வெற்றி, தந்தையை கொலை செய்த காரணத்திற்காக சிறை சென்றவர். அவரை காதலிக்கிறார், அக்ஷயா கந்தமுதன். இந்த காதலுக்கு கடும் எதிர்ப்பு தெரிவிக்கிறார், அக்ஷயாவின் தந்தை. இருவரும் வீட்டை விட்டு வெளியேறுகின்றனர்.
ரவுடி முருகன், வீட்டை விட்டு வெளியேறிய தனது தங்கையைத் தேடி அலைகிறார். முருகனின் எதிரிகள் அவரது தங்கையை கடத்தி, பழி வாங்க நினைக்கின்றனர். இதன் பிறகு என்ன நடந்தது? என்பது தான், சஸ்பென்ஸூம் டிவிஸ்டுகளும் நிறைந்த, ‘பகலறியான்’ படத்தின் கதை.
நாயகன் வெற்றிக்கு இறுக்கமான கதாபாத்திரம். அதற்கேற்றபடி, அவர் நடிப்பினை வழங்கியிருக்கிறார். வெற்றி ஹீரோவா? இல்லை வில்லனா? என்பதற்கு க்ளைமாக்ஸிலேயே விடை கிடைக்கிறது. சஸ்பெஸான கேரக்டர். கதாபாத்திரத்தின் தன்மை உணர்ந்து நடித்திருக்கிறார்.
‘சைலண்ட்’ என்ற ரவுடி கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் முருகன், சிறப்பாகவே நடித்திருக்கிறார். இவரது கதாபாத்திர வடிவமைப்பும் நன்றாகவே இருக்கிறது. க்ளைமாக்ஸில், ‘சைகை மொழி’யில் தங்கையுடன் பேசும் காட்சிகளில், சிறந்த நடிப்பினை கொடுத்திருக்கிறார்.
அக்ஷயா கந்தமுதன், வினு பிரியா என, இரண்டு கதாநாயகிகள். இருவருமே குறை சொல்லமுடியாதபடி நடித்துள்ளனர்.
காமெடி நடிகர் சாப்ளின் பாலுவுக்கு வித்தியாசமான கதாபாத்திரம். அதை சரியாக உணர்ந்து நடித்திருக்கிறார்.
இன்ஸ்பெக்டராக நடித்திருக்கும் தீனாவின் கதாபாத்திரத்திம், திரைக்கதைக்கு எந்த விதத்திலும் உதவவில்லை.
ஒளிப்பதிவாளர் அபிலாஷின் ஒளிப்பதிவு படத்தின் பலம்.
விவேக் சரோவின் இசையில் பாடல்களும், பின்னணி இசையும் ஓகே.
படத்தொகுப்பாளர் குரு பிரதீப்பின் பணி பாராட்டுக்குரியது.
ஒரு இரவில் நடக்கும் இருவேறு சம்பவங்கள், ஒன்றுக்கொன்று தொடர்பு ஏற்பட்டு, அதனால் ஏற்படும் நிகழ்வுகள் தான், மொத்த படமும். அதை, எழுதி இயக்கி நடித்திருக்கும் முருகன், ஒரு சஸ்பென்ஸ் நிறைந்த, திரைக்கதைக்கு என்ன தேவையோ அதை செய்திருக்கிறார். இடைவேளை வரை, கதை எதை நோக்கி போகிறது. என்பது தெரியாத்தால், ஒருவித அயற்சி ஏற்படுவதை தவிர்த்திருக்கலாம். படம் முழுவதும் வரும் சில திருப்பங்கள், சபாஷ் போட வைக்கிறது. க்ளைமாக்ஸ் டிவிஸ்ட் பெரிய ஆச்சர்யத்தை ஏற்படுத்தினாலும், அது சீட்டிங் ஸ்க்ரிப்ட்டாகவே இருக்கிறது.
வசனங்கள் சில இடங்களில் பளிச்சிடுகிறது.
திரைக்கதையில் இன்னும் கவனம் செலுத்தி, குழப்பங்கள் ஏற்படுவதை தவிர்த்திருந்தால், ஒரு விறுவிறுப்பான, சுவாரஸ்யமான படமாக அமைந்திருக்கும்.
‘பகலறியான்’ – சஸ்பென்ஸ் பிரியர்களுக்கானது.