சிரஞ்சீவி – சல்மான் கான் ஆகியோருடன் இணைந்த பிரபுதேவா!

இயக்குநர் மோகன் ராஜா இயக்கத்தில் தயாராகி வரும் ‘காட்பாதர்’ படத்திற்காக அப்படத்தின் நாயகன் ‘மெகா ஸ்டார்’ சிரஞ்சீவி மற்றும் பாலிவுட் சூப்பர் ஸ்டார் சல்மான்கான் இணைந்து நடனமாடும் நடனக்காட்சியை பிரபுதேவா வடிவமைக்கிறார். இதற்கான பிரத்யேக பாடலை இசையமைப்பாளர் எஸ். எஸ். தமன் உருவாக்கி இருக்கிறார்.

கொனிடேலா புரொடக்சன்ஸ் மற்றும் சூப்பர் குட் பிலிம்ஸ் இணைந்து தயாரிக்கும் திரைப்படம் ‘காட்பாதர்’. பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் இந்த திரைப்படத்தில் மெகா ஸ்டார் சிரஞ்சீவி கதையின் நாயகனாக நடிக்கிறார். அவருடன் பாலிவுட் சூப்பர் ஸ்டார் சல்மான் கான் முக்கிய வேடத்தில் நடிக்கிறார். சிரஞ்சீவி மற்றும் சல்மான்கான் இருவரும் இணைந்து திரையில் நடனமாடினால் ரசிகர்களுக்கு கொண்டாட்டமாக இருக்கும் என்பதால், இவர்கள் இருவரும் இணைந்து நடனமாடும் வகையில் பாடல் ஒன்றை உருவாக்க படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர்.

விரைவில் இந்தப் பாடலுக்கான படப்பிடிப்பு நடைபெறவிருக்கிறது என்றும், சிரஞ்சீவியும், சல்மான்கானும் திரையில் ஒன்றாக நடனமாடுவதை பார்ப்பது ரசிகர்களுக்கு அரிய விருந்தாக இருக்கும் என்றும் படக்குழுவினர் உற்சாகமாக தெரிவித்திருக்கிறார்கள்.

‘காட்பாதர்’ படப்பிடிப்பின் இறுதிகட்டத்தில் படக்குழுவினர் ஈடுபட்டிருக்கிறார்கள். நயன்தாரா, இயக்குநர் பூரி ஜெகன்நாத், நடிகர் சத்யதேவ் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கிறார்கள். நீரவ்ஷா ஒளிப்பதிவு செய்து வருகிறார்.  இத்திரைப்படத்தை தயாரிப்பாளர்கள் ஆர். பி. சவுத்ரி மற்றும் என். வி. பிரசாத் ஆகியோர் பிரம்மாண்டமான பொருட்செலவில் தயாரித்து வருகிறார்கள். இந்தப் படத்தை கொனிடேலா சுரேகா வழங்குகிறார்.