‘பத்து தல’ விமர்சனம்!

ஒபிலி என். கிருஷ்ணா இயக்கத்தில் சிலம்பரசன்TR, கௌதம் கார்த்திக், கௌதம் மேனன்,ப்ரியா பவானி ஷங்கர் மற்றும் ஒரு பாடலுக்கு ஸ்பெஷல் அப்பியரன்ஸ் தந்திருக்கும் நடிகை சாயீஷா  உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். இப்படத்தை ‘ஸ்டூடியோ கிரீன்’ சார்பில் ஞானவேல்ராஜா, ‘பென் ஸ்டூடியோஸ்’ உடன் இணைந்து தயாரித்துள்ளார்.

கன்னடத்தில் வெளியான ‘மஃப்டி’ படத்தின் ரீமேக்கே ‘பத்து தல’. எப்படி இருக்கிறது?

கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்த, ஏஜிஆர் என்றழைக்கப்படும் ஏஜி ராகவன், கனிமவள கொள்ளையில் முடிசூடா மன்னன்.  அவர், கனிம வள கொள்ளை தடையின்றி நடக்க, தனக்கு வேண்டிய அரசை தானே நிர்மானிக்கும், சக்தி படைத்தவர்.

நேர்மையான சில போலீஸ் அதிகாரிகள் ஸ்பெஷல் டீம் அமைத்து, ஏஜிஆரை தகுந்த ஆதாரங்களுடன் பிடிப்பதற்கு, முயற்சி செய்கின்றனர். அந்த ஸ்பெஷல் டீமை சேர்ந்த கௌதம் கார்த்திக், ஏஜிஆரின் வட்டத்திற்குள் ஊடுருவுகிறார். இதை தெரிந்து கொண்ட ஏஜிஆர், கௌதம் கார்த்திக்கை என்ன செய்கிறார்? என்பது தான், ‘பத்து தல’ படத்தின் கதை.

படத்தின் முதல் பாதியில், விறுவிறுப்பான கௌதம் கார்த்திக் சம்பந்தபட்ட காட்சிகளோடு, கனிமவள மாஃபியா மன்னன் ஏஜிஆரின் பில்டப்புகள் பற்றிய வசனங்களுடன் பயணிக்கும் திரைக்கதையில், ஓரிரு காட்சிகளில் இடம் பெறுகிறார், சிலம்பரசன்TR.  கௌதம் கார்த்திக், கல்லூரி மாணவராக ப்ரியா பவானி ஷங்கருடனான காதல் காட்சிகளிலும், ஆக்‌ஷன் காட்சிகளிலும் இரு வேறுபட்ட நடிப்பின் மூலம், ரசிகர்களின் மனதில் இடம் பெற்று விடுகிறார்.

கௌதம் கார்த்திக்கும், சாயீஷாவும் ஆடும் ‘ராவடி’ பாடலில் மொத்த தியேட்டரும் ஆடுகிறது. அதிலும் பாடலின் நடுவே 25 செகன்டுகள் ஒரே ஷாட்டில் பலவித மூவ்மெண்ட்ஸ் போட்டு ரசிகர்களை வாய்பிளக்க வைக்கிறார். டான்ஸ் மாஸ்டர் ப்ருந்தா அமைத்த மூவ்மெண்ட்ஸ்களை அசால்ட் பண்ணிவிட்டார். சாயிஷா நல்ல நடிகை, நல்ல டான்ஸர். பாராட்டுக்கள்.

ஏஜிஆர் கதாபாத்திரத்தை சிறப்பாக செய்திருக்கிறார், சிலம்பரசன்TR. அலட்டலில்லாத நடிப்பின் மூலம் ரசிகர்களை எளிதில் கவர்ந்து விடுகிறார். அவர் மாஸாக நடந்து வரும் காட்சிகளில் அவரது ரசிகர்கள் விசிலடித்து ஆரவாரம் செய்வார்கள். இரண்டாம் பாதி முழுவதும் படத்தினை தனது ஆளுகையின் கீழ் கொண்டுவந்து விடுகிறார். அண்ணன், தங்கை செண்டிமென்ட் காட்சியில் பெண் ரசிகைகளின் கண்களில் கண்ணீர் வரும்! க்ளைமாக்ஸ் காட்சியில் நடக்கும் ஃபைட் ஆக்‌ஷன் பிரியர்களுக்கான ஸ்பெஷல்!

கௌதம் மேனன், ஒரு சில காட்சிகளில் மட்டும் நடித்துள்ளார். தன்னுடைய உதவியாளரை சிலையால் அடித்துக் கொள்ளும் காட்சியில், ரசிகர்களை பீதியில் ஆழ்த்துகிறார்.

சிலம்பரசன்TR ன் தங்கையாக நடித்துள்ள அனு சித்தாரா, அவருடைய வலது கையாக நடித்திருக்கும் கலையரசன், சந்தோஷ் பிரதாப், மது குருசாமி, டீஜே அருணாச்சலம், ரெடின் கிங்ஸ்லி, கண்ணன் பொன்னையா, செண்ட்ராயன், ஜோ மல்லூரி அனைவருமே குறை சொல்ல முடியாத அளவிற்கு நடித்துள்ளனர்.

ஒளிப்பதிவாளர் ஃபரூக் ஜே.பாஷாவின் ஒளிப்பதிவு சிறப்பாக இருக்கிறது. ‘ராவடி’ பாடலில் சாயீஷாவின் மின்னல் வேக நடனத்தை, கச்சிதமாக படம் பிடித்திருக்கிறார். ஆக்‌ஷன் காட்சிகளை அட்டகாசமாக படம் பிடித்திருக்கிறார்.

ஏஆர் ரஹ்மான் இசையில் பாடல்கள் ஏற்கனவே ஹிட்டடித்து விட்டன. ‘நினைவிருக்கா’ பாடல் திரைக்கதையின் ஊடே சரியாக பொருத்தப்பட்டுள்ளது. பின்னணி இசை, இன்னும் கொஞ்சம் நன்றாக இருந்திருக்கலாம்.

க்ளைமாக்ஸ் சண்டைக் காட்சியையும், கலையரசன் போலீஸிடம் மாட்டும் காட்சியையும் இன்னும் கவனமாக எடுத்திருக்கலாம். இந்தக் காட்சிகள் நம்பகத் தன்மையை இழக்கிறது. குறிப்பாக, பில்டப் செய்யும் கலையரசன் வீணாக சாவது, ஏற்க முடியாத காட்சி!

லாஜிக்குகளை மறந்து, இயக்குநர் ஒபிலி என். கிருஷ்ணா சாமார்த்தியமாக சில காட்சிகளை தவிர்த்து, சில காட்சிகளை சேர்த்து ரசிக்கும் படி இயக்கியிருக்கிறார்.

‘பத்து தல’ ஆக்‌ஷன் பிரியர்களுக்கான படம்!