விஷ்ணு விஷாலின் தம்பி, கதாநாயகனாக அறிமுகமாகும் திரைப்படம்!

விஷ்ணு விஷால் ஸ்டுடியோஸ் நிறுவனம் தனது அடுத்த திரைப்படத்தினை, ரோமியோ பிக்சர்ஸ் உடன் இணைந்து வழங்கும், இணைந்து தயாரிக்கவுள்ளதை, பெருமையுடன் அறிவித்துள்ளது. டி கம்பெனி நிறுவனம் இப்படத்தினை இணைத்தயாரிப்பு செய்கிறது.  நடிகர் விஷ்ணு விஷாலின் தம்பி, கதை நாயகனாக அறிமுகமாகும் இப்படத்திற்கு ‘ஓஹோ எந்தன் பேபி’ எனப் பெயரிடப்பட்டுள்ளது.

விஷ்ணு விஷால் ஸ்டுடியோஸ் நிறுவனம் சார்பில் பிரபல நடிகர் விஷ்ணு விஷால்,  ரோமியோ பிக்சர்ஸ் நிறுவனத்தின் திரு. ராகுல் உடன் இணைந்து இப்படத்தை தயாரிக்கிறார்.  மற்றும் டி கம்பெனி நிறுவனத்தின் திரு. கே.வி. துரை இணைத் தயாரிப்பு செய்கிறார்.  இளைஞர்களைக் கவரும் வகையில் கலகலப்பான ரோம் காம் திரைப்படமாக இப்படம் உருவாகவுள்ளது. அமேசான் பிரைமில் மிகவும் பிரபலமான மாடர்ன் லவ் சென்னை என்ற வெப் சீரிஸுக்காக ‘காதல் என்பது கண்ணுலே ஹார்ட் இருக்குற எமோஜி’ எபிஸோடை இயக்கிய, முன்னணி விளம்பரப் பட இயக்குநரும், குணச்சித்திரக் கலைஞருமான கிருஷ்ணகுமார் ராம்குமார் இந்தப் படத்தை இயக்குகிறார்.

நடிகர் ருத்ரா ‘ஓஹோ எந்தன் பேபி’ திரைப்படம் மூலம் நடிகராக அறிமுகமாகிறார். ருத்ரா முன்னதாக விஷ்ணு விஷால் ஸ்டுடியோஸ் நிறுவனத்தில் தயாரிப்பு நிர்வாக பணிகளிலும், கிரியேட்டிவ் டீமிலும் பணிபுரிந்துள்ளார். ஒரு ஒரு நடிகராகத் தனது திறமைகளைக் கொஞ்சம் கொஞ்சமாகக்  கூர்மைப்படுத்திக்கொண்டு, இப்போது  நாயகனாக அவதாரம் எடுத்துள்ளார். பாலிவுட்  நடிகை மிதிலா பால்கர் கதாநாயகியாக இப்படம் மூலம் தமிழ்த்துறையில் கால்பதிக்கிறார். நெட்ஃபிக்ஸ் சீரிஸான லிட்டில் திங்ஸ் மற்றும் கர்வான் மற்றும் திரிபங்கா போன்ற படங்களின் மூலம் பாலிவுட்டில் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தியவர்  மிதிலா என்பது குறிப்பிடத்தக்கது.

எனை நோக்கிப் பாயும் தோட்டா மற்றும் முதல் நீ முடிவும் நீ ஆகிய படங்களில் அற்புதமான  இசையைத் தந்த தர்புகா சிவா ‘ஓஹோ எந்தன் பேபி’ படத்திற்கு இசையமைக்கிறார். அச்சம் என்பது மடமையடா முதல் பல படங்களுக்கு ஒளிப்பதிவு செய்த, டேனி ரேமண்ட் ஒளிப்பதிவு செய்கிறார். பிரணவ் R படத்தொகுப்பு பணிகளை கவனிக்க, ராஜேஷ் கலை இயக்கம் செய்கிறார்.

இப்படத்தின் படப்பிடிப்பு இன்று மாலை படக்குழுவினர் கலந்துகொள்ள, பூஜையுடன் கோலாகலமாகத் துவங்கியது. படக்குழு அடுத்த இரண்டு வாரங்கள், தொடர்ச்சியாக முதல் ஷெட்யூலுக்கான படப்பிடிப்பை நடத்தவுள்ளது. இப்படத்தின் படப்பிடிப்பை சென்னை, கோவா மற்றும் இந்தியாவின் பல இடங்களில் படமாக்கப் படக்குழு திட்டமிடப்பட்டுள்ளது.