‘ஃபீனிக்ஸ்’ – விமர்சனம்!

‘ஏ.கே.பிரேவ்மேன் பிக்சர்ஸ்’ நிறுவனத்தின் சார்பில், ராஜலக்ஷ்மி அரசகுமார் தயாரிப்பில் வெளியாகியிருக்கும் படம், ‘ஃபீனிக்ஸ்’.  இப்படத்தின் மூலம் பிரபல சண்டைப்பயிற்சியாளர் அனல் அரசு இயக்குநராகவும், நடிகர் விஜய் சேதுபதியின் மகன் சூர்யா விஜய்சேதுபதி நாயகனாகவும் அறிமுகமாகியிருக்கிறார்கள்.

சூர்யா விஜய்சேதுபதியுடன், விக்னேஷ், வர்ஷா விஸ்வநாத்,  அபி நக்ஷத்ரா, சத்யா NJ, சம்பத், ஹரீஷ் உத்தமன், திலீபன், ‘அட்டி’ரிஷி, பூவையார் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர்.

‘ஃபீனிக்ஸ்’ பறவை எத்தனை முறை இறந்தாலும் மீண்டும் உயிர்த்தெழும். அதேபோல் நாயகன் சூர்யா விஜய்சேதுபதி, வில்லன்களுடன் நடக்கும் சண்டையில் சாவின் அருகே சென்று மீண்டு வருகிறார். இதுவே படத்தின் தலைப்பிற்கான அர்த்தம்.

வடசென்னை, கடற்கரை குப்பம் ஒன்றில் தேவதர்ஷினி தனது சூர்யா சேதுபதி, விக்னேஷ் ஆகிய இரண்டு மகன்களுடன் வாழ்ந்து வருகிறார். எளிய குடும்பத்தினரான இவர்கள், ஸ்போர்ட்ஸ் கோட்டாவில் அரசு வேலையை பெறுவதற்காக, ‘குத்து சண்டை’ விளையாட்டை தேர்ந்தெடுத்து அதில் பயிற்சி மேற்கொள்கிறார்கள்.

இந்நிலையில் அவர்களுடைய தொகுதியின் ‘எம் எல் ஏ’ சம்பத் ராஜ், ஒரு குத்து சண்டைப்போட்டியை நடத்துகிறார். அதில் வெற்றி பெறுபவர்களுக்கு துறைமுகத்தில் அரசாங்க வேலையையும், 2 லட்சம் ரூபாய் பரிசும் வழங்குவதாக அறிவிக்கிறார். இதில் பங்கு கொண்டு வெற்றி பெற கர்ணாவும், சூர்யாவும் கடும் பயிற்சியை மேற்கொள்கிறார்கள்.

சூர்யா ‘எம் எல் ஏ’ சம்பத் ராஜ்ஜை கொலை செய்கிறார். போலீசார் கைதுக்கு பின்னர், சிறுவர்கள் சிறையில் அடைக்கப்படுகிறார். அங்கே அவரை கொலை செய்ய முயலுகின்றனர். அதிலிருந்து தப்பித்து கொலை செய்ய வந்தவர்களை புரட்டி எடுக்கிறார். மறுபடியும் அவரை கொலை செய்ய திட்டிமிடுகின்றனர்.

சூர்யா, ஏன் ‘எம் எல் ஏ’ சம்பத் ராஜ்ஜை கொலை செய்தார். ரவுடிகள் சூர்யாவை கொலை செய்தார்களா, இல்லையா? என்பதை அதிரடி ஆக்‌ஷன் திரைக்கதை மூலமாக சொல்வது தான், ‘ஃபீனிக்ஸ்’.

நாயகனாக நடித்திருக்கும் சூர்யா, இளம் வயது துடிப்புடன் செம்ம ஃபோர்சுடன் இருக்கிறார். அவர் வயதிற்கேற்ற கதாபாத்திரம் தான். நன்றாகவே பொருந்தியிருக்கிறார். சில ஃபைட்ஸ் நன்றாக இருக்கிறது. ஆனால், சில  ஃபைட்ஸ் ரொம்ப ஓவர்! கொஞ்சம் குறைத்திருக்கலாம். ஜெயிலில், சின்ன அறையில் நடக்கும் ஃபைட் காதில் பூ சொருகுவதைப்போல் இருக்கிறது. நம்ப முடியவில்லை. யாரையும் இமிடேட் செய்யாமல் அவர் போக்கில் நடித்திருக்கிறார். இதே ஸ்டைலை கடைப்பிடித்தால் நல்ல ஆக்‌ஷன் ஹீரோவகவும், நடிக்கத் தெரிந்த நடிகராகவும் அவரை ரசிகர்கள் கொண்டாடுவார்கள்.

சூர்யாவின் அம்மாவாக நடித்திருக்கும் தேவதர்ஷினி படம் முழுவதும் அழுது கொண்டே இருக்கிறார்.

சூர்யாவின் அண்ணனாக நடித்த விக்னேஷ் குத்துச் சண்டை வீரராகவே தெரிகிறார். நல்ல நடிப்பு!

எம் எல் ஏ’ வாக நடித்திருக்கும் சம்பத் ராஜ் நன்றாக நடித்திருக்கிறார்.

சம்பத்ராஜ்ஜின் மனைவியாக நடித்திருக்கும் வரலட்சுமியின் வில்லத்தனமும் குறிப்பிடத்தக்கது.

ஜெயில் வார்டனாக நடித்த வேல்ராஜ்ஜின் நடிப்பு சிறப்பு!

மற்றபடி, அபி நட்சத்திரா, வர்ஷா, முத்துக்குமார், திலீபன், அஜய் கோஷ், ஹரிஷ் உத்தமன், மூணாறு ரமேஷ், நவீன், காயத்ரி, அட்டி ரிஷி அகியோரும் கதாபாத்திரத்திற்கேற்றபடி நடித்திருக்கிறார்கள்.

ஆர் வேல்ராஜ்ஜின் ஒளிப்பதிவு ஆக்‌ஷன் மிரட்டல்! சண்டைக்காட்சிகளை சிறப்பாக படமாக்கியிருக்கிறார்.

சாம் சி.எஸ்.-ன் இசையில், பின்னணி இசை சூப்பராக இருக்கிறது. குறிப்பாக குத்துச் சண்டை போட்டியில்.

இயக்குநராக அறிமுகமாகியிருக்கும், சண்டை பயிற்சியாளர் அனல் அரசு காட்சிகளை சிறப்பாக இயக்கியிருக்கிறார். அதிலும் ஆபத்தான சண்டைக்காட்சிகள் சூப்பர்.

கே.எல்.பிரவீன் படத் தொகுப்பினை சிறப்பாக கையாண்டிருக்கிறார். குறிப்பாக சண்டைக்காட்சிகள்.

அரசியல், குப்பம், ரவுடியிசம், முன்னேறத்துடிக்கும் இளைஞர்கள் என பழைய கதக்களம் தான். ஆனால், ஒரு புதுமுக நடிகர் சூர்யா விஜய் சேதுபதியை வைத்து, ‘’ஆக்‌ஷன் பிரியர்களுக்கான’’ ஒரு பிரம்மாண்டப்படத்தினை கொடுத்திருக்கிறார், இயக்குநர் அனல் அரசு.