‘PT சார்’-  திரைப்பட விமர்சனம்!

பல கல்வி நிறுவனங்களை நடத்திவரும், செல்வாக்கு மிக்க மனிதர் தியாகராஜன். இவருடைய பள்ளியில் P.T வாத்தியாராக பணியாற்றுபவர் ஹிப் ஹாப் ஆதி. ஜாதகத்தில் ஆதிக்கு கண்டம் இருப்பதால், அவருடைய அம்மா தேவதர்ஷினி எந்த சச்சரவுக்கும், பிரச்சனைக்கும் செல்லவிடாமல், பாதுகாத்து வருகிறார். அவரும் அம்மாவின் விருப்பப்படியே நடந்து கொள்கிறார். ஆதியின் எதிர்வீட்டில் வசிப்பவர் அனிகா. கல்லூரியின் தாளாளர் தியாகராஜனால் அனிகாவுக்கு ஒரு பிரச்சனை ஏற்படுகிறது. இதன் காரணமாக அனிகா தற்கொலை செய்து கொள்கிறார். இது ஆதிக்கு தெரிய வருகிறது. தியாகராஜனை ஆதி சட்டத்தின் முன் நிறுத்தி தண்டனை வாங்கி கொடுக்க முயற்சிக்கிறார். அது நடந்ததா? இல்லையா? என்பதே ‘PT சார்’ படத்தின் கதை.

பாலியல் ரீதியான துன்புறுத்தல்கள் குறித்து சமூகத்தின் பார்வையும், அதை எதிர்த்து துணிவுடன் போராடும் பக்குவத்தினையும், சிறப்பாக சொல்லியிருக்கிறார்கள். இப்படி, சமூக அக்கறையோடு சொல்லப்பட்டிருக்கும், ‘PT சார்’ படத்தினை இயக்கிய  இயக்குநர் கார்த்திக் வேணுகோபாலன், தயாரித்த ஐசரி கணேஷ் இருவரையும் பாராட்ட வேண்டும்.

ஹிப் ஹாப் ஆதி, அதே கலகல  இளைஞனாக வலம் வருகிறார். இங்கிலீஷ் டீச்சராக வரும் காஷ்மீரா பரதேசியை சுற்றி வருவது, அடியாட்களை அடித்து பறக்கவிடும் காட்சிகளில் வேகம் காட்டுவது, தியாகராஜனிடம் மோதும் காட்சிகளில், க்ளைமாக்ஸில் பேசும் வசனம் என அனைத்து காட்சிகளிலும் தன்னுடைய இருப்பினை அழுத்தமாக பதிவு செய்கிறார். கதாபாத்திரத்தின் தன்மை உணர்ந்து நடித்திருக்கிறார்.

ஹிப் ஹாப் ஆதிக்கு ஜோடியாக நடித்திருக்கும் காஷ்மீரா பரதேசிக்கு, வந்து போகும் கதாபாத்திரம். கிடைத்த இடங்களில், தன்னுடைய அழகாலும் நடிப்பாலும் ரசிகர்களை கவர்ந்து விடுகிறார்.

அனிகாவிற்கும் ஒரு சில காட்சிகள் தான். இருந்தாலும், அந்த காட்சிகளில் அவருடைய நடிப்பு அழுத்தமானதாக இருக்கிறது. இவருடைய அப்பாவாக நடித்திருக்கும் இளவரசு, சிறப்பான நடிப்பினை வெளிப்படுத்தியிருக்கிறார்.

கல்வி நிறுவனங்களின் தாளாளராக நடித்திருக்கும் தியாகராஜன், மிரட்டியிருக்கிறார். சிறப்பான நடிப்பு.

மற்ற கதாபாத்திரங்களில் நடித்திருக்கும் பிரபு, கே.பாக்யராஜ், ஆர்.பாண்டியராஜன், முனிஷ்காந்த், பட்டிமன்றம் ராஜா, வினோதினி, ஒய்.ஜி.மதுவந்தி, சுட்டி அரவிந்த், ஆர்.ஜே.விக்கி, அபிநட்சத்திரா ஆகியோரும் குறிப்பிடும்படி நடித்துள்ளனர்.

ஹிப் ஹாப் ஆதியின் இசையில் பாடல்கள், பின்னணி இசை ஓகே!

ஒளிப்பதிவாளர் மாதேஷ் மாணிக்கத்தின் ஒளிப்பதிவும் குறை சொல்லமுடியாதபடி இருக்கிறது.

இயக்குநர் கார்த்திக் வேணுகோபாலன் பெண்களுக்கு எதிராக நடக்கும் பாலியல் வன்முறைகளை அழுத்தமாக சொல்லியிருக்கிறார். ஆனால் அதை எதிர்கொள்ளும் விதத்தினை இன்னும் விரிவாகவும் தெளிவாகவும் சொல்லியிருக்க வேண்டும்.

முதல்பாதி படம் வேகம். இரண்டாம் பாதியில் வேகம் குறைவு. கதாபாத்திர வடிவமைப்பில் கோட்டை விட்டுள்ளார். உதாரணமாக நீதிபதியை (பாக்யராஜ்) கோமாளி போல் சித்தரித்துள்ளதை ஏற்று கொள்ளமுடியாது.

அதேபோல் மார்ச்சுவரி டாக்டருக்கும், கொலை செய்ததாக சரண்டாராகும் மூன்று பேருக்கும் தண்டனை இல்லாமல் விட்டிருப்பதும் திரைக்கதையின் மிகப்பெரிய பலவீனம்.

யூகிக்க முடியாத க்ளைமாக்ஸ் டிவிஸ்ட் சூப்பர்!

‘PT சார்’ – பரவாயில்லை!