பாரதிராஜா – நட்டி கூட்டணியில் உருவாகும் படத்தின் படப்பிடிப்பு நிறைவு!

இயக்குநரும், நடிகருமான பாரதிராஜா, ஒளிப்பதிவாளரும், நடிகருமான நட்டி என்கிற நட்ராஜ், வளர்ந்து வரும் இளம் நட்சத்திர நடிகர் ரியோ ராஜ், நடன இயக்குநரும், நடிகருமான சாண்டி மாஸ்டர் ஆகியோர் முதன்மையான கதாபாத்திரங்களில் நடிக்கும் ‘ நிறம் மாறும் உலகில் ‘ எனும் திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்திருப்பதாக படக் குழுவினர் பிரத்யேக காணொளியை வெளியிட்டு உற்சாகத்துடன் அறிவித்துள்ளனர்.

அறிமுக இயக்குநர் பிரிட்டோ J B இயக்கத்தில் உருவாகி வரும் ‘ நிறம் மாறும் உலகில் ‘ எனும் திரைப்படத்தில் பாரதிராஜா, நட்டி என்கிற நட்ராஜ், ரியோ ராஜ், சாண்டி மாஸ்டர் , விஜி சந்திரசேகர்,  லவ்லின் சந்திரசேகர், நிவாஸ் ஆதித்தன்,  சல்மா, சுரேஷ் மேனன், ‘ஆடுகளம்’ நரேன், மைம் கோபி , வடிவுக்கரசி , விக்னேஷ் காந்த்,  ரிஷிகாந்த்,  கனிகா, ஆதிரா, காவ்யா அறிவுமணி ,துளசி, ஐரா கிருஷ்ணன் , லிசி ஆண்டனி,  நமோ நாராயணன் , சுரேஷ் சக்கரவர்த்தி , ஏகன்,  விஜித்,  ஜீவா சினேகா,  திண்டுக்கல் சரவணன், பாலாஜி தயாளன் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். இவர்களுடன் யோகி பாபு முக்கிய வேடத்தில் நடித்திருக்கிறார். மல்லிகா அர்ஜுன்- மணிகண்ட ராஜா ஆகியோர் இணைந்து ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு தேவ் பிரகாஷ் இசையமைத்திருக்கிறார்.  ராம் -தினேஷ் – சுபேந்தர் -ஆகிய மூவர் கலை இயக்குநர்களாக பணியாற்றி இருக்கும் இந்த திரைப்படத்தின் படத்தொகுப்பு பணிகளை தமிழரசன் ஏற்றிருக்கிறார். ஹைபர் லிங்க் பாணியிலான இந்த திரைப்படத்தை சிக்னேச்சர் புரொடக்ஷன்ஸ் மற்றும் ஜி எஸ் சினிமா இன்டர்நேஷனல் ஆகிய பட நிறுவனங்கள் இணைந்து தயாரித்திருக்கிறது.

நான்கு விதமான வாழ்க்கை – நான்கு கதைகள் – அதை இணைக்கும் ஒரு புள்ளி – என நம் வாழ்வில் உறவுகளின் அவசியத்தை உணர்வுபூர்வமாக விவரிக்கும் கமர்சியல் படமாக இப்படம் உருவாகி இருக்கிறது. மும்பை – வேளாங்கண்ணி – சென்னை-  திருத்தணி – என நான்கு வெவ்வேறு களங்களில் இப்படத்தின் கதை நடைபெறுகிறது. இந்நிலையில் இப்படத்தின் படப்பிடிப்பு முழுவதுமாக நிறைவடைந்திருக்கிறது என பிரத்யேக காணொளியை வெளியிட்டுள்ளனர். இந்த காணொளி மூலம் படத்தின் தரம் சர்வதேச அளவில் இருக்கும் என்ற எதிர்பார்ப்பை உண்டாக்கி இருக்கிறது.

இதனைத் தொடர்ந்து தற்போது  படப்பிடிப்புக்கு பிந்தைய தொழில்நுட்ப பணிகள் தொடங்கி இருக்கிறது என்றும், விரைவில் இப்படத்தின் ட்ரெய்லர் வெளியிடப்படும் என்றும் படக் குழுவினர் தெரிவித்துள்ளனர்.

தனித்துவமான கதை சொல்லும் பாணியில் உருவாகும்  ‘நிறம் மாறும் உலகில்’ எனும் படைப்பில் பாரதிராஜா -நட்டி -ரியோ ராஜ் -சாண்டி மாஸ்டர்- ஆகிய திறமைசாலிகள் ஒன்றிணைந்திருப்பதால் .. இந்த படத்திற்கு ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டிருக்கிறது.