ஒரே இரவில் நடக்கும் கதையாக லேடீஸ் ஹாஸ்டல் பின்னணியில் உருவாகி இருக்கும் படம். ‘ரா ..ரா ..சரசுக்கு ராரா…’ இந்தப் படத்தை ஸ்கை வாண்டர்ஸ் என்டர்டெயின்மென்ட் நிறுவனம் சார்பில் ஏ ஜெயலட்சுமி தயாரித்துள்ளார். கேசவ் தெபுர் இயக்கியுள்ளார். ஒளிப்பதிவு ஆர் .ரமேஷ், இசை ஜி. கே.வி. 9 V ஸ்டுடியோஸ் நிறுவனம் நவம்பர் 3 ஆம் தேதி இப்படத்தை வெளியிடுகிறது.
‘ரா ..ரா .சரசுக்கு ராரா… படத்தின் அறிமுக விழா இன்று சென்னை, பிரசாத் லேப் திரையரங்கில் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் தயாரிப்பாளர் ஏ ஜெயலட்சுமி பேசும் போது,
“தயாரிப்பாளர்களுக்காகத் தைரியமாகக் குரல் கொடுக்கும் கே .ராஜன் அவர்கள் இங்கே வந்திருக்கிறார். அவரது துணிச்சலுக்காக அவரை எனக்கு மிகவும் பிடிக்கும்.
வாழ்க்கையில் எத்தனை பேர் மகிழ்ச்சியாக இருக்கிறார்கள்? இரண்டு மணி நேரம் சந்தோஷமாக இருக்க வேண்டும் ,தன்னை மறந்து ஜாலியாக இருக்க வேண்டும் என்று தான் இந்தப் படத்தை எடுத்துள்ளோம் இப்பொழுது கத்தி , வெட்டு குத்து, ரத்தம் என்று வரும் படங்களைத்தான் பார்த்துக் கொண்டு இருக்கிறார்கள். அவற்றிலிருந்து மாறுபட்டு ஜாலியாக இருக்கும் படியாக இந்தப் படம் உருவாகியிருக்கிறது. இது வயது வந்தவர்களுக்கான படம் என்றாலும் இளைஞர்களுக்கும் பெரியவர்களுக்கும் பிடிக்கும் படியாக இருக்கும். படத்தை எடுக்கும் போது நாங்கள் பல பிரச்சினைகளைச் சந்தித்தோம் .இதன் படப்பிடிப்பு வேலூரில் நடந்த போது போலீஸ் தொல்லைகள் தினம் தினம் வந்து கொண்டே இருந்தன. சாதாரண போலீஸ் முதல் இன்ஸ்பெக்டர், கமிஷனர் வரை எங்களுக்குத் தொல்லை கொடுத்தார்கள். அப்போதெல்லாம் எங்களுக்குப் பாதுகாப்பாக ஆதரவாக காட்பாடி ராஜன் அவர்கள் இருந்து வந்திருக்கிறார். அதை என்னால் மறக்க முடியாது. இந்தப் படம் நிச்சயம் வெற்றி பெறும் என்று நம்பிக்கை உள்ளது” என்றார்.
படத்தின் இயக்குநர் கேசவ் தபுர் பேசும்போது,
“நான் இங்கே வரும்போது என்னிடம் இந்தத் தலைப்பை பார்த்து படம் கிளுகிளுப்பாக இருக்குமா என்று கேட்டார்கள். நீங்கள் நினைப்பது போல் கிளுகிளுப்பாக இருக்காது ;சந்தோஷமான கிளுகிளுப்பாக இருக்கும் என்றேன் .நான் சிறு வயது முதல் தலைவர் ரஜினி அவர்களின் ரசிகன். அவர் படங்களில் நடனக் கலைஞராகவும் நடன உதவி இயக்குநராகவும் பணிபுரிந்து இருக்கிறேன்.
‘ சந்திரமுகி ‘ படத்தில் இருந்து அந்தத் தலைப்பை நான் எடுத்துக் கொண்டேன் .சரசு என்றால் மோகம் மட்டுமல்ல சந்தோஷம் என்றும் குறிக்கும்.
இந்தத் தலைப்பு பற்றி நான் தயங்கிய போது கூட, தயாரிப்பாளர்தான் உறுதியாக இருந்தார்கள், இதே தலைப்பை மாற்றக்கூடாது என்று. இந்தப் படத்தை பல்வேறு பிரச்சினைகளுக்கு இடையேதான் எடுத்தோம் .தினசரி ஒரு பிரச்சினை வரும். அப்படி 45 நாட்களும் பிரச்சினை வந்து கொண்டே இருந்தது . பொது இடங்களில் படப்பிடிப்பு நடத்தும் போது தான் காவல்துறை அனுமதி வாங்க வேண்டும். ஆனால் உரிமையாளரிடம் அனுமதி வாங்கிய ஒரு தனியாருக்குச் சொந்தமான இடத்தில் படப்பிடிப்பு நடத்தும்போது எங்களுக்கு அவ்வளவு இடைஞ்சல்கள் கொடுத்தார்கள் .இப்படி முதல் நாள் 300 நடனக் கலைஞர்களுடன் நாங்கள் தயாராகி விட்டோம் .அனுமதி வேண்டும் என்று எங்களைத் தொந்தரவு கொடுத்தார்கள். இப்படிப் படப்பிடிப்பு நடந்த எல்லா நாட்களிலும் தொல்லைகள் தொடர்ந்தன. ஆனால் அப்போதெல்லாம் தயாரிப்பாளர் தைரியமாக அதை எதிர்கொண்டு சமாளித்தார்.
படத்தில் 60 கட்கள் சென்சாரில் கொடுத்தார்கள். அதனால் என்னை “60 கட் டைரக்டர் “என்று கூறுகிறார்கள்.
நான் இதுவரை வந்த படங்களைப் பார்த்து தான் சினிமாவுக்கு வந்திருக்கிறேன். எத்தனையோ படங்களில் அனுமதித்த காட்சிகளை எல்லாம் எங்களுக்கு மட்டும் சென்சாரில் அனுமதிக்க முடியாது என்றார்கள்.
படத்திற்கு நாங்கள் யூ சர்டிபிகேட் கேட்கவில்லை.ஏ சர்டிபிகேட் தான் வேண்டும் என்று கேட்கிறோம். இது அடல்ட் படம் என்று தான் கூறினோம். ஆனால் சென்சாரில் எதுவுமே முடியாது என்று கைவிட்டு விட்டார்கள். எதுவுமே தர முடியாது என்றார்கள்.நீங்கள் வேண்டுமானால் ரிவைசிங் கமிட்டி செல்லுங்கள் .இல்லாவிட்டால் நீதிமன்றம் செல்லுங்கள் என்றார்கள்.
ரிவைசிங் கமிட்டி சென்றோம் அங்கே நடிகை கௌதமி தான் தலைவராக இருந்தார். படத்தின் மூலம் என்ன சொல்ல போகிறீர்கள் என்றார்.லேடீஸ் ஹாஸ்டலில் தவறுகள் நடக்கின்றன அப்படி நடக்க கூடாது என்று நாங்கள் சொல்கிறோம் என்றோம். பல மணி நேரம் காக்க வைத்தார்கள். பிறகு நீங்கள் எதை வெட்ட வேண்டுமோ அதை தாராளமாக வெட்டிக் கொள்ளுங்கள் .ஆனால் எதைப் பற்றி வேண்டுமானாலும் கேள்விகள் கேளுங்கள் விளக்கம் சொல்கிறோம் என்றேன்.
அவர்கள் எதையும் கேட்பதற்குத் தயாராக இல்லை. நான்கு பக்கம் அளவில் குறிப்பிட்டு நீக்கச் சொன்னார்கள்.நக்மா என்று பெயர் இருக்கக் கூடாது என்றார்கள் .லலிதா என்று பெயர் இருக்கக் கூடாது என்றார்கள்.அந்தப் பெயர்கள் ஒரு நிறுவனத்தின் பெயர் அல்ல சாதாரணமாக இருக்கக்கூடியது தான். ஆனால் எதையும் பொருட்படுத்தாமல் அவ்வளவு அவமதித்தார்கள்.
விளக்கிப் பேசும்போது கையைக் காட்டிப் பேசியதைத் தங்களை அவமதிப்பதாகக் கருதி மன்னிப்பு கேட்டு லெட்டர் கொடுங்கள் என்றார்கள். கதாநாயகன் கதாநாயகியை மேலே பார்க்கிறான் அந்தக் காட்சியைத் தூக்குங்கள் என்றார்கள் .நாங்கள் விளக்கம் சொன்னால் எதுவும் பேசக்கூடாது வெளியே போங்கள் என்று சொன்னார்கள். எங்களுக்கு என்ன சொல்வது என்றே தெரியவில்லை. அந்த அளவிற்கு அங்கே எங்களை நடத்தினார்கள் .
சென்சார் விதிகள் எல்லாம் 1952 -ல் உள்ளது அப்படியே இன்றும் உள்ளன. ஆனால் திரைப்படங்களும் வாழ்க்கை முறையும் கலாச்சாரமும் எவ்வளவோ மாறிவிட்டன. ஆனால் அதை மாற்றாமல் அப்படியே வைத்து இருக்கிறார்கள் .5 ஆண்டுக்கு ஒரு முறையாவது சென்சார்விதிகளை மாற்ற வேண்டும் .அப்போதுதான் இவர்களுக்கு நாட்டு நடப்பு என்னவென்று புரியும். இவர்கள் அப்படிப் பெயர்களை எடுக்கச் சொன்னதால் டப்பிங் எல்லாம் மாற்ற வேண்டி இருந்ததால் தயாரிப்பாளருக்கு ஆறு லட்சம் செலவானது. ஒரு புதிய சிறிய தயாரிப்பாளருக்கு இதெல்லாம் அநியாய செலவுதான் .
ஆன்ட்டி என்றால் தப்பு என்கிறார்கள். குள்ளன் என்று கூறக்கூடாது என்கிறார்கள். நாங்கள் 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்குத் தான் ஏ சர்டிபிகேட் கேட்கிறோம்.யூ ஏ எல்லாம் நாங்கள் கேட்கவில்லை . நாங்கள் பெண்களைத் தவறாகத் சித்தரிக்கவில்லை. அப்படிச் செய்திருந்தால் இப்படி ஆறு நடிகைகள் நடித்திருக்க முடியுமா? என்றோம் அவர்கள் ஆனால் ஒப்புக்கொள்ளவில்லை.
தெருக்கூத்துகளில் நாடகங்களில் இல்லாத இரட்டை அர்த்த வசனங்களா? ஆனால் திரைப்படத்தில் இருந்தால் பெரிது படுத்துகிறார்கள் .அதில் இல்லாததையா நாங்கள் கூறுகிறோம்? இன்று சினிமா வெப் சீரிஸ் எல்லாம் எவ்வளவு மாறி இருக்கிறது என்பதைப் புரிந்து கொள்ள மறுக்கிறார்கள்.
இப்படத்தை தமிழ் தெலுங்கு என்று நேரடிப் படம் போலவே எடுத்துள்ளோம் .இன்று ஒரு படத்தை வியாபாரம் செய்வது என்பது மிகவும் சிரமமாக இருக்கிறது. ஹார்ட் டிஸ்க்கை எடுத்துக் கொண்டு ஐந்தாறு ஆண்டுகளாகத் தயாரிப்பாளர் அலைய வேண்டி உள்ளது. இப்படி சினிமாவில் போராடிக் கொண்டிருக்கிறார்கள். இப்படிப்பட்ட இடையூறுகளை எல்லாம் நினைத்து நான் கண்கலங்கி அழுதிருக்கிறேன். நம்மை நம்பி வந்த தயாரிப்பாளருக்கு நஷ்டம் வராமல் காப்பாற்றுவது நமது கடமை அல்லவா?
தயாரிப்பாளர் தந்தை போன்றவர். அப்படித் தந்தை ஸ்தானத்தில் உள்ளவருக்கு நான் துரோகம் செய்ய முடியுமா ?ஏமாற்ற முடியுமா? படத்தில் நாங்கள் கருத்து சொல்லவில்லை .ஒரு அடல்ட் காமெடி படம்தான் எடுத்துள்ளோம்” என்றார்.
‘ரா ..ரா .சரசுக்கு ராரா… படத்தினை, 9 V ஸ்டுடியோஸ் வெளியிடும் இப்படம் நவம்பர் 3 ஆம் தேதி வெளியாகவுள்ளது.7