‘கல்கி 2898 AD’ படத்திலிருந்து,  பிரபாஸின் வாகனம் ‘புஜ்ஜி’ அறிமுகம்!

இந்தியத் திரையுலகமே ஆவலுடன் எதிர்பார்த்துக்கொண்டிருக்கும் சயின்ஸ் பிக்சன் திரைப்படமான ‘கல்கி 2898 கி.பி’ படம் வரும் ஜூன் 27 ஆம் தேதி அன்று திரைக்கு வருகிறது. இதையொட்டி படக்குழுவினர், கடந்த மே 22 ஆம் தேதியன்று, ஹைதராபாத்தில் நடந்த விழாவில், மஹேந்திரா கம்பெனி பிரத்தியேகமாக உருவாக்கிய, படத்தில் பயன்படுத்தப்படும் வாகனமான ‘புஜ்ஜி’யை அறிமுகப்படுத்தினர்.

பிரபாஸின் சிறந்த நண்பனாக படம் முழுதும் அவருடன் ஒரு வாகனம் வருகிறது. அதனை ரசிகர்கள் முன்னிலையில் பிரபாஸ் அறிமுகப்படுத்தினார். இதனைத் தொடர்ந்து, தற்போது இந்த வாகனம் சென்னை மஹேந்திரா சிட்டிக்கு கொண்டுவரப்பட்டு,  பொதுமக்கள் முன்னிலையில் பார்வைக்கு வைக்கப்பட்டது.

பிரபாஸும், புஜ்ஜியும் படத்தில் மிக முக்கிய பாத்திரத்தை வகிக்கிறார்கள். புஜ்ஜி டீசர் வைரலாகி, வரவேற்பை பெற்ற நிலையில்,  இவ்வாகனத்தைக் காண மக்கள் திரண்டனர். கற்பனையிலும் நினைத்து பார்த்திராத வடிவத்தில், மூன்று சக்கரங்களுடன், நவீன புஜ்ஜி வாகனத்தை பார்த்த அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியது. ரசிகர்கள் ‘கல்கி 2898 AD’  டீசரில் நடிகர் பிரபாஸ் அமர்ந்து பயணித்த இடத்தில் அமர்ந்து, ஆவலுடன் புகைப்படங்கள் எடுத்துக்கொண்டனர்.

அமிதாப் பச்சன், கமல்ஹாசன், பிரபாஸ், தீபிகா படுகோன் மற்றும் திஷா பதானி உள்ளிட்ட இந்தியாவின் முன்னணி நட்சத்திரங்கள்  முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ள ‘கல்கி 2898 AD’ படத்தை நாக் அஷ்வின் இயக்கியுள்ளார்,  வைஜெயந்தி மூவிஸ் தயாரித்துள்ளது. ஒரு பன்மொழி படைப்பாக, புராணக்கதைகளால் ஈர்க்கப்பட்ட, எதிர்காலத்தில் நடக்கும் அறிவியல் புனைகதை வகையில் இப்படம் உருவாகியுள்ளது.

 

புஜ்ஜி அறிமுக வீடியோ.