இயக்குநர் கோ.தனபாலன் இயக்கத்தில் நிஷாந்த் ரூஷோ, விவேக் பிரசன்னா, காயத்திரி ஐயர், வினோத் சாகர், அருள் சங்கர், கோடங்கி வடிவேல் உள்ளிட்ட பலர் நடித்திருக்கும் திரைப்படம் ‘பருந்தாகுது ஊர்க்குருவி’.
பிரபல நடிகை யாமினி (காயத்ரி ஐயர்). அவரது கணவர் மாறன் (விவேக் பிரசன்னா). இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டவர்கள். நடிகை யாமினி மீது பாலியல் மோசடி குற்றச்சாட்டு சுமத்தப்படுகிறது. ஆனால் அதை மீடியா முன்பாக மறுக்கிறார். அதன் பிறகு தனது கணவரை ஊட்டியின் வனப் பகுதிக்குள் சென்று சில நாட்கள் தலைமறைவாக இருக்கும்படி அனுப்பி வைக்கிறார். வனப்பகுதிக்குள் இருக்கும் அவரை ஒரு கும்பல் கடுமையாக தாக்குகிறது.
அதைத்தொடர்ந்து காட்டுப்பகுதிக்குள் ஒரு ஆணின் பிணம் கிடப்பதாக போலீஸ் ஸ்டேஷனுக்கு தகவல் கிடைக்கிறது. இதை விசாரிப்பதற்கு, ஊட்டியின் பிரபல பெட்டி கேஸ் திருடன் ஆதியுடன் (நிஷாந்த் ரூசோ), சப் இன்ஸ்பெக்டர் போஸ் (கோடங்கி வடிவேலு) செல்கிறார். அப்போது தனக்கு அடிக்கடி தொல்லை கொடுத்த, பெட்டி கேஸ் திருடன் ஆதியை, அங்கே கிடக்கும் பிணத்துடன் சேர்த்து கை விலங்கிடுகிறார். பயத்தில் அலறும் ஆதியின் கூக்குரலை கண்டு கொள்ளாமல் போன் பேசி விட்டு திரும்பி வரும் சப் இன்ஸ்பெக்டர் போஸ், பிணத்தையும், ஆதியையும் காணாமல் திகைக்கிறார். இதன் பிறகு நடக்கும் சமாச்சாரங்களே, ‘பருந்தாகுது ஊர்க்குருவி’திரைப்படத்தின் கதை.
பெட்டி கேஸ் திருடன் ஆதியாக நடித்திருக்கும் நிஷாந்த் ரூசோ, கதாபத்திரத்தின் தன்மை அறிந்து நடிக்கவில்லை! சில இடங்களில் அவரது நடிப்பு மிகையாக இருக்கிறது. சண்டைக்காட்சிகளில் நன்றாக நடித்திருக்கிறார். படம் முழுவதும் விவேக் பிரசன்னாவை தூக்கி சுமந்துள்ளார்.
காயத்ரி ஐயர் அவரது கதாபாத்திரத்திற்கு கச்சிதமாக பொருந்துகிறார். நன்றாகவே நடித்திருக்கிறார்.
விவேக் பிரசன்னா உயிர் பயத்துடன் ஓடித் தப்பிக்கும் காட்சிகளில் நன்றாகவே நடித்திருக்கிறார்.
போலீஸ் இன்ஸ்பெக்டராக நடித்திருக்கும் வினோத் சாகர், ஒகே!
சப்-இன்ஸ்பெக்டராக நடித்திருக்கும் கோடங்கி வடிவேலு, சிறப்பாக நடித்திருக்கிறார். தனக்கான வசனத்தை அவரே எழுதியிருப்பது போல் தெரிகிறது. அவர் வசனம் பேசும் விதம் எதார்த்தமாக இருக்கிறது. இவரும் நிஷாந்த் ரூசோவும் சேர்ந்து நடித்துள்ள காட்சிகள் ரசனையானவை. ஒரு சில்லறைத் திருடனுக்கும் ஸ்டேஷனுக்கும் உள்ள உறவை சிறப்பாக படமாக்கியிருக்கிறார், இயக்குனர் கோ.தனபாலன்.
ஒளிப்பதிவாளர் அஷ்வின் நோயலின் ஒளிப்பதிவும், இசையமைப்பாளர் ரெஞ்சித் உன்னியின் பின்னணி இசையும் ஒகே!
ஓம் பிரகாஷ் அமைத்திருக்கும் சண்டைக்காட்சிகள், பெரும் பலவீனம்! குறிப்பாக, தனியாக இருக்கும் விவேக் பிரசன்னாவை எளிதாக தாக்க வாய்ப்பிருந்தும், மறைந்து இருந்து தாக்குவது கேலிக்கூத்தாக இருக்கிறது. மறைந்து இருந்து தாக்க அங்கே எந்த அவசியமும் இல்லாத போது எதற்காக இந்த காட்சியமைப்பு!?
நீண்டநேரமாக உயிருக்கு போராடும் விவேக் பிரசன்னாவின் காட்சியும் கேலிக்கு உட்பட்டவையே!
மொத்தத்தில், ஏமாற்றமே!