ராங்கி – விமர்சனம்!

லைகா புரொடெக்சன்ஸ் சார்பில் சுபாஷ்கரன் தயாரித்துள்ள படம் ராங்கி. ஏ.ஆர்.முருகதாஸ் கதைக்கு, திரைக்கதை எழுதி இயக்கியிருக்கிறார், எம்.சரவணன். த்ரிஷா நாயகியாக நடித்திருக்க ஜான் மகேந்திரன், அனஸ்வரா ராஜன், லிஸி ஆண்டனி, கோபி கண்ணதாசன் ஆகியோர் உடன் நடித்துள்ளனர்.

எதையும் துணிச்சலுடன் எதிர்கொள்ளும் பெண் பத்திரிகையாளர் த்ரிஷா. தனது அண்ணன் குடும்பத்தினருடன் வசித்து வருகிறார். த்ரிஷாவின் அண்ணன் மகள் அனஸ்வராவின் நிர்வாண வீடியோ அவளது அப்பாவின் வாட்ஸ்அப்புக்கு வருகிறது. அதிர்ச்சியடைந்த அவர் இது குறித்து தனது தங்கை த்ரிஷாவிடம் கூறுகிறார்.

த்ரிஷா விசாரணையில் இறங்குகிறார். அப்போது நாட்டையே உலுக்கிப் போடும் அளவில் பல சம்பவங்கள் நடைபெறுகிறது. வெளிநாட்டு தீவிரவாதிகளிடம் த்ரிஷாவும் அவரது அண்ணன் மகளும் மாட்டிக்கொள்கின்றனர். அவர்களிடமிருந்து எப்படி தப்பித்தனர் என்பது தான் ராங்கி படத்தின்  கதை.

இளமை மாறாத த்ரிஷா துணிச்சல் மிக்க பெண் பத்திரிகையாளர் ‘தையல் நாயகி’என்ற கதாபாத்திரத்தில் சிறப்பாக நடித்திருக்கிறார். ஆக்‌ஷன் காட்சிகளில் அதிரடி காட்டி நடித்துள்ளார்.

சுஷ்மிதா என்ற டீன் ஏஜ் பள்ளி மாணவியின் கதாபாத்திரத்திரத்திற்கு கச்சிதமாக பொருந்திப் போகிறார் அனஸ்வரா. வயதுக்கே உரிய அப்பாவித்தனமான குணத்தை அழகாக வெளிப்படுத்தியிருக்கிறார்.

அதேபோல் ஆலிம் என்ற கதாபாத்திரத்தில் போராளியாக நடித்திருக்கும் அந்த உஸ்பெகிஸ்தான் இளைஞரின் நடிப்பு அட்டகாசம். படம் பார்ப்பவர்களின் அனைவர் மனதிலும் இடம்பிடித்து விடுகிறார்.

இன்ஸ்பெக்டராக நடித்திருக்கும் இயக்குநர் ஜான் மகேந்திரன், பல போலீஸ் இன்ஸ்பெக்டர்களை பிரதி எடுத்திருக்கிறார்.

த்ரிஷாவின் அண்ணி கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் லிஸி ஆண்டனி, சில காட்சிகளில் நடித்திருந்தாலும் சிறப்பான நடிப்பினை வெளிப்படுத்துகிறார்.

இசையமைப்பாளர் சி.சத்யாவின் பின்னணி இசையும், ஒளிப்பதிவாளர் சக்திவேலின் ஒளிப்பதிவும் படத்தின் பலம்.

விறுவிறுப்பான திரைக்கதையில் பல நம்பமுடியாத காட்சியமைப்புகள். உதாரணமாக சஸ்பெண்ட் செய்யப்பட்ட இன்ஸ்பெக்டர் பணியிலிருப்பது. தீவிரவாதிகளிடம் தொடர்பிலிருக்கும் அமைச்சர் புகை படத்தை வெளியிட்ட த்ரிஷாவை கண்டு கொள்ளாமல் இருப்பது, வெளிநாட்டில் இருந்து சில நிமிடங்களிலேயே இன்ஸ்பெக்டரை ஆட்கள் மூலம் சுட்டுக்கொள்வது, த்ரிஷா விதவிதமான துப்பாக்கிகளை கொண்டு சுலபமாக சுடுவது போன்ற பல காட்சிகளை சொல்லலாம்.

ராங்கி த்ரிஷாவின் ரசிகர்களுக்காக!