ஓம் வெள்ளிமலை – விமர்சனம்!

சித்தர்களுக்கும், சித்தமருத்துவத்துக்கும் வந்த சோதனை!

சூப்பர்ப் கிரியேஷன்ஸ்  ( Superb Creations)  சார்பில் ராஜகோபால் இளங் கோவன் தயாரிப்பில் வெளியாகியிருக்கும் படம், ஓம் வெள்ளிமலை. இப்படத்தை ஓம் விஜய் இயக்கியுள்ளார்.

ஓம் வெள்ளிமலை’ திரைப்படத்தில் முண்டாசுப்பட்டி, காதலும் கடந்து போகும், ரஜினி முருகன், ஜெய் பீம் ஆகிய படங்களில் முக்கிய வேடங்களில் நடித்த ‘சூப்பர் குட்’ சுப்பிரமணி, இருவேறு தோற்றங்களில் கதை நாயகனாக  நடித்திருக்கிறார். வீர சுபாஷ் மற்றும் அஞ்சு கிருஷ்ணா ஆகியோர் முக்கிய  கதாபாத்திரங்களில்  நடித்திருக்கின்றனர்.

சித்தர்களின் தனித்துவத்தையும் அவர்களுடைய மருத்துவத்தின் மகத்துவத்தையும் பெருமை படுத்தும் விதத்தில் உருவாகியிருக்கும் வெள்ளிமலை, திரைப்படம் ரசிகர்களை கவருமா?

மலைகள் சூழ்ந்த வனப்பகுதியில் இருக்கும் கிராமத்தில் காலம் காலமாக வசித்துவரும் சித்த வைத்தியருக்கு அகத்தீசன், போகர் என இரண்டு (சூப்பர் குட் சுப்பிரமணி ) மகன்கள். ஒரு நாள் கிராமத்தில் வசிக்கும் ஒருவருக்கு  போகர், தவறான மருந்து கொடுத்தால் அவர் இறந்து விட்டதாக கிராமத்தினர் குற்றம் சாட்டுகின்றனர். இதனால் போகர் காடுகளுக்குள் போய் ஒளிந்து கொள்கிறார். இந்த சம்பவத்திலிருந்து சித்த மருந்துகளை அவர்களது குடும்பத்தினரிடமிருந்து வாங்கி உபயோகப்படுத்தாமல்  கிராம மக்கள் தவிர்த்து வருகின்றனர்.

வருடங்கள் கடந்த நிலையில் கிராம மக்களுக்கு ஒரு விநோதமான தொற்று நோய் உருவாகிறது. அதனை தொடர்ந்து மக்களில் சிலர் சுருண்டு விழுந்து உயிரை விடுகின்றனர். நோயால் பாதிக்கப்பட்ட மற்றவர்களின் நிலை என்னவானது? கிராம மக்கள் காப்பாற்றப்பட்டார்களா, இல்லையா? என்பது தான் ‘ஓம் வெள்ளிமலை’படத்தின் மீதிக்கதை!

இருவேறு வேடங்களில் நடித்திருக்கும் சூப்பர் குட் சுப்பிரமணியின் நடிப்பில் குறைவில்லை, இவரைப்போலவே வீர சுபாஷ், சுப்பிரமணியின் மகளாக நடித்திருக்கும் அஞ்சு கிருஷ்ணா ஆகியோரும் குறிப்பிடும்படி நடித்திருக்கிறார்கள்.

மணி பெருமாளின் ஒளிப்பதிவும், என்.ஆர்.ரகுநந்தன் இசையும் மட்டுமே படத்தின் பலம்.

ஓம் வெள்ளிமலை படத்தின் இயக்குனர் ஓம் விஜய்யின்  தெளிவற்ற திரைக்கதையும், காட்சியமைப்பும் படத்தின் பெரும் பலவீனம். நவீன மருத்துவத்தை குறை சொல்வதில் மட்டுமே கவனம் செலுத்தியிருக்கிறார். படத்தில் மூலிகை வகைகளின் பெயரோ, அதன் சிறப்பையோ பற்றி  எதுவும் சொல்லாமல், மூலிகை மருத்துவம் தான் சிறந்தது என காற்றில் கத்தி வீசியிருக்கிறார். தான் சொல்ல வந்த விஷயத்தை சொல்லமுடியாமல் திணறியிருக்கிறார்.

‘ஓம் வெள்ளிமலை’ சித்தர்களுக்கும், சித்தமருத்துவத்துக்கும் வந்த சோதனை!