Shark 9 pictures சார்பில் சிவா கில்லாரி தயாரிப்பில், நடிகர் விமல் மற்றும் கருணாஸ் முதன்மைப் பாத்திரங்களில் நடிக்க, அறிமுக இயக்குநர் மைக்கேல் K ராஜா இயக்கத்தில், மாறுபட்ட களத்தில், மனதை உருக வைக்கும் அழகான திரைப்படமாக உருவாகியிருக்கும் படம் “போகுமிடம் வெகு தூரம் இல்லை”.
விரைவில் திரைக்கு வரவிருக்கும் “போகுமிடம் வெகு தூரமில்லை” படம் குறித்து, இயக்குநர் மைக்கேல் K ராஜா கூறியதாவது..,
‘இது எனது முதல் மேடை, இந்தக்கதையை வைத்துக்கொண்டு 10 வருடம் சுற்றியிருக்கிறேன். அதற்கு முன்னால் இன்னும் பல கதைகளோடு சுற்றியுள்ளேன். போகுமிடம் வெகு தூரமில்லை ஆனால் இந்த இடத்திற்கு வர வெகு தூரம் பயணித்துள்ளேன். தயாரிப்பாளர் பற்றிச் சொல்ல வேண்டும், அவர் குழந்தை மாதிரி. கதை கேட்டவுடன் செய்யலாம் என்றார் நான் எதிர்பார்க்கவேயில்லை. ஆனால் கொரோனா வந்து 3 வருடத்தைத் தின்றுவிட்டது. அப்புறம் மீண்டும் எனக்கு இப்போதைய சூழ்நிலையில் படம் செய்யும் ஐடியா இல்லை. ஆனால் உனக்காகத் தயாரிக்கிறேன் என்றார். அந்த வார்த்தையில் தான் இங்கு வந்துள்ளோம். நான் துவளும்போதெல்லாம் இந்தக்கதையைக் கேட்டு செம்மையாய் இருக்கு என சிலர் சொல்லும் வார்த்தை தான் ஒரு கலைஞனுக்குக் கிடைக்கும் மிகப்பெரிய ஊக்கம் . அது போல் இந்தக்கதையைக் கேட்ட அனைவரும் ஊக்கம் தந்துள்ளார்கள்.
தேனப்பன் சார் மூலம் கருணாஸ் சாரை சந்தித்து கதை சொன்னேன், நாமே பண்ணலாம் என ஊக்கம் தந்தார். திறமை மட்டும் தான் சினிமாவில் உங்களைக் கொண்டு சேர்க்கும். அதில் நம்பிக்கையாக இருங்கள் ஜெயிப்பீர்கள். கேமராமேன் மிகப்பெரிய ஒத்துழைப்பு தந்தார். எடிட்டருடன் பயங்கர சண்டை போட்டுள்ளேன் ஆனால் அவர் எடிட்டிங் தான் படமே அதற்காக நன்றி. விமல் சார் பற்றிச் சொல்ல வேண்டும், அவரைப்பற்றி நிறையச் சொன்னார்கள் கொஞ்சம் பயமாக இருந்தது ஆனால் ஷீட்டிங்கில் 7 மணிக்குச் சொன்னால் மேக்கப்போடு வந்து நிற்பார். அத்தனை அர்ப்பணிப்போடு இருந்தார். இந்தப்படத்தில் டயலாக் இல்லாமல் வெறும் முக பாவனைகளில் நடிக்க வேண்டும், அசத்தியிருக்கிறார். இந்தக்கதைக்களமே புதிது ஆனால் இதை நம்பி எடுத்தது மிகப்பெரிய விசயம், தயாரிப்பாளருக்கு என் நன்றிகள். படம் நன்றாக வர வேண்டுமென என்னுடன் உழைத்த என் குழுவினர் அனைவருக்கும் நன்றிகள். படம் பாருங்கள் அற்புதமான அனுபவமாக இருக்கும் நன்றி.
நடிகர் கருணாஸ் பேசியதாவது..
இயக்குநர் ஆணித்தரமாக அழுத்தமாகப் பேசக் காரணம் அவரது திறமை தான். அத்தனை சிறப்பாகப் படம் எடுத்துள்ளார். தயாரிப்பாளர் சிவா மிக நல்ல மனம் கொண்டவர். நியூசிலாந்து போய் சாதித்துக் காட்டிய இந்தியன். 24 ஆண்டுகளாக நடித்துக் கொண்டிருக்கிறேன் ஆனால் யாரிடமும் நான் போய் வாய்ப்பு கேட்டதில்லை. சினிமா உலகம் யாரையும் மதிக்காது, நமக்கான வாய்ப்புக்களை நாம் தான் உருவாக்கிக் கொள்ள வேண்டும். திரைத்துறை என்பது மிகப்பெரிய பயணம். மைக்கேல் இந்தக்கதை இப்படி தான் வரவேண்டுமெனப் பிடிவாதமாக எடுத்துக் காட்டியுள்ளார். என்னையும் விமலையும் வித்தியாசமாகக் காட்டியுள்ளார். அவருடன் எனக்கு இது தான் முதல் படம், நான் ஒரு ஹீரோவுடன் நடித்த எல்லாப் படமும் பெரிய வெற்றியைப் பெற்றிருக்கிறது. இந்தக்கதையைக் கேட்டு இந்தப்படம் நடித்தால் நாம் இறந்த பிறகு பேர் சொல்லிக்கொள்ளும் படமாக இருக்குமென என் குடும்பத்தினரிடம் சொன்னேன். ஆனால் ஒரு கட்டத்தில் இந்த வாய்ப்பு என் கையை விட்டுப் போனது, ஆனால் நாம் நடிக்கனும் எழுதியிருந்தால் அது நடக்கும் அப்படிதான் இப்போது நடந்துள்ளது. மகிழ்ச்சி. இந்தப்படத்திற்காக உண்மையாக உழைத்துள்ள அனைத்து கலைஞர்களுக்கும் என் வாழ்த்துக்கள். எல்லோருக்கும் பெருமை சேர்க்கும் படமாக இருக்கும் நன்றி.
நடிகர் விமல் பேசியதாவது..
எங்களை வாழ்த்த வந்த அனைவருக்கும் நன்றி. தாமோதரன் மற்றும் கோகுல் தான் இந்தப்படத்தில் நான் நடிக்கக் காரணம் நன்றி. இயக்குநர் கதை சொல்லிப் பிடித்த பிறகு தான், தயாரிப்பாளரிடம் பேசினேன். வெள்ளை மனத்துக்காரர் கொடுத்த வாய்ப்பை காப்பாற்ற வேண்டுமென நினைப்பார். இந்த மேடையில் நாங்கள் எல்லோரும் இருக்க அவர் தான் காரணம். நான் நிறையப் புதுமுக இயக்குநர்களோடு வேலை பார்த்திருக்கிறேன் அவர்கள் எல்லோரும் பெரிய இயக்குநர்களாக இருக்கிறார்கள் அதே போல் மைக்கேலும் பெரிய இயக்குநராக வர வாழ்த்துக்கள். எப்போதும் முதல் படத்தில் அவர்களின் வாழ்வின் ஜீவன் இருக்கும் இந்தப்படத்திலும் இருக்கிறது. இசையமைப்பாளர் ரகுநந்தனோடு நாலாவது படம் இதுவும் வித்தியாசமாக இருக்கும். கருணாஸ் அண்ணனும் நானும் 15 வருடப் பழக்கம் ஆனால் இந்தப்படத்தில் தான் ஒன்று சேர்ந்துள்ளோம். இது மாதிரியான படம் செய்ததில்லை மிக அழுத்தமான பாத்திரம், மெனக்கெட்டு உழைத்துள்ளோம். எல்லோருக்கும் பிடிக்கும் படமாக இருக்கும். படத்தில் உழைத்த அனைவருக்கும் என் நன்றிகள்.
தமிழ் சினிமாவின் வழக்கமான கமர்சியல் அம்சங்களில் இருந்து மாறுபட்டு ஒரு வித்தியாசமான களத்தில், மனதில் புன்னகை வர வைக்கும், வாழ்க்கை அனுபவங்களுடன், அழகான படைப்பாக இப்படத்தை உருவாக்கியுள்ளார் அறிமுக இயக்குநர்மைக்கேல் K ராஜா.
இதுவரையிலான திரைப்பயணத்தில் தான் ஏற்றிராத வித்தியாசமான பாத்திரத்தில் நாயகனாக விமல் நடித்துள்ளார். கருணாஸ் மிக முக்கியமான பாத்திரத்தில் நடித்துள்ளார். இவர்களுடன் மேரி ரிக்கெட்ஸ், ஆடுகளம் நரேன், மனோஜ்குமார், பவன், அருள்தாஸ், தீபா சங்கர், சார்லஸ் வினோத், வேல ராமமூர்த்தி ஆகியோர் இணைந்து நடித்துள்ளனர்.