ரத்தம் – விமர்சனம்!

Infiniti Film Ventures நிறுவனத்தின் சார்பில்  கமல் போரா, B.பிரதீப், பங்கஜ் போரா ஆகியோர் இணைந்து தயாரித்துள்ள படம், ரத்தம். எழுதி இயக்கியிருக்கிறார், சி.எஸ்.அமுதன்.

உலகின் மிகச் சிறந்த புலனாய்வு பத்திரிக்கையாளர்களில் ஒருவர் விஜய் ஆண்டனி. அவரது வாழ்க்கையில் நடந்த ஒரு சம்பவத்தின் காரணமாக தன்னுடைய மகளுடன் கொல்கத்தாவில் வசித்து வருகிறார். ‘வானம்’ பத்திரிக்கையின் ஆசிரியர், பிரபல நடிகரின் தீவிரமான ரசிகர் ஒருவரால் படுகொலை செய்யப்படுகிறார். இந்தக் கொலையின் பின்னணியில் சதி இருப்பதாக நினைக்கும் விஜய் ஆண்டனி அதற்கான ஆதாரங்களை திரட்டும் போது பல திடுக்கிடும் சம்பவங்கள் வெளிச்சத்து வருகிறது. இதுவே ரத்தம் படத்தின் கதை திரைக்கதை மற்றும் க்ளைமாக்ஸ்!

ரத்தம் தலைப்புக்கேற்றபடி படம் முழுவதும் ரத்தம் சிந்தாமல் ஒரே ஒரு காட்சியில் மட்டும் ரத்தத்தினை சிதறியிருப்பது ஆறுதலான விஷயம். கொலைகாரர்களை உருவாக்கும் டெக்னிக் திகில் ஏற்படுத்துகிறது. இயக்குநர் சி.எஸ் அமுதன் வித்தியாசமான கதைக்களத்துடன், மர்ம நாவலை போல் திரைக்கதை அமைத்திருப்பது, சிறப்பு.

வழக்கம்போல் விஜய் ஆண்டனிக்கு ஏற்ற கதைக்களம் மற்றும் கதாபாத்திரம். சோகமான உணர்வுகளை அவருக்கே உரிய பாணியில் நடித்திருக்கிறார். அவருக்கு என்ன வருமோ, அதை இயக்குனர் அழகாக வெளிக்கொண்டு வந்துள்ளார்.

ரம்யா நம்பீசன், மஹிமா நம்பியார், நந்திதா சுவேதா ஆகிய முவருமே கதையோட்டத்தில் கலந்திருக்கிறார்கள். அவரவர் கதாபாத்திரங்களுக்கு உரிய வகையில் நடித்துள்ளனர்.  இவர்களில் மஹிமா நம்பியார் அதிக கவனம் பெறுகிறார். மாறுபட்ட கதாபாத்திரத்தில் சிறப்பாக நடித்திருக்கிறார்.

பத்திரிக்கை ஆசிரியராக நிழல்கள் ரவி, ஜான் மஹேந்திரன், ஓ.ஏ.கே.சுந்தர், மீஷா கோசல், கலைராணி ஆகியோரும் சிறப்பாகவே நடித்திருக்கிறார்கள்.

ஒளிப்பதிவாளர் கோபி அமர்நாத்தின் ஒளிப்பதிவும், இசையமைப்பாளர் கண்ணன் நாராயணனின் இசையும் காட்சிகளை மேம்படுத்துகிறது.

படம் முழுவதும் லாஜிக் மீறல்கள் விரவிக்கிடந்தாலும், திரைக்கதை ஓட்டத்தில் மறைந்து விடுகிறது. இருந்தாலும், கமிஷனர் ஆஃபிஸுக்குள் குதிரை ஃபைட்டெல்லாம் ரொம்ப ஓவர்.

அதேபோல் க்ளைமாக்ஸில் குற்றவாளியை தப்பிக்க விடுவது அபத்தம். இதன் மூலம் விஜய் ஆண்டனியின் கதாபாத்திரம் சிதைக்கப்பட்டிருக்கிறது. அவர் செய்யும் தொழிலுக்கும் நேர்மையில்லாமல், பரிதாபமாக கொல்லப்பட்ட நண்பனின் கொலைக்கும் நியாயம் சேர்க்காமல் விட்டது ஏனோ தெரியவில்லை!

ரத்தம் – க்ரைம் த்ரில்லர் படங்களை விரும்பி பார்ப்பவர்களுக்கு பிடிக்கும்.