‘ரேசர்’ – விமர்சனம்!

பள்ளி படிக்கும் வயதிலிருந்தே மோட்டார் பைக் மீது அளவற்ற விருப்பு கொண்டவர், நாயகன் அகில் சந்தோஷ். அவரது பெரும் கனவு, லட்சியம் எல்லாமே எப்படியாவது, ஒரு நல்ல மோட்டார் பைக் வாங்குவதும், ரேசர் ஆவதும் தான். ஆனால் அவரது குடும்ப சூழ்நிலையும், பொருளாதாரமும் அவரது கனவுக்கு தடையாக இருக்கிறது. இந்த தடையினை மீறி அவர் மோட்டார் பைக் ரேசர், ஆனாரா? என்பது தான் ‘ரேசர்’ படத்தின் கதை.

அறிமுகமான முதல் படத்திலேயே நாயகன் அகில் சந்தோஷ், கவனிக்கும் படி நடித்துள்ளார். பைக் மீதான காதலை அழகாக பிரதிபலித்திருக்கிறார். இவரது தந்தையாக நடித்திருக்கும் மூர்த்தியிடம் வாக்குவாதம் செய்வதும், அடம்பிடிப்பதும் என, பைக் மீது ஆர்வம் கொண்ட சக இளைஞனை கண்முன் நிறுத்துகிறார். இவரது தந்தை கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் மூர்த்தியும் குறிப்பிடும்படி நடித்திருக்கிறார்.

நாயகியாக நடித்திருக்கும் சின்னத்திரை நடிகை லாவண்யா, சில காட்சிகள் மட்டுமே வந்தாலும் இவரது நடிப்பும் குறிப்பிடும்படி இருக்கிறது.

மோட்டார் பைக் மெக்கானிக்காக நடித்திருக்கிறார், ஆறு பாலா. மோட்டிவேஷனல் தரும் நல்ல கதாபாத்திரம். கவனிக்கும்படியான நடிப்பினை கொடுத்துள்ளார்.

நாயகன் அகில் சந்தோஷ் நண்பர்களாக நடித்திருக்கும் சரத், நிர்மல் மற்றும் சதீஷ் ஆகியோரும் குறை சொல்ல முடியாதபடி நடித்துள்ளனர்.

ஒளிப்பதிவாளர் பிரபாகர், பைக் ரேஸ் காட்சிகளை, மோசம் என சொல்ல முடியாத அளவுக்கு படமாக்கியிருக்கிறார்.  இசையமைப்பாளர் பரத்தின் இசை ஓகே.

சாலைகளில் இளைஞர்கள் பைக் ரேசில் ஈடுபடுவது குறித்து நியாயம் செய்ய முயற்சித்திருக்கிறார்கள். அது சற்று யோசிக்கவே செய்கிறது. பணம், பயிற்சி இருந்தால் இந்த பைக் ரேஸிலும் சாதிக்கலாம். என்கிறார் இயக்குநர் சாட்ஸ் ரெக்ஸ்.

முழுக்க முழுக்க பைக் ரேஸ் காட்சிகள் இல்லாமல் ஆங்காங்கே சில எமொஷனல், சின்ன சிரிப்பு வரவழைக்கும் காட்சிகளை கொண்டு டீசன்டான ‘ரேசர்’ படத்தினை கொடுத்திருக்கிறார், இயக்குநர் சாட்ஸ் ரெக்ஸ்.