’பூர்வீகம்’ – விமர்சனம்!

சொந்த மண்ணே சொர்க்கம் என வாழும், பாராம்பரியமான விவசாயக் குடும்பத்தை சேர்ந்தவர், போஸ் வெங்கட்.  தனது மகன் கதிரை படிக்க வைத்து அரசு வேலையில் சேர, லட்சியத்தோடு உழைத்து வருகிறார். பல போராட்டங்களுக்கு பிறகு, அவரது லட்சியம் நிறைவேறுகிறது. கதிர், அரசு அதிகாரியாக வேலைக்கு சேருகிறார். வசதியான குடும்பத்தைச் சேர்ந்த பெண்ணையும் கதிருக்கு திருமணம் செய்து வைக்கிறார், போஸ் வெங்கட்.

போஸ் வெங்கட், தனது ஆசைப்படி கதிரை உருவாக்கிவிட்டாலும் அவர் குடும்பத்துடன் சந்தோஷமாக வாழமுடியாத சூழல் உருவாகிறது. சொத்துக்களை இழந்து, ஆதரவற்ற நிலையில் தவிக்கிறார் போஸ் வெங்கட். இந்நிலையில் கதிர் என்ன செய்தார்? என்பது தான், ‘பூர்வீகம்’.

கதிர், கிராமத்து இளைஞராகவும், மனைவியின் கட்டுப்பாட்டில் இருக்கும் கணவனாகவும் இரு வேறுவிதமான தோற்றத்தில் நடித்திருக்கிறார். தன்னை துச்சமாக மதிக்கும் மனைவியிடமும், மகனிடமும் சிக்கித்தவிக்கும் காட்சிகளில், வேறுபட்ட தனது நடிப்பினால் ரசிகர்கள் கவனிக்கும்படி நடித்திருக்கிறார். க்ளைமாக்ஸ் காட்சியில் பெற்றோரை கவனிக்க முடியாமல் போய்விட்டதை எண்ணி அழுகும் காட்சியில் படம் பார்ப்பவர்களையும் அழ வைத்து விடுகிறார்.

நாயகியாக நடித்திருக்கும் மியா ஸ்ரீ, கிராமத்து கதாபாத்திரத்திற்கு ஏற்ற  தோற்றத்தோடு, நடிப்பில் கவனம் பெற வைக்கிறார்.

நாயகனின் தந்தையாக நடித்திருக்கும் போஸ் வெங்கட், வரது மனைவியாக நடித்திருக்கும் ஸ்ரீ ரஞ்சனி இருவரும் போட்டி போட்டு நடித்ததோடு பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்திழுக்கிறார்கள்.

கதிரின் மனைவியாக நடித்திருக்கும் சூசன், வழக்கமான வில்லத்தனத்தை காட்டுவதோடு க்ளைமாக்ஸ் காட்சிகளில் பார்வையாளர்களை உருகவும் வைத்துவிடுகிறார்.

இவர்களோடு, சங்கிலி முருகன், இளவரசு, ஒய்.எஸ்.டி.சேகர், சிவக்குமார் உள்ளிட்ட,  மற்ற கதாபாத்திரங்களில் நடித்திருப்பவர்கள் குறை சொல்ல முடியாத அளவிற்கு நடித்துள்ளனர்.

இசையமைப்பாளர் சாணக்யாவின் இசையில், பாடல்கள்  மண் மணத்தோடு இருக்கிறது. பின்னணி இசையும் ஓகே தான், குறையில்லை!

ஒளிப்பதிவாளர் விஜய் மோகனின் ஒளிப்பதிவுக் காட்சிகளில் குறையில்லை!

எழுதி, இயக்கியிருக்கும் இயக்குநர் ஜி.கிருஷ்ணன், Df Tech மக்களுக்கு தேவையான அன்பு, பாசம், உண்மையான நேசம் இவற்றை, கிராமத்து கலாச்சார பின்னணியில் அழகாக தொகுத்துள்ளார். அது ரசிக்கும்படியும் இருக்கிறது.

பல இடங்களில் குறைகள் இருந்தாலும், இயக்குநர் சொல்ல வந்துள்ள கருத்து பாராட்டும்படியாக இருக்கிறது.