்டிருந்தபோது சாலையின் ஓரத்தில் பிரம்மாண்டமாக அமைக்கப்பட்டிருந்த நகைக்கடை ஒன்றின் விளம்பரத்தை பார்க்கிறாள். அந்த விளம்பரத்தில் லேடிஸ் சூப்பர் ஸ்டார் நயன்தாரா இருக்கிறார். அந்த நகைக்கடை விளம்பரத்தை பார்த்த பிறகு, நாமும் ஏன் இது போன்ற விளம்பரங்களில் தோன்றக் கூடாது? என அந்தப் பெண் நினைத்தாள். அதன் பிறகு அதற்காக அந்தப் பெண் தன்னை தயார்படுத்திக் கொண்டாள். அதன் பிறகு குறும்படங்கள், பைலட் படங்கள், விளம்பர படங்கள், தொலைக்காட்சி தொடர்கள்.. என நடித்து ரசிகர்களின் கவனத்தையும், அன்பையும் சம்பாதித்தாள். அந்தப் பெண் நான்தான்.
முல்லை எனும் கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமான பிறகு அடுத்த கட்டத்தை நோக்கி நகர வேண்டும் என எண்ணிக் கொண்டிருந்த தருணத்தில் இயக்குநர் பிரிட்டோவிடமிருந்து அழைப்பு வந்தது. இந்தப் படத்திற்கு தேர்வு செய்யும்போது ‘இந்தப் படத்தில் நீங்கள் கதாநாயகி இல்லை. ஆனால் இந்த படம் வெளியான பிறகு உங்களுடைய நடிப்புத் திறமை பேசப்படும் ‘ என இயக்குநர் வாக்குறுதி அளித்தார். அவருடைய வாக்குறுதி மீது நம்பிக்கை வைத்து இந்த படத்தில் நடித்திருக்கிறேன். படப்பிடிப்பு தளத்தில் கடினமாக உழைத்தார் இயக்குநர் பிரிட்டோ. இந்தப் படம் வெளியான பிறகு அனைவரின் மனதிலும் என்னுடைய கதாபாத்திரம் இடம் பிடிக்கும் என்று உறுதியாக நம்புகிறேன். ” என்றார்.
தயாரிப்பாளர் கேத்ரின் ஷோபா பேசுகையில், ‘
‘நிறைய நட்சத்திரங்களை நடிக்க வைத்து இந்த படத்தை இயக்கி இருக்கும் இயக்குநர் பிரிட்டோவிற்கு என்னுடைய வாழ்த்துக்கள். இந்த குழுவினர் வெற்றி பெறுவதற்கும் என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்” என்றார்.
இயக்குநர் பிரிட்டோ பேசுகையில்,
” இது என்னுடைய முதல் திரைப்படம். நான் திரைப்படங்களில் நடித்துக் கொண்டிருந்தேன். ஆனால் படம் இயக்க வேண்டும் என்று ஆசை இருந்தது. அதற்காக நிறைய கதைகளையும் எழுதினேன். இருந்தாலும் இந்த கதையை தான் முதலில் இயக்க வேண்டும் என்று தீர்மானித்தேன் காரணம் அம்மா. அம்மாவிற்கு சமர்ப்பணம் செய்வதற்கான எல்லா விசயங்களும் அடங்கிய படமாக இது உருவாகி இருக்கிறது. அம்மாவை பற்றி இதற்கு முன் ஏராளமான திரைப்படங்கள் வெளியாகி இருக்கலாம். ஆனால் இது தனித்துவமானது. இது எல்லோருக்கும் பிடிக்கும். மார்ச் ஏழாம் தேதி படம் வெளியாகும் போது திரையரங்குகளில் வருகை தந்து பார்த்த பிறகு உங்கள் அனைவருக்கும் புரியும்.
இந்த வாய்ப்பை வழங்கிய தயாரிப்பாளர்களுக்கு நன்றி. நான் இந்த திரைப்படத்திற்காக பிரபலமான நட்சத்திரங்கள் வேண்டும் என கேட்ட போது எந்தவித தயக்கமும் இல்லாமல் என் அனுபவத்தை பற்றி கூட கேள்வி கேட்காமல் ஒத்துழைப்பு வழங்கினார்கள். முதலில் தயங்கினாலும் பிறகு பணிகள் நடைபெற நடைபெற என் மீதான நம்பிக்கை அவர்களுக்கு அதிகரித்தது.
எனக்கு நடிகர் ஜெய்வந்த் நண்பர். அவர் மூலமாக பாரதிராஜாவை சந்தித்தேன். அவரிடம் கதை சொன்ன போது முழுவதையும் கேட்டுவிட்டு மனதார பாராட்டினார். வயதான தம்பதிகளை கதையின் நாயகனாகவும், நாயகியாகவும் உருவாக்கி கதை எழுதி இருக்கிறாய். இதனாலேயே நீ வெற்றி பெறுவாய் என ஆசீர்வதித்தார். அந்தத் தருணத்தில் தான் இந்த படத்தின் வெற்றியை உணர்ந்தேன். அவரை இயக்கியதற்காகவும், அவரிடம் வாழ்த்து பெற்றதற்காகவும் அவருக்கு இந்த தருணத்தில் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.
நட்டி நட்ராஜ் இந்தப் படத்திற்காக பெரிய ஒத்துழைப்பை வழங்கி இருக்கிறார். மும்பை பின்னணியாக கொண்ட பகுதியில் அவர் வித்தியாசமான கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். அவரது கதாபாத்திரத்தை பற்றி நான் இப்போது முழுமையாக விவரிக்க இயலாது. நான் கேட்டுக் கொண்டதற்காகவே முன்னோட்டத்திற்கு பின்னணி குரலும் கொடுத்திருக்கிறார். அதுவும் ரசிகர்களிடம் பெரிய வரவேற்பை பெற்றிருக்கிறது. தொடர்ந்து ஆதரவு அளித்து வரும் அவருக்கு இந்த தருணத்தில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
‘லியோ’விற்கு பிறகு சாண்டி மாஸ்டரை இந்த திரைப்படத்தில் மிகவும் வித்தியாசமாக காண்பீர்கள். உற்சாகமான கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்.
இந்தப் படத்தில் நடித்திருக்கும் நட்சத்திரங்கள் அனைவரும் என் மீது வைத்திருக்கும் அன்பின் காரணமாக நடிக்க ஒப்புக் கொண்டிருந்தாலும்.. இந்த கதை அம்மாவை பற்றிய கதை என்பதால் தான்…அதன் மீதான ஈர்ப்பின் காரணமாகவே நடிக்க சம்மதம் தெரிவித்தார்கள். அவர்கள் அனைவரும் அவர்களுடைய அம்மாவுடனான கனெக்சனை திரையில் வெளிப்படுத்தி இருக்கிறார்கள். நீங்கள் அதனை பார்த்து ரசிப்பீர்கள். அனைத்து தரப்பு ரசிகர்களையும் கவர்ந்து வெற்றி பெறும் என உறுதியாக நம்புகிறேன்” என்றார்.
நடிகர் சாண்டி மாஸ்டர் பேசுகையில்,
” இங்கு வருகை தந்திருக்கும் நட்சத்திரங்கள் அனைவரும் நடிப்பில் ஜாம்பவான்கள். நான் மட்டும்தான் நடிப்பை பொறுத்தவரை பயிற்சி பெற்றுக் கொண்டிருக்கும் கலைஞர். கொரோனா காலகட்டத்தின் போது தான் நடிகர் மைம் கோபி எனக்கு நடிப்பு பயிற்சியை வழங்கினார். அவர் வழங்கிய சின்ன சின்ன குறிப்புகளை வைத்துக்கொண்டு தான் நான் நடித்துக் கொண்டிருக்கிறேன்.
நண்பர் ரியோ தான் பிரிட்டோவிடம் கதை இருக்கிறது. அதை நீங்கள் கேட்டுப் பாருங்கள். பிடித்திருந்தால் நடிக்கலாம் என ஆலோசனை சொன்னார். பிரிட்டோ என்னிடம் கதை சொன்ன போது அவர் கதை சொன்ன விதமும், கதையும் நன்றாக இருந்தது. ஏனெனில் ‘லியோ’விற்கு பிறகு என்னை தொடர்பு கொள்ளும் இயக்குநர்கள் அனைவரும் சைக்கோ வில்லன் கதாபாத்திரத்தில் நடிப்பதற்காகத்தான் அணுகினார்கள். அதனால் அதற்கு உறுதியாக மறுப்பு தெரிவித்து விட்டேன். இந்தப் படத்தின் கதையில் என் கதாபாத்திரம் ஜாலியானது. எனக்கு பாடல் இருக்கிறதா? எனக் கேட்டேன் இருக்கிறது என்று சொன்னார். இன்னும் உற்சாகமடைந்தேன். படம் சிறப்பாக வந்திருக்கிறது.
நடிகர் ரியோ ராஜ் பேசுகையில்,
” நானும் இப்படத்தின் இயக்குநரான பிரிட்டோவும் திரையுலகில் நடிப்பதற்கான வாய்ப்புகளை ஒன்றாகத்தான் தேடத் தொடங்கினோம். அதன் பிறகு திடீரென்று ஒரு நாள் நான் இயக்குநராக போகிறேன் என்று சொன்னார். நண்பரான எனக்கு இது ஆச்சரியமாக இருந்தது. அதன் பிறகு கதையை எழுதி சொன்ன பிறகு உண்மையிலேயே வியந்தேன். அவர் இயக்கும் முதல் திரைப்படத்தில் நான் நடித்திருக்கிறேன் என்பது எனக்கு மகிழ்ச்சியாக இருக்கிறது. நான் நடித்த முதல் மியூசிக் ஆல்பத்தின் இயக்குநரும் அவர்தான். அறிமுக இசையமைப்பாளரும் , என்னுடைய நண்பருமான தேவ் பிரகாஷின் திறமை – இந்த படம் வெளியான பிறகு பெரிய அளவில் பேசப்படும் என நம்புகிறேன்.
ஒரு நல்ல திரைப்படத்திற்கான அடையாளமாக நான் எதனை பார்க்கிறேன் என்றால் திரைப்படத்தில் உள்ள ஒவ்வொரு பிரிவினரும் தங்களுக்கான பங்களிப்பை முழுமையாக செய்வதற்கான வாய்ப்பு கிடைக்கும் போது தான். அதனால் இந்த படத்தில் படத்தொகுப்பாளரும் கடுமையாக உழைத்திருக்கிறார். நானும், சாண்டி மாஸ்டரும் எப்போதும் ஜாலியாக ஏதாவது செய்ய வேண்டும் என்று பேசிக் கொண்டிருப்போம். அது இந்த படத்தில் சாத்தியமாகி இருக்கிறது. நாங்கள் இருவரும் இணைந்து இன்னும் பல படங்களில் பணியாற்றுவோம். அனைவரும் திரையரங்கத்திற்கு சென்று பார்த்து ரசிக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்” என்றார்.
நடிகர் நட்டி நட்ராஜ் பேசுகையில்,
” அறிமுக இயக்குநர்கள் என்னிடம் கதையை சொல்வார்கள். கதையை கேட்டு விட்டு இரண்டு நாள் கழித்துதான் சொல்கிறேன் என்று தான் பதிலளிப்பேன். ஆனால் இயக்குநர் பிரிட்டோ இந்த படத்தின் கதையை என்னிடம் சொன்னபோது… கதையை கேட்டவுடன் உடனடியாக நடிக்க ஒப்புக் கொண்டேன். இந்தப் படத்திற்காக நான் முதல் நாள் கலந்து கொண்ட போது, இயக்குநர் அதற்கு முன் படமாக்கிய காட்சிகளை என்னிடம் காண்பித்தார். அது அவர் இயக்கத்தில் உருவாகும் முதல் படம் போல் இல்லை. நேர்த்தியாக உருவாக்கி இருந்தார். இயக்குநர் பிரிட்டோ விரைவில் பான் இந்திய இயக்குநராக உயர்வார். அந்த அளவிற்கு சிறப்பாக இந்த படத்தை உருவாக்கி இருக்கிறார்.
இந்தத் திரைப்படத்தில் பாரதிராஜாவும் வடிவுக்கரசியும் இணைந்து நடித்திருக்கிறார்கள். அவர்களுடைய காட்சியிலும் இயக்குநர் தன் தனித்திறமையை காண்பித்து இருக்கிறார். அதை அனைவரும் ரசிப்பார்கள். நான் மும்பையில் சுற்றித் திரியாத தெருக்களே இல்லை. அந்த அளவிற்கு மும்பை எனக்கு பரிச்சயம். ஆனால் இந்தப் படத்தில் நான் மும்பை போல் வடிவமைக்கப்பட்ட அரங்கத்திற்கு சென்றவுடன் வியந்து போனேன். ஒவ்வொரு சிறிய விசயத்தையும் கலை இயக்குநர் நேர்த்தியாக உருவாக்கி இருந்தார். அவருக்கும் இந்த தருணத்தில் பாராட்டுகளை தெரிவித்துக் கொள்கிறேன்.
இந்த திரைப்படத்தில் என்னுடன் நடித்த நடிகர்களுக்கும், இப்படத்தில் நடித்த அனைத்து நடிகர், நடிகைகளுக்கும், பணியாற்றிய தொழில்நுட்ப கலைஞர்களுக்கும், இந்தப் படத்தை தயாரித்த தயாரிப்பாளர்களுக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். மார்ச் 7ஆம் தேதி ‘ நிறம் மாறும் உலகில்’ வெளியாகிறது. அனைவரும் குடும்பத்தினருடன் திரையரங்கத்திற்கு வருகை தந்து பார்த்து ரசித்து ஆதரவு தர வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன் என்றார்.