‘ராயன்’  – விமர்சனம்!

‘சன் பிக்சர்ஸ்’ சார்பாக, கலாநிதி மாறன் தயாரிப்பில் வெளிவந்துள்ள படம், ராயன். இப்படத்தினை எழுதி இயக்கியிருக்கும் தனுஷ், முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருக்க, அவருடன் சந்தீப் கிஷன், காளிதாஸ் ஜெயராம், துஷாரா விஜயன், எஸ். ஜே. சூர்யா, பிரகாஷ்ராஜ், ‘பருத்திவீரன்’ சரவணன், திலீபன் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர்.

‘ராயன்’ திரைப்படம், தனுஷின் இயக்கத்தில் வெளிவந்துள்ள இரண்டாவது படமும், அவரது நடிப்பினில் வெளிவந்துள்ள 50 படம், என்பதும் குறிப்பிடத்தக்கது. மிகுந்த எதிர்பார்ப்புக்கிடையில் வெளிவந்துள்ள ‘ராயன்’ திரைப்படம், ரசிகர்களை கவர்ந்ததா, இல்லையா? பார்க்கலாம்.

தனுஷ், சந்தீப் கிஷன், காளிதாஸ் ஜெயராம் ஆகிய மூவரும் சகோதரர்கள். இவர்களது தங்கை துஷாரா விஜயன் பிறந்த சில மாதங்களிலேயே, அவர்களது பெற்றோர்கள் மர்மமான முறையில் கானாமல் போகிறார்கள். அவர்களுக்கு என்ன ஆயிற்று, என்று தெரிய வருவதற்குள், பூசாரி ஒருவர் குழந்தை துஷாரா விஜயனை விற்க முடிவு செய்கிறார். இதை அறிந்து கொள்ளும் குடும்பத்தின் மூத்த பிள்ளையான தனுஷூக்கு தெரிய வருகிறது. இதனால், அங்கிருந்து தம்பிகளுடனும், தங்கையுடனும் தப்பித்து சென்னைக்கு வருகிறார்.

சென்னையில், செல்வராகவனின் உதவியோடு, தனுஷ் தன் சகோதரர்களுக்காகவும், சகோதரிகளுக்காகவும் கிடைக்கும் அனைத்து  கூலி வேலைகளையும் செய்து அவர்களை வளர்த்து வருகிறார். வருடங்கள் சென்ற நிலையில், தனுஷ் ஒரு ஃபாஸ்ட் ஃபுட் கடை நடத்தும் நிலைக்கு உயருவதுடன் ஒரே தங்கையையும், சகோதரர்களையும் தனது உயிராக பாவித்து வருகிறார். இந்த காலக்கட்டத்தில் சந்தீப் கிஷன், அனைத்து கெட்ட பழக்கங்களையும் கற்றுக்கொண்டு விடுகிறார். காளிதாஸ் ஜெயராம் கல்லூரியில் படித்து வருகிறார். தனுஷ், தங்கைக்கு கல்யாணம் செய்து வைக்கும் முயற்சியில் இருக்கிறார்.

இதற்கிடையே, சென்னையின் பிரபல தாதாக்கள் எஸ் ஜே சூர்யா), மற்றும்  ‘பருத்தி வீரன்’ சரவணன் இருவருக்கும் இடையே பகை. இதில், ஒருவரை ஒருவர் தீர்த்துகட்ட  முயற்சித்து வருகின்றனர். இந்த பகையை பெரிதாக ஆக்கி, அதன் மூலம் மொத்த ரௌடிகளையும் ‘என்கவுன்ட்டர்’ செய்ய காத்திருக்கிறார், போலீஸ் அதிகாரி பிரகாஷ்ராஜ். இவர்களுக்கு நடுவே தனுஷின் தம்பி சந்தீப் கிஷன் மாட்டிக்கொள்கிறார். அவரை காப்பாற்ற தனுஷ் முயற்சி செய்கிறார். இதன் பிறகு என்ன நடந்தது என்பதே, ராயன் படத்தின் பரபரப்பான திரைக்கதையும், எதிர்பாராத க்ளைமாக்ஸூம்!

ராயன் படத்தின் கதை, வட சென்னை பானியிலான துரோகத்தின் இன்னொரு வடிவமே. ஆனால், திரைக்கதையும் அதற்கான காட்சியமைப்பும் மிரளச்செய்கிறது. முதல் பாதி படம் பயமும், விறுவிறுப்புமாக செல்கிறது. இரண்டாம் பாதி சற்றே சுனங்குகிறது. ரசிகர்கள் இது போல் நடக்குமா, சாத்தியமா? என கேள்விகள் கேட்க ஆரம்பித்து விடுகிறார்கள். ஆனால், எதிர்பாராத டிவிஸ்ட்டுகள் அதை சமப்படுத்துகிறது.

அண்ணன், தங்கை சென்டிமென்டை முன்னிறுத்தி, ரத்தம் தெறிக்கும் ஆக்‌ஷன் படத்தினை உருவாக்கியிருக்கும் இயக்குநர் தனுஷ், அதற்கான நடிகர்களின் தேர்வின் மூலம் வெற்றியினை உறுதி செய்திருக்கிறார்.

ராயன் கதாபாத்திரத்தில் தனுஷ் மிகச்சிறப்பாக நடித்திருக்கிறார். அதிகமான வசனங்கள் பேசாமல், பாவனைகள் மூலமாக ரசிகர்களை எளிதில் ஈர்த்துவிடுகிறார். அவரது மீசையும், வித்தியாசமான தோற்றமும் ராயனுக்கு கம்பீரம் சேர்க்கிறது. ஆக்‌ஷன் காட்சிகளில் அட்டகாசமாய் சுழன்றடித்திருக்கிறார்.

துர்கா கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் துஷாரா விஜயன், சிறப்பான நடிப்பினை கொடுத்திருக்கிறார். குறிப்பாக, ஆஸ்பத்திரியில் உயிருக்கு போராடும் தனுஷை, கொல்ல முயற்சிக்கும் கும்பலிடமிருந்து காப்பாற்றும் காட்சியில் மிரட்டியிருக்கிறார்.

தனுஷின் தம்பியாக நடித்திருக்கும் சந்தீப் கிஷன், கதாபாத்திரத்தின் தன்மை அறிந்து மிகச்சரியாக நடித்திருக்கிறார். இவருக்கும், அபர்னா பாலமுரளிக்கும் இடையேயான காதல் காட்சிகள் ரசனையானவை. அதிலும், குத்து பாடல் காட்சியின் போது, அபர்னா பாலமுரளியின் பெர்ஃபார்மன்ஸ் சூப்பர்.

எஸ் ஜே சூர்யா, செல்வராகவன், காளிதாஸ் ஜெயராம், பிரகாஷ் ராஜ், ‘பருத்திவீரன்’ சரவணன், திலீபன் என அனைவருமே கதாபாத்திரங்களாகவே நடித்திருக்கிறார்கள்.

பீட்டர் ஹெய்னின் ஆக்‌ஷன் காட்சிகள் ஜிவ்வென இருக்கின்றன. குறிப்பாக தனுஷ், துஷரா விஜயன் இருவரும், அடியாட்களுடன் மோதும் காட்சியை சொல்லாம். காட்சிகளை அழகாக தொகுத்திருக்கிறார்,பிரசன்னா.

தனுஷின் ஆளுமையான நடிப்பும், இயக்கமும் படத்தின் பலமாக இருந்தாலும், இன்னொரு பலமாக இருக்கிறது, ஒளிப்பதிவாளர் ஓம் பிரகாஷின் ஒளிப்பதிவும், ஏ ஆர் ரஹ்மானின் பின்னணி இசையும், பாடல்களும். அதிலும், க்ளைமாக்ஸ் காட்சியில் இடம்பெறும், அடங்காத அசுரன்…’ பாடலின் போது தியேட்டரில் விசிலும், கரகோசமும் விண்ணைப்பிளக்கிறது.

தனுஷூக்கு பெயர் சொல்லும் படமான ராயன், அவரது ரசிகர்களுக்கான கமர்ஷியல் படம்!