போத்தனூர் தபால் நிலையத்தின் ‘போஸ்ட் மாஸ்டர்’ ஜெகன் கிரீஷ், இளகிய மனம் கொண்ட அவர் மிகவும் நேர்மையானவர். போதிய பாதுகாப்பு இல்லாமல் இருக்கும் அந்த போஸ்ட் ஆஃபிஸில் இருந்து பெரிய தொகையினை பாதுகாக்கும் பொருட்டு வீட்டிற்கு எடுத்து வரும் வழியில் அது களவாடப்படுகிறது.
‘போஸ்ட் மாஸ்டர்’ ஜெகன் கிரீஷ் இந்த சம்பவத்தினால் நிலை குழைந்து போகிறார். குடும்பத்துடன் சந்தோஷமாக வாழ்ந்து கொண்டிருக்கும் அவரது வாழ்க்கையில் மிகப்பெரிய இக்கட்டான சூழ்நிலை உருவாகிறது. சொந்த தொழில் செய்ய முயற்சி செய்துகொண்டிருக்கும் அவரது மகன் பிரவீன் அதை கண்டுபிடிக்க களம் இறங்குகிறார். அவர் கண்டுபிடித்தாரா? இல்லையா? என்பது தான் சஸ்பென்ஸ், க்ரைம் த்ரில்லர் ‘போத்தனூர் தபால் நிலையம்’ படத்தின் கதை, திரைக்கதை மற்றும் ட்விஸ்ட் க்ளைமாக்ஸ்!
கதாநாயகனாக நடித்து இருக்கும் பிரவீன் எழுதி, இயக்கி இருக்கிறார். படமாக்கிய விதத்தில் 1990 கால கட்டத்தினை கண்முன் கொண்டுவந்து இருக்கிறார். படத்தில் நடித்த அத்தனை நடிகர்களும் கதாபாத்திரங்களுக்கேற்ற அருமையான தேர்வு. ‘போஸ்ட் மாஸ்டர்’ ஆக நடித்திருக்கும் ஜெகன் கிரீஷ், கதாநாயகியாக நடித்திருக்கும் அஞ்சலி ராவ், பிரவீனின் நண்பராக நடித்திருக்கும் வெங்கட் சுந்தர் உள்ளிட்ட படத்தில் நடித்த அனைவரும் சிறப்பாக நடித்து உள்ளனர்.
முதல் பாதியில் படம் தொடங்கிய உடனே கதைக்குள் செல்லாமல் இருப்பது சோர்வை தருகிறது. அடுத்தடுத்த காட்சிகள் சற்று சுவாரஸ்யத்தை தருகிறது. இரண்டாம் பாதியில் அந்த குறைகள் இல்லை. விறுவிறுப்பாக செல்லும் திரைக்கதை க்ளைமாக்ஸ் ட்விஸ்ட் கைதட்டச்செய்கிறது.
ஒளிப்பதிவாளர் சுகுமாரன் சுந்தர், 1990 களின் காலகட்டத்தினை சிறப்பாக காட்டியிருக்கிறார். தென்மாவின் இசையில் பாடல்கள் குறையில்லை.. அதேபோல் பின்னணி இசை அமைத்திருக்கும் எலன் செபாஸ்டியன் இசையிலும் குறையில்லை.
மொத்தத்தில் யூகிக்கக்கூடிய ஒரு கதையை யூகிக்க முடியாத க்ளைமாக்ஸ் மூலம் கொண்டு படமாக்கி இருக்கிறார் இயக்குனர் பிரவீன். இன்னும் சற்று கூடுதல் கவனம் செலுத்தியிருந்தால் ஒரு விறுவிறுப்பான சஸ்பென்ஸ் க்ரைம் த்ரில்லர் உருவாகியிருக்கும்.