பயோஸ்கோப் ஃபிலிம் ஃப்ரேமர்ஸ் சார்பில் பார்த்திபன் ராதாகிருஷ்ணன் தயாரித்து, எழுதி, இயக்கி, நடித்திருக்கும் திரைப்படம் ஒத்த செருப்பு சைஸ் 7. உலக அளவில் ஒரே ஒரு கதாப்பாத்திரம் மட்டுமே இயங்கும் 12 படங்கள் உண்டு. இத்தனை துறைகளையும் அவரே கையாண்டதால், அதையும் தாண்டிய சிறப்பை இந்த படம் பெற்றிருக்கிறது. சந்தோஷ் நாராயணன் இசையமைக்க, ராம்ஜி ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த படத்தின் அறிமுக விழா மற்றும் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. புதுமைப்பித்தன் பார்த்திபன் நிகழ்த்திய இந்த விழாவில் புதுமைகளை தமிழ் சினிமாவில் புகுத்தும் முயற்சியில் தொடர்ந்து இயங்கும் உலக நாயகன் கமல்ஹாசன், ஹாலிவுட் தரத்தில் தமிழ் சினிமாவிலும் படங்களை கொடுப்பது சாத்தியம் என்பதை நிரூபித்த இயக்குனர் ஷங்கர், திரைக்கதை வித்தகரும், பார்த்திபனின் குருநாதருமான பாக்யராஜ் ஆகியோர் முதன்மை விருந்தினர்களாக கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர்.
1989ல் புதிய பாதையில் இருந்து 30 ஆண்டுகள் ஆகியும், புதுமையான படங்களை கொடுக்க, மிகப்பெரிய முயற்சிகளை தொடர்ந்து செய்து வருகிறார். ஒரு கதாப்பாத்திரம் மட்டுமே நடித்த படம் மாதிரியான உணர்வையே தரவில்லை. அனைத்து துறைகளும் சிறப்பான பங்களிப்பை அளித்திருக்கிறார்கள் என்றார் இயக்குனர் விஜய்.
ஒத்த செருப்பு தலைப்பே ஆர்வத்தை தூண்டுகிறது. இது தான் ஒன் மேன் ஷோ. பார்த்திபன் சாரை ஒன் மேன் ஆர்மி என்றே சொல்லலாம். 25 ஆண்டுகள் கழித்தும் பார்த்திபன் சாரின் தேடல் அளப்பரியது. சினிமாவில் ஆகட்டும், அன்பளிப்பு வழங்குவதாகட்டும் எல்லாவற்றிலும் தனித்துவமானவர். எல்லோருக்கும் தேடித்தேடி, புதுமையாக தனித்துவமான அன்பளிப்புகளை கொடுப்பவர் பார்த்திபன். இசையில் தனித்தன்மையை வளர்த்துக் கொண்டவர் சந்தோஷ் நாராயணன். அவர் இசையை வைத்தே அவர் படம் என்று கண்டுபிடிக்கும் அளவுக்கு வளர்ந்திருக்கிறார். ரசூல் பூக்குட்டி இந்த படத்தில் இருக்கிறார் என்பதுமே இன்னொரு ஆச்சர்யமான, ஆர்வத்தை தூண்டும் விஷயம். படத்தை பார்க்க மிக ஆவலாக இருக்கிறேன் என்றார் இயக்குனர் ஷங்கர்.
இந்த விழாவை பொறுத்தவரை பார்த்திபனை விட எனக்கு தான் இரட்டிப்பு மகிழ்ச்சி. ஏனென்றால் பார்த்திபன் என் சிஷ்யன். சிஷ்யன் என்பதை தாண்டி அவர் குருவை மிஞ்சிய ஒரு சிஷ்யன். 16 வயதினிலே படத்தில் நான் உதவி இயக்குனராக வேலை செய்த போது ஒரு காட்சியில் நான் சொன்ன ஒரு விஷயத்தை ஏற்று, கமல் சார் அப்படியே செய்தார். உதவி இயக்குனர்கள் என்பவர்கள் படத்தின் இயக்குனராக தன்னை நினைத்து வேலை செய்ய வேண்டும். கடமைக்கு வேலை செய்யக் கூடாது என்றார் இயக்குனர் பாக்யராஜ்.
சந்தோஷத்திலேயே மிகப்பெரிய ஒரு சந்தோஷம் மற்றவர்களை சந்தோஷப்படுத்தி பார்ப்பது தான். என்னை சந்தோஷப்படுத்த என் நலம் விரும்பும் அனைவரும் இங்கு வந்திருக்கிறார்கள். கமல் சாரை கவுரவிக்க இந்த டார்ச்லைட் பொருந்திய வெள்ளி செங்கோலை அன்பளிப்பாக அளிக்கிறேன். விஜய், அஜித் படம் என்றால் அதில் ஏதாவது ஒரு ஸ்பெஷல் இருக்கும். என் படத்தில் என்ன ஸ்பெஷல் இருக்கணும் என யோசிப்பேன். இந்த கதையின் கரு 15 வருடங்களுக்கு முன்பு தோன்றியது. அதை இயக்க இப்போது தான் நேரம் அமைந்திருக்கிறது. ராம்ஜியுடன் ஆயிரத்தில் ஒருவன் படத்தின் போதே இணைந்து பணிபுரிய ஆசைப்பட்டேன். இப்போது தான் அது நிகழ்ந்திருக்கிறது. சந்தோஷ் நாராயணன் எனக்காக சிரத்தை எடுத்து இசையை கொடுத்திருக்கிறார். நான் கமல் சாரின் தீவிர ரசிகன். மக்கள் திலகத்திற்கு பிறகு தியாகம் செய்து மக்களுக்காக பணிபுரிய கமல் சார் வந்திருக்கிறார். அவருக்கு நாம் ஆதரவாக இருக்க வேண்டும். கமல் சார் 40 வருடங்களுக்கு முன்பே இந்த மாதிரி ஒருவர் மட்டுமே நடிக்கும் கதையுடன் வந்திருக்கிறார் என்று ஆனந்தா பிக்சர்ஸ் சுரேஷ் சொன்னார். ஆனால், நல்ல வேளையாக இந்த வகை படத்தை முதலில் இயக்கும் வாய்ப்பு எனக்கு அமைந்திருக்கிறது என்றார் இயக்குனர், நடிகர் பார்த்திபன்.
புதிய பாதை படத்தில் நடிக்க என்னை தான் அணுகினார் பார்த்திபன். கால்ஷீட் இல்லாததால் என்னால் அதில் நடிக்க முடியவில்லை, அது ரொம்ப நல்லதாக போய் விட்டது. அதனால் தான் பார்த்திபன் போன்ற ஒரு நல்ல நடிகர் நமக்கு கிடைத்தார். 16 வயதினிலே படத்தில் பாக்யராஜ் நாட்டு வைத்தியராக நடித்திருப்பார், பின்னாளில் தமிழ் சினிமாவுக்கே நாட்டு வைத்தியராக மாறி இருக்கிறார். அவரின் சிஷ்யன் பார்த்திபன் ஒரு கதாபாத்திரம் மட்டுமே நடிக்கும் தனித்துவமான ஒரு தமிழ் படத்தில் நடித்திருக்கிறார். ராபர்ட் ரெட்ஃபோர்ட், டாம் ஹார்டி ஆகியோர் வரிசையில் பார்த்திபன் இணைந்திருப்பது எனக்கு மகிழ்ச்சி. எனக்கு காந்தி வரலாற்று புத்தகத்தை பார்த்திபன் அன்பளிப்பாக வழங்கினார், அதில் இந்த படத்தின் தலைப்புக்கு பொருத்தமாக ஒரு சம்பவம் வரும். ரயில் ஏறும்போது காந்தியடிகளின் ஒரு செருப்பு தவறி விடும், உடனே அடுத்த செருப்பை தூக்கி வீசி விடுவார். யாருக்காவது உபயோகப்படும் என்று. அந்த மாதிரி எனக்கு ஒரு செருப்பு கிடைத்து விட்டது. இன்னொரு செருப்பும் விரைவில் கிடைக்கும். எஸ்பி முத்துராமன் எல்லோர் விழாவையும் தன் விழாவாக எடுத்து செய்வார், அதை பார்த்திபன் தற்போது சிறப்பாக செய்து வருகிறார். ஒத்த செருப்பு வெற்றி பெற்று ஜோடியாக மாறும். இந்த படம் வெற்றிப் படமாக அமையும் எல்லா சாத்தியமும் இருக்கிறது என்றார் உலக நாயகன் கமல்ஹாசன்.
தோஹா ஆசிய தடகள போட்டியில் தங்கம் வென்ற கோமதி மாரிமுத்து அவர்களுக்கு உலக உருண்டையில் தங்க காலணி பதித்த ஒரு அன்பளிப்பை அளித்து மரியாதை செய்தனர் படக்குழுவினர். கமல்ஹாசன் அவர்களுக்கு டார்ச் லைட் பதித்த வெள்ளி செங்கோலை அன்பளிப்பாக வழங்கினார் பார்த்திபன்.
இந்த விழாவில் தயாரிப்பாளர்கள் வெங்கட், செவன்த் சேனல் மாணிக்கம் நாராயணன், எஸ்.ஆர்.பிரபு, இயக்குனர் ராஜேஷ் எம் செல்வா, பாடலாசிரியர் விவேக், ஒளிப்பதிவாளர் ராம்ஜி, ஒலி வடிவமைப்பாளர் ரசூல் பூக்குட்டி, கிருஷ்ணமூர்த்தி, கண்ணதாசன் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.