‘தற்குறி’த் தனத்தின் உச்சம்! – ‘ரயில்’ – விமர்சனம்!

‘டிஸ்கவரி சினிமாஸ்’ சார்பில், வேடியப்பன் தயாரித்திருக்க, எழுதி இயக்கியிருக்கிறார், பாஸ்கர் சக்தி. குங்குமராஜ், வைரமாலா, பர்வேஸ் மெஹ்ரூ ஆகிய மூவரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்க, இவர்களுடன் செந்தில் கோச்சடை, ரமேஷ் வைத்யா,  ஷமீரா, பிண்ட்டூ, வந்தனா, பேபி தனிஷா, சுபாஷ், தங்கமணி பிரபு, ரமேஷ் யந்த்ரா, சாம் டேனியல், ராஜேஷ், ராமையா உள்ளிட்ட பலர் நடித்திருக்கின்றனர். இவர்களில் பலர் அறிமுக நடிகர்கள்.

ஒளிப்பதிவு தேனிஈஸ்வர், இசையமைப்பாளர்  S.J. ஜனனி, எடிட்டர் நாகூரான் இராமச்சந்திரன். தொலைக்காட்சித் தொடர் மற்றும் திரைப்படங்களுக்கு வசனம் எழுதி வந்த பாஸ்கர் சக்தி, இந்தப்படத்தின் மூலம் அறிமுகமாகியிருக்கிறார்.

ரயில். முதலில் ‘வடக்கன்’ என பெயரிடப்பட்ட இத்திரைப்படம், தமிழர்களுக்கு விழிப்புணர்வினை ஏற்படுத்துவது போல், ‘பாசாங்கு’ செய்யும் திரைப்படம். தமிழர்களை எவ்வளவு இழிவுபடுத்த முடியுமோ.. அவ்வளவு இழிவுபடுத்தியிருக்கிறார், இயக்குநர் பாஸ்கர் சக்தி.

நாயகன் குங்குமராஜ்  ஒரு எலக்ட்ரிஷியன். வேலையை விட, குடிப்பதில் ஆர்வமுள்ளவர். குடிகாரர். இதன் காரணமாக, அவருடைய மனைவி வைரமாலாவுக்கும், அவருக்கும்  அடிக்கடி சண்டை ஏற்படுகிறது. இவர்களுடைய வீட்டிற்கு எதிரில் வசிக்கும் வடமாநில இளைஞர் பர்வேஸ் மெஹ்ரூ. அருகிலுள்ள பஞ்சு மில்லில் வேலை செய்பவர். எந்தவிதமான கெட்ட பழக்கமும் இல்லாதவர். வைரமாலா, பர்வேஸ் மெஹ்ரூவை தம்பி போல் பாவித்து வருகிறார். இதன் காரணமாக பர்வேஸ் மெஹ்ருவின் மீது, குங்குமராஜூக்கு  வெறுப்பு ஏற்படுகிறது. தன்னுடைய குடிகார நண்பர் ரமேஷ் வைத்யாவுடன் சேர்ந்து, பர்வேஸ் மெஹ்ருவை தீர்த்துகட்ட முடிவு செய்கிறார், குங்குமராஜ். இதன் பிறகு என்ன நடந்தது? என்பதே ‘ரயில்’ படத்தின், ஒரு சார்புள்ள திரைக்கதை மற்றும் க்ளைமாக்ஸ்!

குங்குமராஜ், வைரமாலா இருவரும் கதாபாத்திரங்களில் கச்சிதமாக பொருந்தியிருக்கிறார்கள். இயக்குநருக்கு ஏற்றபடி நடிக்கும் திறன் பெற்றவர்களாக தெரிகிறார்கள். வைரமாலாவின் வசீகரத் தோற்றமும், நடிப்பும் ரசிகர்களை எளிதில் ஈர்த்து விடுகிறது. குறிப்பாக பர்வேஸ் மெஹ்ருவின் உடைமையை தொலைத்துவிட்டு, குற்ற உணர்ச்சியுடன் புலம்பி, குங்குமராஜை அடிக்கும் காட்சியில் சிறப்பாக நடித்திருக்கிறார்.

வட இந்திய வாலிபராக நடித்திருக்கும் பர்வேஸ் மெஹ்ரூ, பெரிதாக மனம் கவரவில்லை என்றாலும், குறை சொல்ல முடியாதபடி நடித்திருக்கிறார்.

குங்குமராஜின் நண்பராக நடித்திருக்கும் ரமேஷ் வைத்யா, குடிகாரனாகவே வாழ்ந்திருக்கிறார்!

மற்றபடி, வைரமாலாவின் தந்தையாக நடித்திருக்கும் செந்தில் கோச்சடை, ஷமீரா, பிண்ட்டூ, வந்தனா, பேபி தனிஷா, சுபாஷ், தங்கமணி பிரபு, ரமேஷ் யந்த்ரா, சாம் டேனியல், ராஜேஷ், ராமையா உள்ளிட்டவர்களின் நடிப்பும் ஓகே!

ஒவ்வொரு ஃப்ரேமையும் அழகாக காட்டுவதில் மட்டுமே முனைப்பு காட்டியிருக்கிறார், ஒளிப்பதிவாளர் தேனி ஈஸ்வர். அவருடைய ஒளிப்பதிவு கதையுடன் ஒன்றாமல் தனித்து தெரிகிறது.

அமெரிக்காவில், இசைக்கலைஞர்களுக்கு வழங்கப்படும் மிகவும் முக்கிய விருதுகளில் ஒன்று (Grammy Awards) ‘கிராமி விருது’. இதற்கான வாக்கு செலுத்தும் உறுப்பினர்களில் ஒருவரான எஸ்.ஜே.ஜனனி, இப்படத்திற்கு இயல்புடன் இசையமைத்திருக்கிறார்.

ரயில் திரைப்படத்தின் திரைக்கதை, உயிரோட்டமில்லாத காட்சிகளால் தொகுக்கப்பட்டுள்ளது. எதார்தத்தை மீறிய காட்சியமைப்புகள் அயற்சியை ஏற்படுத்துகிறது. அதிலும் ஊர் மக்களுடன் சிறிதும் பரிச்சயமில்லாத ஒருவரின் மரணத்திற்கு கூடி சடங்கு செய்வதெல்லாம் எந்த ஊரு எதார்த்தம்? என்று தெரியவில்லை.

படம் முழுவதும் செயற்கைத் தனமான காட்சிகள். குறிப்பாக சொல்ல வேண்டுமானால், விபத்தில் இறந்தவரின் உடலை, அவருடைய உறவினர்களின்றி, போலீசார் அவர் வசித்த வீட்டில் வைத்து விட்டுச்செல்லும் காட்சியெல்லாம் ‘தற்குறி’த் தனத்தின் உச்சம்!

வட இந்தியர்களின் வருகைக்கு பிறகே தமிழ்நாட்டில் ‘சாராயம்’ தவிர்த்த, பிற போதை வஸ்துக்களின் புழக்கம் அதிகரித்தது. இதை, இயக்குநர் பாஸ்கர் சக்தி சாமார்த்தியமாக தவிர்த்து, வட இந்தியர்களுக்கு ஒரு கெட்ட பழக்கம் கூட இல்லை! என காட்சிப்படுத்தியிருப்பது ஏன்? என்று தெரியவில்லை.

‘வடக்கன்’ என தலைப்பிடத் தெரிந்த இயக்குநருக்கு, இரு சாராரையும் சமமாக பாவித்து, திரைக்கதை அமைக்காமல், பிரச்சனையை சரியாக அணுகாமல், ஒரு சார்பாக காட்சிப்படுத்தியிருப்பது அவலம்!

‘ரயில்’ – தமிழர்களுக்கு விழிப்புணர்வினை ஏற்படுத்துவது போல், ‘பாசாங்கு’ செய்யும் திரைப்படம்!