‘ஆக்ஸஸ் ஃபிலிம் ஃபேக்டரி’ சார்பில் ஜி.டில்லிபாபு மற்றும் ‘ஹேப்பி ஹை பிக்சர்ஸ்’ சார்பில் அபிநயா செல்வம், அஷோக் செல்வன் ஆகியோர் இணைந்து தயாரித்துள்ள படம், ‘ஒ மை கடவுளே’ அறிமுக இயக்குனர் அஷ்வத் மாரிமுத்து எழுதி இயக்கியுள்ளார்.
அஷோக் செல்வன், ரித்திகா சிங் இணைந்து நடித்திருக்கும் இந்தப்படத்தில் சின்னத்திரை நடிகை வாணி போஜன் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் விஜய்சேதுபதி, ரமேஷ் திலக் இருவரும் கௌரவ வேடத்தில் நடித்துள்ளனர்.
காதலர்களை குறி வைத்து காதலர் தினத்தில் வெளியாகியுள்ள இந்தப்படம் காதலர்களை கவர்ந்துள்ளதா?
அசோக் செல்வன், ரித்திகா சிங், ஷா ரா ஆகிய மூவரும் பள்ளிப் படிக்கும் காலத்திலிருந்தே இணைபிரியாத நண்பர்கள். ஒரு நாள், ‘என்னை கல்யாணம் செய்து கொள்கிறாயா?’ என ரித்திகா சிங் அஷோக் செல்வனிடம் கேட்க.. அவரும் ஓகே சொல்லி விடுகிறார்.
மனதிற்கு நெருக்கமான தோழியை மனைவியாக பார்க்கமுடியாமல் தவிக்கும் அஷோக் செல்வனின் வாழ்க்கையில் அவரது இன்னொரு பள்ளித்தோழி வாணி போஜன் உள்ளே வருகிறார்.
இதனால் அஷோக் செல்வனுக்கும், ரித்திகா சிங்கிற்கும் இடையே எழும் பிரச்சனை கொஞ்சம்.. கொஞ்சமாக விஸ்வரூபமெடுத்து விவாகாரத்து வரை செல்ல… அதன் பின்னர் நடக்கும் அனைத்து விஷயங்களையும் சுவாரஷ்யமான திரைக்கதையாக்கியிருக்கிறார் இயக்குனர் அஷ்வத் மாரிமுத்து.
அஷோக் செல்வன், ரித்திகா சிங், வாணி போஜன் இவர்களுக்கிடையிலான காதல் காட்சிகளில் வரம்பு மீறல் இல்லாதது சிறப்பு. வாய்ப்புகள் இருந்தும் கட்டித்தழுவும் கட்டில் காட்சிகள் இல்லாமல் ஒரு ஆர்கானிக் லவ் ஸ்டோரி.
முதல் இரவின் போது ரித்திகா சிங்கை நெருங்க முடியாமல் தயங்கும் அஷோக் செல்வன் மூலமாக, எல்லா நட்புமே அவ்வளவு எளிதில் காதலாக மலராது. என்பதை அழகாக சொல்லும் இயக்குனர் அஷ்வத் மாரிமுத்து, அந்த நட்பு காதலாக மலரும் காட்சியையும் அழகுபடுத்தி, நட்புக்கும் ,காதலுக்கும் ஒரு சேர மரியாதை செய்திருக்கிறார்.
முதலில் ஒரு சிலக்காட்சிகளில் தொய்வு இருந்தாலும் அடுத்தடுத்த காட்சிகள் சுவாரஷ்யப்படுத்துகின்றன.
ஒரு சில காட்சிகளில் மாதவனை ஞாபகபடுத்தும் அஷோக் செல்வன் க்ளைமாக்ஸில் தூள் பரத்துகிறார். ரித்திகா சிங், வாணிபோஜன் இருவரும் தங்களுடைய பங்கினை சிறப்பாகவே செய்திருக்கிறார்கள். அஷோக்செல்வனின் நண்பராக வரும் ஷாராவின் நடிப்பு பலருக்கு எரிச்சலாகவும் சிலருக்கு சிரிப்பாகவும் இருக்கும்.
‘லவ் கோர்ட்’ டின் கடவுள்களாக விஜய் சேதுபதியும், ரமேஷ் திலக்கும் சூப்பர்.
பிரேக்கப்பான காதலர்கள் இந்தப் படத்தை பார்த்தால் தங்களது காதலை புதுபித்துக் கொள்வார்கள்.