கருணாகரன், யோகிபாபு, சிங்கம்புலி, திண்டுக்கல் லியோனி, ராமர், தங்கதுரை ஆகியோரது நடிப்பினில் வெளியாகியிருக்கும் படம், பன்னிக்குட்டி. சமீர்பரத் தயாரித்திருக்கும் இந்தப்படத்தை இயக்கியிருக்கிறார், அனுசரண்.
கருணாகரன் அவரது வாழ்க்கையில் நடக்கும் பல பிரச்சனைகளை எதிர்கொள்ளமுடியாமல் தற்கொலை செய்ய முயற்சிக்கிறார். அவரை ராமரும், தங்கதுரையும் காப்பாற்றி நண்பர்கள் ஆகிறார்கள். அதன்பிறகு ராமர், கருணாகரனின் பிரச்சனைகளுக்கான தீர்வினைத் தேடி சாமியார் திண்டுக்கல் லியோனியிடம் செல்கிறார். அவரின் பரிந்துரையின் படி ஒரு பரிகாரம் செய்கின்றனர். அதன் காரணமாக பிரச்சனைகள் படிப்படியாக குறைகிறது. இந்நிலையில் பைக்கில் சென்று கொண்டிருக்கும் கருணாகரனும், ராமரும் ஒரு பன்னிக்குட்டியின் மீது மோதிவிடுகின்றனர். இதனால் மறுபடியும் பிரச்சனைகள் குறுக்கிடுகிறது. மறுபடியும் சாமியார் லியோனியிடம் செல்கின்றனர். இதன் பிறகு என்ன நடந்தது என்பது தான் பன்னிக்குட்டி படத்தின் கதை.
அசட்டுத்தனமான, அப்பாவி கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார், கருணாகரன். காதல் காட்சிகளிலும், காமெடிக்காட்சிகளிலும் குறை சொல்ல முடியாத அளவில் நடித்திருக்கிறார்.
யோகிபாபு கதாபாத்திரத்திற்கேற்ற நடிப்பினை கொடுத்திருக்கிறார். அவருக்கான காட்சிகள் குறைவாக இருந்தாலும் ஒருசில காட்சிகளில் மனம் விட்டு சிரிக்க வைக்கிறார்.
ராமர், தங்கதுரை, சிங்கம் புலி ஆகியோரது கூட்டணியில் பல கடிக்காமெடிகள். அதில் ஒரு சில மட்டுமே சிரிக்க வைக்கிறது.
மூட நம்பிக்கைகளை உயர்த்திப்பிடிக்கும் ரவி முருகய்யாவின் கதைக்கு, முரட்டு முட்டுக்கொடுத்து இயக்கியிருக்கிறார், அனுசரண்.