‘ரஜினி கேங்க்’ –  விமர்சனம்!

‘மிஷ்ரி எண்டர்பிரைசஸ்’ சார்பில், சி.எஸ்.பதம்சந்த், சி.அரியந்த் ராஜ், ரஜினி கிஷன்​ ஆகியோர் தயாரித்துள்ளனர். எழுதி இயக்கியிருக்கிறார், எம். ரமேஷ் பாரதி. இதில் ரஜினி கிஷன், திவிகா, முனிஷ்காந்த், ‘மொட்டை’ ராஜேந்திரன், கூல் சுரேஷ், கல்கி மற்றும் பலர் நடித்துள்ளனர்.

இசை, எம்.எஸ். ஜோன்ஸ் ரூபர்ட். ஒளிப்பதிவு, என்.எஸ். சதீஷ் குமார்.

சவுண்ட் சர்வீஸ் நடத்தி வரும் நாயகன் ரஜினி கிஷனும், ஊர்த்தலைவரின் பெண்ணான நாயகி திவிவிகாவும் காதலர்கள். இவர்களது காதலுக்கு, வீடுகளில் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர். இதன் காரணமாக, ஓடிப்போய் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்கின்றனர். இந்த விஷயம் ஊர் மக்களுக்கு தெரிய வருகிறது. ஊரே ஒன்று திரண்டு இவர்களை துரத்துகிறது. அப்போது கார் திருடும் முனீஷ்காந்த், அவரது காரில் லிஃப்ட் கொடுக்கிறார். இவர்கள் போகும் வழியில் வீடுகளில் திருடும் கல்கிக்கும் முனீஷ்காந்த் லிஃப்ட் கொடுக்கிறார்.

முனீஷ்காந்த் திருடியது, அமைச்சர் லொள்ளு சபா மனோகரின் கார். இதனால் போலீஸ் இவர்களை மடக்கிப்பிடிக்க துரத்துகிறது. இன்னொரு புறம், திவிகாவின் முறைமாமன் கூல் சுரேஷூம் துரத்துகிறார். இவர்களிடமிருந்து தப்பிக்க, போகும் வழியில் இருக்கும் கோவிலில் முனிஷ்காந்தும், கல்கியும் சேர்ந்து அவர்களுக்கு திருமணம் செய்து வைக்க முடிவு செய்கின்றனர். அதன் படி, கல்கி ஒரு வீட்டில் திருடிய தாலியை, ரஜினி கிஷனிடம் கொடுத்து திவிகாவின் கழுத்தில் கட்டச்சொல்கிறார். இந்நிலையில் திவிகாவிற்கு பேய் பிடிக்கிறது. இதற்கு பிறகு என்ன நடந்தது? என்பது தான், ‘ரஜினி கேங்க்’ படத்தின் மீதிக்கதை.

அறிமுக நடிகராக நடித்திருக்கும் ரஜினி கிஷன், தனது அப்பாவித்தனமான முகத்தை வைத்துக்கொண்டு குறிப்பிடும்படி நடித்துள்ளார். அவருக்கு ஆட்டம் பாட்டம் நடிப்பு எல்லாமே வருகிறது. அறிமுக நடிகர் என்று தெரியாத அளவிற்கு நடித்திருக்கிறார். நாயகியாக நடித்திருக்கும் திவிகாவும், குறை சொல்லமுடியாத நடிப்பினை கொடுத்துள்ளார். அவருக்கு காதலும் வருகிறது. காமெடியும் வருகிறது. பாடல் காட்சியில் அழகாக தெரிகிறார். முனிஷ்காந்த், கூல் சுரேஷ் தங்களது வழக்கமான நடிப்பினைக் கொடுத்துள்ளனர். மொட்டை ராஜேந்திரன் வரும் காட்சிகளில் சற்று சிரிப்பு ஏற்படுகிறது.

எழுதி இயக்கியிருக்கும் எம்.எஸ்.ரமேஷ் பாராதி, காமெடிக்கு முக்கியத்துவம் கொடுத்து இயக்க  முயற்சித்திருக்கிறார். அது வெகு சில இடங்களில் மட்டுமே ஓர்க் அவுட் ஆகியிருக்கிறது. மற்ற இடங்களில் கடியாகவே இருக்கிறது. இன்னும் கொஞ்சம் முயற்சித்திருந்தால் எல்லோரையும் சிரிக்க வைத்திருக்கலாம்.