‘தர்ஷன் பிலிம்ஸ்’ சார்பில், ஜோதி சிவா தயாரித்து திரையரங்குகளில் வெளியாகியிருக்கும் திரைப்படம் ‘நிழற்குடை’. இத்திரைப்படத்தில், தேவயானி ராஜகுமாரன் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருக்க, விஜித், கண்மணி மனோகரன் ஆகிய இருவரும் நாயகன் நாயகியாக நடித்திருக்க, இவர்களுடன் இளவரசு, ராஜ்கபூர், மனோஜ் குமார், வடிவுக்கரசி, கவிதா ரவி, அக்ஷரா ஆகியோருடன் நிஹாரிகா, அஹானா உள்ளிட்டோரும் நடித்துள்ளனர்.
தொழில்நுட்பத்துறையில் பணியாற்றும், இருவேறு மதத்தினை சேர்ந்த விஜித்-கண்மணி இருவரும் காதல் திருமணம் செய்து கொள்கின்றனர். இருவருடைய பெற்றோர்களிடம் இருந்து தனித்து வாழ்ந்து வருகின்றனர். இவர்களின் லட்சியக்கனவு, எப்படியாவது அமெரிக்காவில் செட்டில் ஆவது தான்! சுமார் மூன்று வயதுடைய இவர்களுக்கு ஒரு பெண்குழந்தை இருக்கிறது. இருவருமே வேலைக்கு சென்று விடுவதால், இவர்களின் குழந்தையை கவனித்துக்கொள்ள, இலங்கையைச்சேர்ந்த தேவயானியை ஒரு கேர் டேக்கராக நியமிக்கிறார்கள். குழந்தையும் தேவயானியும் நன்கு பழகிவிடுகின்றனர்.
விஜித் – கண்மணி இருவருக்கும் அமெரிக்க செல்வதற்கு வாய்ப்பு கிடைக்கிறது. குழந்தைக்கு வலிப்புநோய் இருப்பதால், விசா கிடைப்பதில் சிக்கல் ஏற்படுமென்பதால், அந்தக்குழந்தையை ஒரு ரெசிடென்சியல் ஸ்கூலில் சேர்த்து விட முடிவு செய்கின்றனர். குழந்தையை பிரிய மனமில்லாமல் பிரிகிறார் தேவயானி. இந்நிலையில் குழந்தை காணாமல் போகிறது. இதன் பிறகு என்ன நடந்தது? என்பதே ‘நிழற்குடை’ படத்தின் கதை.
‘ஜோதிம்மா’ என்ற கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் தேவயானி, தனது அனுபவமிக்க நடிப்பின் மூலம் முழுப்படத்தினையும் தாங்கிப்பிடித்திருக்கிறார். இலங்கைப்போரி உறவினர்களை இழந்தி நிற்கதியான நிலையில், குழந்தை மீது காட்டும் பாசமும், பரிதவிப்பும் சிறந்த நடிப்பினை வெளிப்படுத்துகிறது.
குழந்தையின் அப்பாவாக நடித்திருக்கும் விஜித், மனைவியின் அன்பான கணவனாகவும், மகள் மீது பாசம் காட்டும் சிறந்த அப்பாவாகவும் நன்றாகவே நடித்திருக்கிறார். குழந்தையின் அம்மாவாக நடித்திருக்கும் கண்மணி, கவனிக்கும்படி நடித்திருக்கிறார்.
இவர்களுடன் போலீஸ் இன்ஸ்பெக்டர் இளவரசு, வடிவுக்கரசி, அக்ஷரா, கவிதா ரவி, மனோஜ் குமார், பிரவீன் உள்ளிட்டோரும் குறிப்பிடும்படி நடித்துள்ளனர்.
ஆர்.பி.குருதேவின் ஒளிப்பதிவு, படத்திற்கு பலம்.
இசையமைப்பாளர் நரேன் பாலகுமார் இசை, பின்னணி இசை ஓகே!
இயக்குநர் சிவா ஆறுமுகம், குழந்தை வளர்ப்பு, முதியோர் அரவணைப்பு குறித்து எளிதில் புரிந்து கொள்ளும் வகையில், வெளிநாட்டு மோகத்தால் வாழ்க்கையின் சந்தோஷத்தை இழந்து நிற்கும் இளம் தம்பதிகளுக்கு ஒரு பாடத்தை சொல்லியிருக்கிறார்.