‘திருமலை புரொடக்ஷன்’ சார்பில், கே. கருப்புசாமி தயாரித்திருக்கும் ‘ஒண்டிமுனியும் நல்லபாடனும்’ திரைப்படத்தை, சுகவனம் எழுதி இயக்கியிருக்கிறார். இதில் ‘பரோட்டா’ முருகேசன், கார்த்திகேசன், முருகன், விஜயன், சேனாபதி, சித்ரா, கெளசிகா, தமிழினியன் விகடன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ஒளிப்பதிவு, ஜெ.டி. விமல். இசை, ‘மூடர்கூடம்’ நடராஜன் சங்கரன் (NTR).
ஒரு ஏழைக் கூலி விவசாயியின் நேர்த்திக்கடனும், பண்ணையார்களின் அதிகாரப்போட்டியும் தான் இந்தப்படத்தின் கதை.
‘பரோட்டா’ முருகேசனின் மகன், விஜயன். அவர் சிறுவயதில் உயிருக்கு போராடும் சூழலில் அவரது தந்தை பரோட்டா’ முருகேசன், தன்னுடைய குல தெய்வம் ஒண்டிமுனியிடம், மகன் உயிர் பிழைக்க வேண்டுதல் வைக்கிறார். மகன் பிழைத்துக் கொள்கிறார். பல வருடங்கள் சென்ற நிலையில், தன்ன்னுடைய வேண்டுதலை நிறைவேற்ற ஆட்டுக் கிடாயை பலி கொடுப்பதற்காக தயாராகிறார். ஆனால், அதற்கு முட்டுக்கட்டையாக இருக்கிறார்கள். அந்த ஊரில் இருக்கும் இரண்டு பங்காளிகள். அதாவது, ஒண்டிமுனி இருக்கும் நிலத்திற்காக இருவருக்கும் பிரச்சனை இருந்து வருகிறது. பரோட்டா’ முருகேசன், இரு தரப்பிடமும் கெஞ்சி வருகிறார். முடியவில்லை. இதன் பிறகு என்ன நடந்தது? என்பது தான், ஒண்டிமுனியும் நல்லபாடனும்’.
‘பரோட்டா’ முருகேசன் தான் படத்தின் ஹீரோ. ‘நல்லபாடன்’ கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம், ஒரு ஏழைக் கூலி விவசாயியை கண்முன் நிறுத்துகிறார். இந்தப்படம் அவரது திரையுலக் வாழ்க்கையில் முக்கியமான படமாக இருக்கும். பண்ணையார்கள் தன்னிடம் ஏமாற்றி வேலை வாங்குவது தெரிந்தும், தன்னால் எதுவும் முடியாது. வேறு வழியில்லை. என அவர் காட்டும் முக பாவனை தேர்ந்த நடிப்பின் வெளிப்பாடு. அது போல் அவர்களை எதிர்க்கும் மகனிடம், ‘பண்ணையார்கள் எது செய்தாலும் நல்லது தான் செய்வார்கள்’ என சொல்லும் போது அவர் காட்டும் நடிப்பும் சிறப்பு.
மற்றபடி பங்காளிகளாக நடித்திருக்கும் கார்த்திகேசன், முருகன், பரோட்டா முருகேசனின் மகனாக நடித்திருக்கும் விஜயன், சேனாபதி, சித்ரா, கெளசிகா, தமிழினியன் விகடன், பேரனாக நடித்திருக்கும் சிறுவன் ஆகியோரும் குறிப்பிடும்படி நடித்துள்ளனர்.
ஒளிப்பதிவாளர் ஜெ.டி. விமல் ஒளிப்பதிவும் பின்னணி இசையும் படத்தின் தரத்தை உயர்த்திக் காட்டுகிறது. எழுதி இயக்கியிருக்கும் இயக்குநர் சுகவனம், விவசாயக்கூலிகளிடமிருந்து உழைப்புச் சுரண்டல், அதிகார மோதல், கடவுள் நம்பிக்கை என அனைத்தையும் ஒரே படத்தில் திணிக்க முயற்சித்திருப்பதால், ஆட்டுக்கும், நல்லபாடனுக்கும் இருக்கும் உறவில் போதிய அழுத்தம் இல்லாமல் இருக்கிறது. அதேபோல் சாதியக்காதலை காட்டும் இயக்குநர், அதை ஒரு சார்பாக திணிக்க முயற்சித்து தோற்றுப்போயிருக்கிறார். படத்தின் பெரிய பலம். கொங்குப் பகுதி மக்களின் வட்டார பாஷை.
‘ஒண்டிமுனியும் நல்லபாடனும்’ – விவசாயக்கூலியின் நேர்த்திக்கடன்!