அமேசான் பிரைம் வீடியோ மற்றும் சூர்யாவின் 2டி என்டர்டெய்ன்மெண்ட் நிறுவனத்திற்கு இடையேயான நான்கு திரைப்பட ஒப்பந்தத்தின் படி, ‘ராமே ஆண்டாலும் ராவணே ஆண்டாலும்’ என்ற திரைப்படம் முதலில் வெளியாகிறது. இப்படத்தின் முன்னோட்டத்தை இன்று (செப்டம்பர் 15ஆம் தேதி) நடிகர் சூர்யா வெளியிட்டார்.
எளிய மக்களின் சமூகவியல் வாழ்க்கையை நையாண்டித்தனத்துடன் தயாராகியிருக்கும் இந்த திரைப்படத்தில் திறமையான தொழில்நுட்பக் கலைஞர்களும், நடிகர்களும், புதுமுகங்களும் இடம் பெற்றிருக்கிறார்கள். பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் இப்படத்தின் பிரத்யேக காட்சி, செப்டம்பர் மாதம் 24ஆம் தேதி, 240 நாடுகளிலும் அமேசான் பிரைம் வீடியோ டிஜிட்டல் தளத்தில் வெளியாகிறது.
படத்தைப் பற்றி இயக்குனர் அரிசில் மூர்த்தி பேசுகையில்,‘ இந்த திரைப்படம் என் இதயத்திற்கு நெருக்கமானது. இதயப்பூர்வமான கதையை உயிர்ப்புடன் திரையில் கொண்டுவர படத்தில் பணியாற்றிய நடிகர்களும், தொழில்நுட்பக் கலைஞர்களும் சோர்வின்றி உழைத்தனர். படத்தில் கதையின் நாயகனான குன்னிமுத்துவின் தேடலில் அனைவருக்கும் பொதுவான உணர்வு பதுங்கி இருப்பதாகவே கருதுகிறேன்.
இந்த திரைப்படம் அமேசான் பிரைம் வீடியோவில் வெளியாவதால் சர்வதேச பார்வையாளர்களை சென்றடையும். இதனால் மகிழ்ச்சியடைகிறேன். இருப்பினும் இப்படத்தை உருவாக்கும்போது நாங்கள் அடைந்த மகிழ்ச்சியைப் போலவே, அவர்களும் இப்படத்தைக் காணும்போது சந்தோசமடைவார்கள் என நம்புகிறேன்.’ என்றார்.