‘பராரி’ படத்தின் மூலம் சாதிய படங்களுக்கு ‘பெரிய வெடி’ வைக்கிறார், எழில் பெரியவேடி!

இயக்குநர் ராஜு முருகன் வழங்க, ‘எஸ்.பி சினிமாஸ்’ சார்பில், ஹரி சங்கர் தயாரித்து கதையின் நாயகனாக நடித்திருக்கும் படம், ‘பராரி’. கதை எழுதி இயக்கியிருக்கிறார், எழில் பெரியவேடி. இவர், இயக்குநர் ராஜூமுருகனிடம் உதவி இயக்குநராக பணிபுரிந்தவர். ஷான் ரோல்டன் மற்றும் ஜி.முத்துக்கணி இசையமைத்துள்ளனர். ஒளிப்பதிவு செய்திருக்கிறார், ஸ்ரீதர்.

பராரி படம் குறித்து இயக்குநர் எழில் பெரியவேடி கூறியதாவது..

‘பராரி திரைப்படம், எந்த ஒரு சாதியையும் உயர்த்தவோ தாழ்த்தவோ, சமூக மக்களை உணர்வு பூர்வமாக பிளவு படுத்தும் படமாக இருக்காது. அனைவரின் மனசாட்சியையும் பேச வைக்கும். கேள்வி கேட்க வைக்கும் படமாக இருக்கும்.

திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள உழைக்கும் மக்களான, இருவேறு சமூக மக்களிடையே உருவாக்கப்படும் சாதிய மோதலுக்கான தூண்டுதல், திராவிட அரசியல், கார்ப்பொரேட் அரசியல், பிழைப்புத்தேடி செல்லும் போது அண்டை மாநிலங்களின் மொழி அரசியல் ஆகியவற்றை பேசும் படமாக இருக்கும்.

ஒரே குலசாமியை வணங்குபவர்களிடம் ஏற்றத்தாழ்வு எப்படி உருவாக்கப்படுகிறது? என்பது தான் படத்தின் சாராம்சம்.

எந்த ஒரு சமூகத்திற்கும் ஆதராகவோ, எதிராகவோ பராரி திரைப்படம் இருக்காது. மாறாக இது மனிதத்தை பேசும் படமாக இருக்கும். அனைவரையும் சமமாக பாவித்த தமிழ்ச் சமூகம் இன்று எப்படி இருக்கிறது? என்பதை சொல்லும். இந்த படத்தை பார்த்து ஒரு சமூகம் திருந்திவிட்டது. அல்லது சிலர் திருந்திவிட்டார்கள். என சொல்ல வைக்கும் படமாக இருக்கும்.

பராரி படத்தின் 20 நிமிட க்ளைமாக்ஸ் காட்சிகள், இதுவரை எந்தப்படத்திலும் வரவில்லை. பெரிய தாக்கத்தினை ஏற்படுத்தும். இது, மக்களிடையே ஆரோக்கியமான விவாதத்தினை ஏற்படுத்தும்.

சாதி அரசியலில், இதுவரை யாரும் சொல்லாத விசயங்களை சொல்லியிருக்கிறேன். பராரி படத்திற்கு பிறகு ஒரு சார்பான சாதியப்படங்கள் வராது.! ’ என்றார்.