பட்டத்து அரசன் – விமர்சனம்!

லைகா புரொடக்‌ஷன்ஸ் சார்பில் சுபாஸ்கரன் தயாரிப்பில் வெளியாகியிருக்கும் படம் ‘பட்டத்து அரசன்’. இயக்குநர் ஏ.சற்குணம் கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கியிருக்கும் இப்படத்தில் அதர்வா நாயகனாக நடித்திருக்க, அவருக்கு ஜோடியாக ஆஷிகா ரங்கநாத் நடித்திருக்கிறார். இவர்களுடன் ராஜ்கிரண், ராதிகா சரத்குமார், செந்தி, ஜானகி, சிந்து, ஜெயப்பிரகாஷ், ஆர்.கே.சுரேஷ், துரை சுதாகர், சிங்கம் புலி, ராஜ் அய்யப்பா, பால சரவணன், ஜி.எம்.குமார், ரவி காளே, ஷத்ரு உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.

கபடி விளையாட்டில் அசகாய சூரன், ராஜ்கிரண். இவருக்கு ஊரின் நடுவே சிலை வைத்து அவரையும் அவரது குடும்பத்தினரையும் கொண்டாடி வருகின்றனர் ஊர் மக்கள். ராஜ்கிரண் அவரது இளைய தாரத்தின் மகனான ஆர்.கே.சுரேஷை ஒரு கபடி போட்டிக்கு விளையாட அனுப்பி வைக்கிறார். அந்த போட்டியில் எதிர்பாரத விதமாக ஆர்..கே.சுரேஷ் உயிரை இழக்கிறார். இதனால் கோபம் கொள்ளும் ஆர்.கே.சுரேஷின் மனைவி ராதிகா சரத்குமார் தனது மகன், சிறுவயது அதர்வாவை கூட்டிக்கொண்டு, சொத்தையும் பிரித்து வாங்கிச் செல்கிறார். இதனால் கோபம் கொள்ளும் ராஜ்கிரண் குடும்பம் அவர்களை ஒதுக்கி வைக்கிறது.

இந்நிலையில் கபடி போட்டி ஒன்றில் சொந்த ஊருக்கு துரோகம் செய்ததால் ராஜ்கிரண் குடும்பத்தை ரவிகாளே தலைமையில் மொத்த ஊரும் ஒதுக்கி வைக்கின்றனர். அப்படி அவர் ஊருக்கு என்ன துரோகம் செய்தார்? அதர்வா குடும்பமும், ராஜ்கிரண் குடும்பமும் இணைந்ததா? என்பதே பட்டத்து அரசன் படத்தின் கதை.

கிராமத்து இளைஞனாக அதர்வா, இயக்குனரின் விருப்பதிற்கேற்ப நடித்திருக்கிறார்! காதல் காட்சிகளிலும், ராஜ்கிரணுடனான சென்டிமென்ட் காட்சிகளிலும் சிறப்பாக உணர்வினை வெளிப்படுத்துகிறார்.

வயதான கபடி விளையாட்டு வீரராக ராஜ்கிரண் சிறப்பாக நடித்திருக்கிறார். தற்போது 70 வயதில் இருக்கும் கபடி வீரர்களை நினைவுபடுத்தி இருக்கிறார். க்ளைமாக்ஸில் இளைஞர் ஒருவர் ராஜ்கிரண் முகத்தில் காலால் எட்டி உதைக்கும் காட்சி, இயக்குனர் சற்குணத்தின் சிறுபிள்ளைத் தனமான காட்சியமைப்பு! அவரது உதவி இயக்குனர்களாவது இந்தக்காட்சி குறித்து விரிவாக விவாதித்திருக்கலாம். இந்தக்காட்சி கபடி விளையாட்டினையும், அந்த வீரர்களையும் அவமான படுத்தும் காட்சி! அதேபோல் ஆஷிகா ரங்கநாத், அதர்வாவை தனக்கு தாலிகட்ட சொல்லும் காட்சி, கேலிக்குரிய காட்சி!

அதர்வாவுக்கு ஜோடியாக நடித்திருக்கும் புதுமுகம் ஆஷிகா ரங்கநாத் கபடி வீராங்கனையாகவும், அதர்வாவின் காதலியாகவும் குறிப்பிடும்படி நடித்திருக்கிறார்.

ராஜ்கிரணின் மருமகளாக நடித்திருக்கும் ராதிகா சரத்குமார், மகன்களாக நடித்திருக்கும் ஜெயப்பிரகாஷ், துரை சுதாகர், ஆர்.கே.சுரேஷ் மற்றும் மருமகனாக நடித்திருக்கும் சிங்கம் புலி ஆகியோர் பாராட்டும் படி நடித்திருக்கிறார்கள்.

மற்றொரு பேரனாக நடித்திருக்கும் ராஜ் ஐயப்பன் தனிக்கவனம் பெறுகிறார்.

லோகநாதன் ஸ்ரீனிவாசன் ஒளிப்பதிவினில் வெற்றிலை தோட்டக்காட்சிகளும், பாடல்களும் சிறப்பாக படமாக்கப்பட்டுள்ளது.

இசையமைப்பாளர் ஜிப்ரானின் இசை பரவாயில்லை!

கபடி விளையாட்டை மய்யப்படுத்தி விறுவிறுப்பான, ஒரு செண்டிமென்ட் கதையை நகர்த்தியிருக்கும் இயக்குனர் சற்குணம், அழுத்தமற்ற காட்சிகளால் சற்றே தடுமாறியிருக்கிறார். பெண்கள் ரசிக்கும் செண்டிமென்ட் காட்சிகள் அதிகமாக இருப்பதால் அவர்கள் குடும்பத்துடன் சென்று பார்க்கலாம்!