பிச்சைக்காரன் 2 – விமர்சனம்!

விஜய் ஆண்டனி இருவேறு வேடங்களில் நடித்திருக்க, அவரது காதலியாக தென்னிந்திய மாடல் அழகியான நடிகை காவ்யா தபார் நடித்திருக்கிறார். இவர்களுடன் யோகிபாபு, ராதாரவி, கில் தேவ், ஹரீஷ் பேரடி,ஜான் விஜய், ஒய்.ஜி.மகேந்திரன், மன்சூர் அலிகான், மோகன் ராம் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.

பிச்சைக்காரன் 2 படத்தினை விஜய் ஆண்டனி ஃபிலிம் கார்ப்பரேஷன் சார்பாக ஃபாத்திமா விஜய் ஆண்டனி தயாரித்துள்ளார்.

விஜய் ஆண்டனி கதாநாயகனாக நடித்திருப்பதுடன் எழுதி, இயக்கி, எடிட்டிங் செய்து இசையமைத்திருக்கிறார்.

உலக பணக்காரர்களின் வரிசையிலும், இந்திய பணக்காரர்களின் வரிசையில் முதல் பத்து இடங்களில் இருப்பவர், விஜய் குருமூர்த்தி (விஜய் ஆண்டனி). அவரது கார்ப்பரேட் கம்பெனியின் நிர்வாகி, நெருங்கிய நண்பர் அரவிந்த் (தேவ் கில்). குடும்ப டாக்டர் சிவா (ஹரீஷ் பேரடி). ஆடிட்டர் இளங்கோ (ஜான் விஜய்). இந்த மூவர் மட்டுமே அவருடைய நெருக்கமான வட்டத்தில் இருப்பவர்கள். இவர்களை விட மிக நெருக்கமாக இருப்பவர், விஜய் குருமூர்த்தியின் காதலி (விஜய் ஆண்டனி), ஹேமா (காவ்யா தபார்).

விஜய் குருமூர்த்தியின் லட்சக்கணக்கான கோடி ரூபாய் சொத்துக்களை அரவிந்த், சிவா, இளங்கோ மூவரும் அபகரிக்க திட்டமிடுகிறார்கள். இதற்காக நரம்பியல் அறுவை சிகிச்சை நிபுணர் உதவியுடன் விஜய் குருமூர்த்தியின் மூளையை எடுத்துவிட்டு இன்னொருவரின் மூளையை வைத்து அதன் மூலம் கட்டுப்படுத்தி சொத்துகளை அபகரிக்க திட்டமிடுகிறார்கள்.

இதற்காக தங்கையை தேடி அலையும் பிச்சைக்காரன் (விஜய் ஆண்டனி) சத்யாவின் மூளையை எடுத்து (விஜய் ஆண்டனி) கோடீஸ்வரன் விஜய் குருமூர்த்திக்கு  பொருத்திவிட்டு, சத்யாவை கொலை செய்துவிடுகின்றனர். நினைத்தபடி சொத்துக்களை அபகரித்தார்களா, இல்லையா? என்பது தான் பிச்சைக்காரன் 2 படத்தின் கதை, திரைக்கதை மற்றும் க்ளைமாக்ஸ்!

விஜய் ஆண்டனி நடிப்பில் இயக்குநர் சசி இயக்கத்தில் வெளியாகி வெற்றி பெற்ற ‘பிச்சைக்காரன்’ படத்திற்கும், விஜய் ஆண்டனி இயக்கத்தில் தற்போது வெளியாகியிருக்கும் பிச்சைக்காரன் 2 படத்திற்கும் எந்த சம்பந்தமுமில்லை, டைட்டிலைத்தவிர!

படத்தின் முதல் காட்சியிலேயே நம்பமுடியாத காட்சிகளாக இருந்தாலும் இடைவேளைக்கு முன்னர் அடுத்தடுத்த காட்சிகள் பரவாயில்லை! என்று சொல்லும் அளவிற்கு இருக்கிறது. அதற்கு பிறகு விஜய் ஆண்டனியின் அதீதமான கற்பனை காட்சிகளும் திரைக்கதையும் அபத்தம்!

அதிலும் சர்வ சாதரணமாக நடக்கும் மூளை மாற்று அறுவை சிகிச்சை காட்சிகள் எல்லாம், இயக்குநர் விஜய் ஆண்டனியின் கற்பனைக்கே உரித்தானவை. எம்ஜியார் காலத்து அண்ணன் தங்கை பாசம், ஆக்ஸிடென்டில் அப்பா, அம்மா இறந்து விடுவது, வீட்டை விட்டு வெளியேறி, தங்கையின் பசியை போக்க பிச்சை எடுப்பது, கயவர்களிடம் இருந்து தங்கையை மீட்பது போன்ற  காட்சியமைப்புகள் எல்லாம் போன ஜென்மத்தை சார்ந்தவை.

அலுவலகத்தில் பிச்சைக்காரர்களை போர்டு மீட்டிங் நடக்கும்  இடத்தில் உட்காரவைத்து அவர்களோடு பேசும் காட்சிகளை எல்லாம் எப்படி எடுத்து கொள்வது என்று தெரியவில்லை! என்ன தான் கற்பனையா இருந்தாலும் ஒரு நியாயம் வேணாமா!? இயக்குநர் ஷங்கர், ராகவா லாரண்ஸ் ஃபார்முலாவும் வந்து போகிறது. இதோடு மட்டமான கிராபிக்ஸ்!

விஜய் ஆண்டனியின் நடிப்பினை பொறுத்தவரை சற்றே முன்னேற்றம். ஆக்‌ஷன் காட்சிகளில் அதிரடி காட்டி கைதட்டல்களை வாங்குகிறார். டிக்கெட்டுக்கு கொடுத்த காசுக்கு ஒரு ஐட்டம் டான்ஸூம், டூயட்டும் சூப்பர்.

கில் தேவ், ஹரீஷ் பேரடி,ஜான் விஜய்,மன்சூர் அலிகான், மோகன் ராம், முதல்வராக நடித்திருக்கும் ராதாரவி, ஒய் ஜி மகேந்திரன், கவர்ச்சிக்காக மட்டுமே பயண்பட்டிருக்கும் காவ்யா தபார் ஆகியோர் கொடுத்த வேலையை சரியாக செய்திருக்கிறார்கள்.

யோகிபாபுவை சரியாக பயண்படுத்தவில்லை. அவரால் படத்திற்கு எந்த பிரயோஜனமும் இல்லை.

மற்றபடி படத்தில் குறிப்பிட்டு சொல்ல எதுவுமில்லை! ட்ரைலர் ஏற்படுத்தியிருந்த எதிர்பார்ப்பினை திரைப்படம் கொடுக்கவில்லை!

மொத்தத்தில், “பிச்சைக்காரன் 2’ வாரா வாரம் வந்து போகும் படங்களில் ஒன்று!

ரேட்டிங் 2.5/5