பேய் மாமா – விமர்சனம்

இயக்குனர் ஷக்தி சிதம்பரம் இயக்கத்தில் வெளிவந்துள்ள படம், ‘பேய்மாமா’. இந்தப்படத்தில் முதலில் வடிவேலு நடிப்பதாக இருந்தது. தயாரிப்பாளர்கள் சங்கம் நடிக்கத் தடை விதித்திருந்ததால் அவர் நடிக்கவில்லை. அவருக்கு பதிலாக நடித்த யோகி பாபுவுடன் எம்எஸ் பாஸ்கர், சாம்ஸ், கோவை சரளா, ரேகா, மாளவிகா மேனன், செந்தி, மொட்டை ராஜேந்திரன், வையாபுரி, ரமேஷ் கண்ணா, பவர் ஸ்டார் ஸ்ரீனிவாசன் உட்பட பல காமெடி நடிகர்கள் நடித்திருக்கிறார்கள். இவர்களுடன் வில்லனாக பொன்குமரன் நடித்திருக்கிறார்.

பேய் மாமா படத்தின் ‘இசை வெளியீட்டின்’ போது இயக்குனர் ஷக்தி சிதம்பரம் ‘பேய் மாமா’ படம், ஒரு குட்டி காஞ்சனாவாக இருக்கும் என்று கூறினார். அப்படித்தான் இருக்கிறதா? பார்க்கலாம்!

பரம்பரையாக மூலிகை வைத்தியம் செய்யும் ஒரு பெரிய கூட்டுக்குடும்பத்தின் தலைவர் எம்.எஸ்.பாஸ்கர். எப்பேர்பட்ட நோயாக இருந்தாலும் இவர்களது வைத்தியத்தால் தீராத நோயும் தீரும். அந்த அளவிற்கு இவர்களது பங்களாவை சுற்றி இருக்கும் சுமார் 100 ஏக்கர் அளவிலான மிகப்பெரிய மூலிகை பண்ணையை பராமரித்து வருகின்றனர்.

இவர்களது பண்ணையை பறித்துக்கொள்ள இண்டர்நேஷ்னல் அளவில் ஒரு டாக்டர் தலைமையில் சதித்திட்டம் தீட்டுகிறார்கள். இதனால் அடுத்தடுத்த கொலைகள் நடக்கிறது.

கொலை செய்யப்பட்டதால் ஆவியானவர்கள், யோகிபாபுவின் உதவியை நாடுகிறார்கள். இதன்பின்னர் நடக்கும் வழக்கமான டெம்ப்ளேட் பேய்க்கதை ஃபார்முலா தான் படத்தின் திரைக்கதை.

இயக்குனர் ஷக்தி சிதம்பரம் கையாலும் வழக்கமான ஸ்பூஃப் வகை காமெடி ஒன்றிரண்டு காட்சிகளில் மட்டுமே சிரிப்பை வரவழைக்கிறது. மற்றபடி பெரிதாக அவருக்கு எதுவும் கைகொடுக்கவில்லை.

வித்தியாசமான பஞ்ச் அடித்து ரசிகர்களை சிரிக்கவைத்த யோகி பாபு, காமெடியில் கண்டிப்பாக கவனம் செலுத்த வேண்டும். அவரை நம்பி தியேட்டருக்கு வரும் ரசிகர்களுக்கு பெரிய ஏமாற்றமே மிஞ்சும்.

ஏராளமான நகைச்சுவை நடிகர்களை வைத்துக்கொண்டு என்ன செய்வது என்று தெரியாமல் செய்திருக்கிறார், இயக்குனர் ஷக்தி சிதம்பரம்.