‘பியார் பிரேமா காதல்’ படத்தின் இயக்குநர் இளன், தற்போது முதன்முறையாகக் கதாநாயகனாக அவதாரம் எடுத்துள்ள திரைப்படம் ‘பியார் பிரேமா கல்யாணம்’. பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் இந்தத் திரைப்படத்தின் முதல் சிங்கிள் பாடலான ‘அட்ராசிட்டி’ (Atrocity) தற்போது வெளியாகி சமூக வலைதளங்களில் காட்டுத்தீயாய் பரவி ட்ரெண்டாகி வருகிறது.
ரசிகர்கள் ஆவலோடு எதிர்பார்த்துக் காத்திருக்கும் இத்திரைப்படம் வருகிற ஆகஸ்ட் 21-ஆம் தேதி முதல் முன்னணி ஓடிடி தளமான நெட்ஃப்ளிக்ஸில் (Netflix) நேரடியாக ஸ்ட்ரீமிங் செய்யப்பட உள்ளது.யுவன் சங்கர் ராஜாவின் துள்ளலான இசையில், இளன் மற்றும் வெங்கயோ வரிகளில் உருவாகியுள்ள இப்பாடலை மதிச்சியம் பாலா, சிந்தூரி விஷால் இணைந்து பாடியுள்ளனர்.
மாடர்ன் கல்யாணத்தின் வேடிக்கையான அட்ராசிட்டி விஷயங்களை நகைச்சுவையுடன் காட்சிப்படுத்தியுள்ள விதம் ரசிகர்களைப் பெரிதும் கவர்ந்துள்ளது. இதில் இளனுக்கு ஜோடியாக சான்வீ மேக்னா நடித்துள்ளார். திருமணத்திற்குப் பிறகும் பெற்றோர் வீட்டை விட்டுப் பிரியாத மனைவிக்காக, மாமனார் வீட்டிலேயே குடியேறும் ஒரு கணவனின் புதுமையான ‘ரோல் ரிவர்சல்’ கதைக்களத்தை இப்படம் பேசுகிறது.
ரைஸ் ஈஸ்ட் என்டர்டெயின்மெண்ட் தயாரித்துள்ள இத்திரைப்படத்தில் யோகி பாபு, ராதிகா சரத்குமார், எம்.எஸ். பாஸ்கர், இளங்கோ குமரவேல், செந்தில் உள்ளிட்ட ஒரு பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளனர். காதலின் ஆழத்தையும், கூட்டுக்குடும்பத்தின் கலகலப்பான தருணங்களையும் யுவனின் ஆன்மார்த்தமான இசை மேலும் அழகாக்கியுள்ளது. திருமணத்திற்குப் பின் நடக்கும் எதிர்பாராத திருப்பங்களைச் சொல்லும் இப்படம், ஆகஸ்ட் 21 முதல் உலகம் முழுவதும் நெட்ஃப்ளிக்ஸ் ஓடிடி தளத்தில் ஸ்ட்ரீமிங் ஆகிறது.