‘அதர்ஸ்’ – விமர்சனம்!

‘கிராண்ட் பிக்சர்ஸ்’ (Grand Pictures) நிறுவனத்தின் தயாரிப்பில், ‘அப் 7 வெஞ்சர்ஸ்’ ஆதிராஜ் புருஷோத்தமன் இணைத் தயாரிப்பில், அபின் ஹரிஹரன் இயக்கத்தில் வெளியாகியிருக்கும் திரைபடம், அதர்ஸ். மெடிக்கல் கிரைம் த்ரில்லரான இத்திரைப்படத்தில், ஆதித்யா மாதவன் நாயகனாக அறிமுகமாக, நாயகியாக கௌரி கிஷன் மற்றும் அஞ்சு குரியன் நடித்துள்ளனர். இவர்களுடன், நண்டு ஜெகன், முனீஷ்காந்த், ஆர். சுந்தர்ராஜன், ஹரிஷ் பெராடி, மாலா பார்வதி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

அரவிந்த் சிங் ஒளிப்பதிவு செய்திருக்க, ஜிப்ரான் இசையமைத்துள்ளார்.

அறிமுக நாயகன் ஆதித்யா மாதவன், ஒரு போலீஸ் அசிஸ்டன்ட் கமிஷனர். இவரது மனைவியான நாயகி கௌரி கிஷன், ஒரு மகப்பேறு மருத்துவர். ஒரு நாள் ஆள் அரவம் இல்லாத இரவு நேரத்தில், ஒரு விபத்தினை, மர்ம ஆசாமி திட்டமிட்டு நடத்துகிறார். அந்த விபத்தினில், அவர் உட்பட 3 இளம்பெண்கள் கொல்லப்படுகிறார்கள். குழப்பமான, இந்த சம்பவத்தை விசாரிக்கும் பொறுப்பினை, ஆதித்யா மாதவன் ஏற்கிறார். கொலையாளியை இவர் நெருங்கும் போது, கௌரி கிஷன் பணிபுரியும் ஆஸ்பத்திரியில், மனித குலத்திற்கு எதிரான ஒரு கொடூர சம்பவம் நடப்பது அம்பலமாகிறது. போலீஸ் விசாரணையின் இறுதியில், திட்டமிட்டு நடத்தப்பட்ட விபத்திற்கும், ஆஸ்பத்திரியில் நடந்த சம்பவத்திற்கும் சம்பந்தம் இருப்பது தெரிய வருகிறது. அது என்ன என்பது தான், ‘அதர்ஸ்’ திரைப்படத்தின் வித்தியாசமான கதை, திரைக்கதை!

‘அதர்ஸ்’ தலைப்பு, அந்த திரைப்படத்தின் கதைக்கு வெகு பொருத்தமாக இருக்கிறது. அதற்காகவே இயக்குநரை பாராட்டலாம். அடத்தின் முதல் காட்சியே திக் திக் திகிலுடன் ஆரம்பிப்பதால், கையிலிருக்கும் செல்போனை அணைத்து விட்டு படத்திற்குள் ஒன்றிவிட தோன்றுகிறது. தன் பிறகு அடுத்தடுத்த காட்சிகள் மர்மமாக நகர்கிறது. நண்டு ஜெகன் கதாபாத்திரம் அறிமுகமானவுடன் மேலும் மர்மமாக நகர்கிறது. அதர்ஸ் ரகசியம் வெளிப்பட்டவுடன் ஒரு வித சோர்வு ஏற்படுவதை தவிர்க்க முடியவில்லை. முக்கியமான அந்த வில்லன் கதாபாத்திரத்தில் நடித்தவர், அதீதமாக நடித்து, அந்த கதாபாத்திரத்தின் தன்மையை சிதைத்து விடுகிறார்.

அறிமுக நாயகன் ஆதித்யா மாதவன், ஒரு இளம் போலீஸ் அசிஸ்டன்ட் கமிஷனர் கதாபாத்திரத்தில் நடித்து, அந்த கதாபாத்திரத்தை வலிமையாக ஆக்கியிருக்கிறார். நடிப்பிலும் என்ன தேவையோ அதை செய்திருக்கிறார். தோற்றம் கச்சிதமாக இருந்தாலும், அந்த கதாபாத்திரம் இயங்கும் விதம் முரணாக இருக்கிறது. அதாவது, காட்சிகளில் நம்பகத்தன்மை இல்லாமல் போகிறது. மற்றபடி, ஆடிப்பாடி டூயட் செய்யவும், அடியாட்களை காற்றில் பறக்க விடவும், நல்ல கதாநாயகன் தமிழ் சினிமாவிற்கு கிடைத்துள்ளார்.

ஆதித்யா மாதவனின் உதவியாளராக அஞ்சு குரியன். போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆக நடித்துள்ளார். கச்சிதமான நடிப்பு.

ஆதித்யா மாதவனின் மனைவியாகவும், மகப்பேறு மருத்துவராகவும் கௌரி கிஷன். அழகாக இருக்கிறார். அழகாகவும் நடித்திருக்கிறார். பாடல் காட்சிகளில், கூடுதல் அழகு.

நண்டு ஜெகன் ஒரு சில காட்சிகளில் நடித்திருக்கிறார். வழக்கமான சேஷ்டைகளை விடுத்து, நடிப்பில் மிரட்டியிருக்கிறார்.

முனீஷ்காந்த், ஆர். சுந்தர்ராஜன், ஹரிஷ் பெராடி, மாலா பார்வதி உள்ளிட்டோரும் குறிப்பிடும்படி நடித்துள்ளனர்.

ஒளிப்பதிவாளர் அரவிந்த் சிங்.  மற்றும் ஜிப்ரானின் பின்னணி இசை. இரண்டுமே, படத்தின் வேகமான நகர்வுக்கு காரணமாக இருக்கிறது.

இயக்குநர் அபின் ஹரிகரன், வித்தியாசமான, மர்மமாக பயணிக்கும் ஒரு கதைக்களத்தை தேர்ந்தெடுத்து, அதில் வெற்றியும் பெற்றுள்ளார். ஆனால் கொலைகளுக்காண காரணம் ஏற்றுக்கொள்ளும் படி இல்லை.

க்ரைம் த்ரில்லர்களை, விரும்ப்பிப் பார்ப்பவர்களுக்கு இந்தப்படம் பிடிக்கும்!