இன்றைய திரையுலகச் சூழலில் ஹாரர் படங்களுக்கு ஒரு குறைந்தபட்ச வணிக உத்திரவாதம் உண்டு. அந்த வகை நம்பிக்கையில் ‘பார்க்’ என்கிற திரைப்படம் உருவாகி இருக்கிறது. இப்படத்தை E.K.முருகன் இயக்கியுள்ளார் .இவர் இயக்குநர் ஏ. வெங்கடேஷிடம் உதவி இயக்குநராக இருந்து சினிமா கற்றவர்.அக்ஷயா மூவி மேக்கர்ஸ் சார்பாக லயன் E.நடராஜ் பார்க் படத்தைத் தயாரித்துள்ளார்.இவர் தயாரிக்கும் முதல் படம் இது .சினிமா மீதான காதல்தான் அவரை ஒரு தயாரிப்பாளராக்கியுள்ளது.
இப்படத்தில் கதாநாயகனாகச் சமீபத்தில் வெளியாகி வெற்றி பெற்ற ‘ஒரு நொடி’ படத்தின் கதாநாயகன் தமன் குமார் நடித்துள்ளார். கதாநாயகியாக ஸ்வேதா டோரதி நடித்துள்ளார். பிரதான வில்லனாக யோகிராம் நடித்துள்ளார்.கதாநாயகியின் தந்தையாகத் தயாரிப்பாளர் லயன் ஈ.நடராஜ் நடித்துள்ளார்.இவர்களைத் தவிர காமெடியில் கலக்கி கொண்டிருக்கும் பிளாக் பாண்டி, ரஞ்சனா நாச்சியார், கராத்தே ராஜா மற்றும் பலர் நடித்துள்ளனர்.
திருவண்ணாமலையில் ஒரு பார்க் அதாவது ஒரு பூங்காவில் நடைபெறும் கதையாக இது உருவாக்கப்பட்டுள்ளது. இதற்கான படப்பிடிப்பு திருவண்ணாமலை மற்றும் அதன் சுற்றுப்புற ஊர்களில் நடந்துள்ளது.
படம் பற்றி இயக்குநர் ஈ.கே. முருகன் பேசும்போது,
“இது ஒரு சஸ்பென்ஸ் ஹாரர் காமெடி கலந்த திரில்லர் என்ற வகையில் உருவாகியுள்ளது. இந்தப் படத்தின் கதையைத் தயாரிப்பாளரிடம் கூறிய போது நான் சொன்னேன். படத்தின் முதல் பாதி வயிறு வலிக்கச் சிரிக்க வைக்கும்; இரண்டாவது பாதி இதயம் வலிக்கப் பயமுறுத்தும் என்றேன்.அதன்படி கதையையும் சொன்னேன் அவருக்குப் பிடித்திருந்தது.
அவருக்கு சினிமா மீது காதல் உண்டு. எனவே இந்தப் படத்தைத் தயாரிக்க முன் வந்தார். சரியாகத் திட்டமிட்டு 36 நாட்களில் படப்பிடிப்பை நடத்தி முடித்து, படத்தை நிறைவு செய்திருக்கிறோம். எத்தனையோ பேய்ப் படங்களைப் பார்த்திருக்கிறோம். அதில் பேயை ஓட்டுவதற்கு ஏதாவது ஒரு மதத்தைச் சார்ந்த சாமியார்கள் வருவது போல் தான் காட்டுவார்கள். ஆனால் இந்தப் படத்தில்தான் எந்த மதத்தைச் சார்ந்தவரும் பேய் ஓட்ட வரவில்லை .வேறொரு முறையில் அந்தப் பேயை ஓட்டுவதாகக் காட்சிகள் இடம் பெற்றுள்ளன. இது வேறு எந்தப் படத்திலும் யாரும் சிந்திக்காதது என்று நான் சொல்வேன்.
அண்மையில் வெற்றி பெற்ற ஒரு நொடி படத்தில் நடித்துள்ள தமன்குமார் இதில் நாயகனாக நடித்திருக்கிறார். மிகச் சிறப்பாக நடித்திருக்கிறார் .அதேபோல் சமீபத்தில் வெளிவந்த லாந்தர் படத்தில் நாயகியாக நடித்த ஸ்வேதா டோரத்தி நாயகியாக நடித்துள்ளார்.அதேபோல் அண்மை வெற்றிப் படமான கருடன் படத்தில் வில்லனாக நடித்த யோகிராம் இந்தப் படத்தில் வில்லனாக நடித்துள்ளார். இப்படத்தில் பாடகி சுசித்ரா பாடிய பாடலுக்கு ராபர்ட் மாஸ்டர் நடனம் அமைத்துள்ளார்.இப்படி அண்மைக் காலங்களில் பல வெற்றிப் படங்களில் இடம் பெற்றவர்கள் ,ரசிகர்கள் மத்தியில் முகமறிந்தவர்களாகப் பரிச்சயப்பட்டவர்களை நடிக்க வைத்திருக்கிறோம். ஹாரர் படங்களுக்கு என்றும் வரவேற்பு இருக்கும். முதலீடு செய்யும் தயாரிப்பாளரையும் காப்பாற்றி விடும்.எனவே இந்த வகைப் படத்தை எடுக்கத் தீர்மானித்து முடித்தோம். இப்படம் நிச்சயம் ரசிகர்களுக்குப் பிடிக்கும் என்ற நம்பிக்கையோடு இருக்கிறோம். ஆகஸ்டில் இப்படத்தை வெளியிடுவதாகத் திட்டமிட்டு இருக்கிறோம்” என்றார்.
படத்திற்கு ஒளிப்பதிவு பாண்டியன் குப்பன். இவர் ஒளிப்பதிவாளர் வெற்றியின் உதவியாளர். இசை ஹமரா சி.வி,படத்தொகுப்பு குரு சூர்யா, நடனம் ராபர்ட் மாஸ்டர் மற்றும் சுரேஷ் சித், கலை இயக்கம் ஆர் வெங்கடேஷ், பாடல்கள் நா. ராசா, ஸ்டண்ட் எஸ் .ஆர் .ஹரி முருகன், தயாரிப்பு நிர்வாகி கே. எஸ் சங்கர், உடைகள் ஜி. வீரபாபு, ஒப்பனை ஷேக் பாட்ஷா, நிர்வாகத் தயாரிப்பாளர் எம். அருள் ,இணைத் தயாரிப்பாளர் நா .ராசா., தயாரிப்பு லயன் ஈ. நடராஜ்.
இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை இசையமைப்பாளரும் நடிகருமான ஜீ.வி. பிரகாஷ் குமார் வெளியிட்டார். படத்தின் பர்ஸ்ட் லுக் !பார்த்து படக் குழுவினரை வாழ்த்தினார்.