கதைத்திருட்டு வழக்கில் இயக்குனர் சங்கருக்கு பிடிவாரண்ட்.

தமிழ்த்திரையுலகின் பிரம்மாண்ட இயக்குனர் சங்கர். ரஜினிகாந்த், கமல்ஹாசன், விஜய் உள்ளிட்ட முன்னணி நடிகர்களை வைத்து படங்களை இயக்கியவர்.

கடந்த 2010 ஆம் ஆண்டு இயக்குனர் சங்கர் இயக்கத்தில் ரஜினிகாந்த், ஐஸ்வர்யா ராய் இணைந்து நடித்த  “எந்திரன்”  திரைப்படம் வெளியானது. அதை சன் பிக்ச்சர்ஸ் தயாரித்திருந்தது.

அப்போது எந்திரன் படத்தின் கதை, ‘ஜூகிபா’ நாவலில் இருந்து திருடப்பட்டது என சர்ச்சை ஏற்பட்டது. அந்த நாவலை எழுதியவர், நக்கீரன் இதழின்  துணை ஆசிரியரும், கவிஞருமான ‘ஆரூர்’ தமிழ்நாடன்.

‘ஜுகிபா’ நாவல்  1996 ஆம் ஆண்டு “இனிய உதயம்”  என்ற தமிழ் பத்திரிக்கையில் வெளியானது.

கதைத்திருட்டு தொடர்பாக இயக்குனர் சங்கர் மீதான வழக்கு கடந்த 10 வருடங்களுக்கு மேலாக நடந்து வந்தது. இதில் திடீர் திருப்பமாக நேற்று ஜனவரி 29 ஆம் தேதி  இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தது.

அப்போது ‘ ஆருர்’ தமிழ்நாடன் எழும்பூர் பெருநகர 2-வது மாஜிஸ்திரேட் முன்பு நேரில் ஆஜர் ஆனார். ஆனால், இயக்குனர் சங்கர் 10 வருடங்களுக்கு மேலாக நீதிமன்றத்தில் ஒரு முறை கூட ஆஜராகவில்லை.  மேலும் அவர் தரப்பில் எந்தவித மனுவும் தாக்கல் செய்யப்படவில்லை.

அதனால்,  எழும்பூர் பெருநகர 2-வது மாஜிஸ்திரேட், இயக்குனர் சங்கருக்கு பிடிவாரண்ட் பிறப்பித்தார் . மேலும்  பிப்ரவரி மாதம் 19 ஆம் தேதி முதல் இந்த வழக்கு விசாரணை  மீண்டும் தொடங்கும் என்றும் உத்தரவிட்டார்.