பரோல் – விமர்சனம்!

இளம் வயதிலேயே கணவனை இழந்த ஜானகி சுரேஷ், தன்னுடைய மகன்கள் லிங்கா , ஆர்.எஸ்.கார்த்திக் இருவருடனும் வசித்து வருகிறார். ஜானகி சுரேஷை, பலாத்காரம் செய்ய முற்படும் ஒருவரை மூத்த மகன் லிங்கா கொலை செய்ய, அவர் சிறுவர் சீர்திருத்த பள்ளியில் (சிறுவர் சிறை) அடைக்கப்படுகிறார். அங்கே பல துன்பங்களுக்கு ஆளாகிறார். அதனால் சில கொலைகளையும் செய்கிறார். தண்டனைக் காலம் முடிந்து வெளியே வரும் அவருக்கு வேலை கொடுக்க யாரும் முன் வரவில்லை. அப்போது கூலிக்கு சில கொலைகளை செய்கிறார். மீண்டும் சிறைக்கு செல்லும் அவரை வெளியே கொண்டுவர அவருடைய அம்மா முயற்சி செய்கிறார். இதை அவருடைய தம்பி ஆர்.எஸ்.கார்த்திக் தடுக்கிறார். இதன் பிறகு என்ன நடந்தது என்பது தான், ‘பரோல்’ படத்தின் கதை.

கால காலமாக தமிழக மாவட்டங்களில், சினிமாக்காரர்களிடம் சிக்கி தவிக்கும் இரண்டு மாவட்டங்கள், மதுரை மற்றும் சென்னை (வட சென்னை ). எதார்தத்தை சொல்கிறோம். வாழ்வியலை சொல்கிறோம். என்கிற பெயரில் இங்கு வாழும் மக்களுக்கு மிகப்பெரும் அவப்பெயரையே ‘முத்திரை’ குத்தி வருகிறார்கள். கெட்ட வார்த்தை பேசுபவர்கள், அழுக்கானவர்கள், கூலிப்படையினர் என்றால், அது வடசென்னை. முரட்டுத்தனமான முட்டாள்கள் என்றால், அது மதுரைக்காரர்கள். இன்னும் எத்தனை படத்தில், இந்த அபத்தங்கள் தொடரப் போகிறதோ?

அதையே பரோல் படத்தின் இயக்குனர் துவாரக் ராஜாவும் செய்திருக்கிறார். முதன்மை கதாபாத்திரங்களாக நடித்திருக்கும் லிங்கா, ஆர்.எஸ்.கார்த்திக் இருவரும் கதாபாத்திரத்திற்கேற்றபடி நடித்திருக்கிறார்கள். சில இடங்களில் ஓவராக்டிங்!

கதாநாயகிகளாக நடித்திருக்கும் கல்பிக்கா கணேஷ்  மற்றும் மோனிஷா முரளி இருவரும் கொடுத்த வேலையை செய்திருக்கிறார்கள்.

அம்மாவாக நடித்திருக்கும் ஜானகி  சுரேஷின் நடிப்பு ஒகே!

வழக்கறிஞராக நடித்திருக்கும் வினோதி  சிறப்பான நடிப்பு!

சினிமாக்காரர்களின் வழக்கமான அதே வடசென்னை டெம்ப்ளேட்டில், குழப்பமான திரைக்கதையில் வந்திருக்கிறது,  ‘பரோல்’.