‘பறந்து போ’ (விமர்சனம்) மிஸ் பண்ணாமல் குடும்பத்துடன் பார்க்கலாம்!

‘செவன் சீஸ்’ மற்றும் ‘செவன் ஹில்ஸ் புரொடக்ஷன்ஸ்’ தயாரித்து, இயக்குநர் ராம் எழுதி, இயக்கியுள்ள திரைப்படம்,  ‘பறந்து போ’. இதில் நடிகர் மிர்ச்சி சிவா, கிரேஸ் ஆண்டனி, அஞ்சலி, சிறுவன் மிதுல் ரியான், சிறுமி ஜெஸ் குக்கு, தியா, ஸ்ரீஜா ரவி,  தேஜாஸ்வினி, அஜூ வர்கீஸ், பாலாஜி சக்திவேல் மற்றும் பலர் நடித்துள்ளனர். பின்னணி இசை – யுவன் ஷங்கர் ராஜா. இசை – சந்தோஷ் தயாநிதி. படத் தொகுப்பு – மதி V.S. ஒளிப்பதிவு – N.K.ஏகாம்பரம்.

இயக்குநர் ராம் இயக்கிய படங்களில் ‘பறந்து போ’ திரைப்படம், அவருக்கும் தமிழ் சினிமாவிற்கும் முக்கியமான படமாக இருக்கும். சிறந்த எழுத்து, இயக்கம். இதில் இடம்பெற்ற அனைத்து கதாபாத்திரங்களுமே நேர்மறையானவை. முற்றிலும் வணிகமயமாகிவிட்ட உலகில், வசதிகளுக்காக ஓய்வில்லாமல் ஓடிக்கொண்டிருக்கும் நியூக்ளியர் குடும்பம், கூகுளுக்குள் குறுகிவிட்ட சிறுவனின் நெகிழ்ச்சியான, மகிழ்ச்சியான கதைதான் ‘பறந்து போ’.

காதலித்து திருமணம் செய்து கொண்ட (மிர்ச்சி சிவா) கோகுல் –  (கிரேஸ் ஆண்டனி) குளோரி. தம்பதியினரின் மகன் (மிதுல் ரியான்) அன்பு. தங்களின் வசதிக்கு மீறிய வகையில் உயர்தரமான தனியார் பள்ளி, விளையாட்டுப்பொருடகள், உடைகள் என மகனை வளர்த்து வருகிறார்கள். அப்பா, அம்மா இருவரும். ஒரு கட்டத்திஅல் கடன் துரத்த… மகனுடன் ஓடி ஒளிகிறார். கோகுல். அப்போது அவர்கள் பார்க்கும் சமூகம், சந்தோஷம் மகனின் அனுபவமே திரைக்கதை.

அன்புவாக, 8 வயதுக்கேற்ற சிறுவனின் சுட்டித்தனதுடன் நடித்திருக்கும் மிதுல் ரியான், அனைவரையும் எளிதில் ஈர்த்து விடுகிறான். கூகுளின் வழிகாட்டுதல்களால் அன்பு காட்டும் பெரிய மனுஷத்தனமான பேச்சினையும் ரசிக்கமுடிகிறது. இயக்குநர் ராமின் அழுத்தமான  எழுத்திற்கு அட்டகாசமான நடிப்பினை கொடுத்திருக்கிறான்.

அடாவடி சுட்டிச்சிறுவனை அடிக்க முடியாமல், அவன் கேட்கும் நியாயமான காரணங்களுக்கு விழி பிதுங்கி நிற்பவராகவும், வழக்கமான தனது ஒன்லைன் பஞ்சின் மூலமாகவும், மிர்ச்சி சிவா அடித்து விளையாடியிருக்கிறார். போன் பண்ணும் கடன்காரனிடம் ‘அப்புறம் பேசுறேன்’. என்பதும், மரத்திலிருந்து கீழே இறங்க முடியாமல் தவிக்கும் காட்சி உட்பட, பல காட்சிகளில் குபீரென சிரிக்க வைக்கிறார்.

மிர்ச்சி சிவா மனைவியாக நடித்திருக்கும் மலையாள நடிகை கிரேஸ் ஆண்டனி யதார்த்தமான, அலட்டலில்லாத நடிப்பின் மூலம் ரசிக்க வைக்கிறார். மகனுடனும், கணவனுடனும் அமைதியாக பேசி அறிவுரை சொல்லும் காட்சி, இரவில் தனியாக நடந்து வரும் காட்சி, பணப்பெட்டி காணாமல் போகும் காட்சி, தங்கையை நேரில் பார்க்கும் காட்சி உட்பட பல காட்சிகளில் நெகிழ்ச்சி ஏற்படுத்திச் கண்கலங்க வைத்து விடுகிறார். கணவனை ‘சாத்தானே’ என செல்லமாக அழைக்கும்போதும், க்ளைமாக்ஸ் காட்சியிலும் சிரிக்க வைக்கிறார்.

அஞ்சலி, நடித்த சில காட்சிகளில் தன்னுடைய இருப்பினை அழுத்தமாக பதித்து விடுகிறார். அஞ்சலிக்கும், மிர்ச்சி சிவாவுக்கும் இருக்கும் ‘சூரியகாந்தி’ பூ காட்சி, அப்பழுக்கற்ற அழகான காட்சி!

அஞ்சலியின் கணவராக நடித்திருக்கிறார், அஜு வர்கீஸ்.

மிர்ச்சி சிவா, அஞ்சலி, அஜு வர்கீஸ் ஆகியோர் சம்பந்தப்பட்ட காட்சிகள் மிகச்சிறப்பாக படமாக்கப்பட்டிருக்கிறது.

பாலாஜி சக்திவேல், ஸ்ரீஜா ரவி ,விஜய் யேசுதாஸ், குளோரியின் கடையில் வேலை செய்யும்  பெண், ஆதரவற்ற பெரியவரான எம்ப்பெரெர், என படத்தில் நடித்த அனைவருமே சிறப்பாகவே நடித்திருக்கிறார்கள்.

ஒளிப்பதிவாளர்  ஏகாம்பரத்தின் ஒளிப்பதிவும், யுவன் சங்கர் ராஜாவின் பின்னணி இசையும் மிக சிறாப்பாக இருக்கிறது.

சந்தோஷ் தயாநிதியின் இசையில் அத்தனை பாடல்களும், மதன் கார்க்கி எழுதிய பாடல் வரிகளும் கேட்கும் வண்ணம் இருக்கிறது.

குழந்தைகள் உலகம் எப்படி இருக்க வேண்டும். அவர்களின் உண்மையான, நியாயமான ஆசை என்ன என்பதையும், இந்தப்படம் சிறப்பாக சொல்கிறது.

படத்தின் பெரிய வெற்றி நம்பும்படியாக காட்சியமைப்பு. ஆனால், க்ளைமாக்ஸில் ஆஸ்துமா நோயாளியான (கிரேஸ் ஆண்டனி) குளோரி, இன்ஹேலரை தலையை சுற்றி துக்கி எறியும் காட்சி ஏற்றுகொள்ள முடியாத காட்சி!

‘பறந்து போ’ – மிஸ் பண்ணாமல் குடும்பத்துடன் பார்க்கலாம்!