‘பெருசு’ – (விமர்சனம்) கேவலமான மனிதனை, புனிதனாக்கும் முயற்சி!

‘ஸ்டோன் பெஞ்ச்’ சார்பில், கார்த்திகேயன் சந்தானம் தயாரித்துள்ள படம், பெருசு! இதில், வைபவ், சுனில், பால சரவணன், ரெடின் கிங்ஸ்லி, முனீஸ்காந்த், சாந்தினி, நிஹாரிகா, நக்கலைட்ஸ் தனம், தீபா சங்கர் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். சிங்களத்தில் வெளியான ‘நெலும் குளுனா’,(உயரமான கோபுரம் என்ற பொருள்) என்ற படத்தினை, எழுதி, இயக்கிய இளங்கோ ராம், தமிழில் அப்படியே  ‘பெருசு’ படத்தை இயக்கியிருக்கிறார். இவர், பல சமூக விழிப்புணர்வு குறும் படங்களை இயக்கியதன் மூலம், பல சர்வதேச விருதுகளை பெற்றுள்ளார், என்பது குறிப்பிடத்தக்கது. இவரிடமிருந்து இப்படி ஒரு அவலமான படமா?!

ஓகே, ‘பெருசு’ கதைக்கு வருவோம். ஊரில் பெரிய மனிதர் என்ற போர்வையில், வெட்டியாக சுற்றித்திரிபவர் பெருசு. இவருக்கு, இரண்டு மகன்கள். பேரன், பேத்திகளோடு கூட்டுக் குடும்பம் நடத்தி வருகின்றனர். மூத்த மகன், பள்ளியில் தலைமை ஆசிரியராக இருந்து வருகிறார். இளைய மகன் குடிகாரன்.

பெண் சபலிஸ்ட்டுகளான பெருசு, தன்னுடைய சக நண்பர்களுடன், லொள்ளுசபா சாமிநாதன் உள்ளிட்ட குழுவினருடன் குளக்கரையில் சுற்றி வருகிறார். பெண்கள் குளக்கரையில் குளித்துக் கொண்டிருப்பதை பார்த்து ரசிக்கிறார்கள். பெருசுவின் தலைமையில், ‘வயாகரா’ மாத்திரைகளுடன் சுற்றி வருகிறார்கள். ஒருநாள், பெருசு, சாய்ந்த நாற்காலியில் அமர்ந்தபடியே, உயிரை விடுகிறார். குடும்பத்தினர் இறுதி சடங்கிற்காக ஆயத்தமாகும் போது தான் தெரிகிறது, வயாகரா மாத்திரையின் விளைவு. செத்த நிலையிலும் ஆணுறுப்பு விரைத்து கொள்கிறதாம்! உங்க கற்பனைக்கு அளவே இல்லையாப்பா! (விளம்பரம் எடுப்பவரல்லவா? இளங்கோ ராம்! அது தான் யோசித்திருக்கிறார்.) அதன் பிறகு குடும்பமே போராடுகிறது. கடைசியில், பெருசுவின் ‘வப்பாட்டி’ வந்து சரி செய்கிறார்.

இந்த அவலக்கதையை, மேலும் நாராசாக்கமல் இயக்குநர் இளங்கோ  ராம், கொஞ்சம் சிரிக்கும்படி, ஓகே சொல்லுமளவிற்கு, திரைக்கதை அமைத்திருக்கிறார். இருந்தாலும், இது குடும்பத்துடன் பார்க்க வேண்டிய படமல்ல. பெருசுக்கு மாதிரி ‘வப்பாட்டி’ குடும்பம் இருந்தால் பார்க்கலாம். அல்லது, அக்கா புருஷன் மீது உரிமை கொண்டாடும் தங்கச்சி இருந்தால், அவங்க குடும்பத்தோடு பார்க்கலாம்!

நடித்தவர்களில், சுனில், நக்கலைட்ஸ் தனம் சிறப்பாக நடித்திருகின்றனர். சுனிலின் மனைவியாக நடித்திருக்கும் சாந்தினியும் கவனம் பெறுகிறார்.

பாலசரவணன், முனீஷ்காந்த், ரெடிங் கிங்ஸ்லி, விடிவி கணேஷ் , சுவாமிநாதன், கருணாகரன் ஆகியோர் சிரிக்க வைக்கின்றனர்.

ஒளிப்பதிவு சத்யா திலகம், இசை அருண் ராஜ். இரண்டும் படத்தின் பலம்.

பாலாஜியின் வசனங்கள், போதிய அளவு எடுபடவில்லை!

பெருசுவிடம் அடி வாங்கி, அவரை பழிவாங்கத் துடிக்கும் இளைஞர் சிறப்பாக நடித்திருக்கிறார்.

‘பெருசு’,  –  மூன்றாம் தரமான காமெடி!