விக்னேஷ் நடித்த ‘ரெட் ஃப்ளவர்’ ஆகஸ்ட் 8ஆம் தேதி வெளியாகிறது!

ஸ்ரீகாளிகாம்பாள் பிக்சர்ஸ் சார்பில் கே.மாணிக்கம் தயாரிக்க, விக்னேஷ் கதையின் நாயகனாக நடித்திருக்கும் திரைப்படம் “ரெட் ஃப்ளவர்” (Red flower). ஆக்‌ஷன் த்ரில்லர் படமாக உருவாகியுள்ள இந்த படத்தை ஆண்ட்ரூ பாண்டியன் எழுதி இயக்கியிருக்கிறார். ஆகஸ்ட் 8ஆம் தேதி திரைக்கு வரவிருக்கும் இந்த படத்தின் இசை மற்றும் முன்னோட்ட வெளியீட்டு விழா சென்னை கமலா திரையரங்கில் நடிகர் விஷால், இயக்குனர்கள் பி.வாசு, சுராஜ் மற்றும் தமிழ் திரையுலகின் முன்னணி திரைப் பிரபலங்கள் கலந்து கொள்ள கோலாகலமாக நடைபெற்றது.

இந்நிகழ்வினில்..

ரெட் ஃப்ளவர் படத்தின் தயாரிப்பாளர் மாணிக்கம் பேசியதாவது:

ஸ்ரீகாளிகாம்பாள் பிக்சர்ஸின் முதல் மற்றும் மிக பிரமாண்டமான தயாரிப்பு இந்த ரெட் ஃப்ளவர். மேடையில் இருப்பவர்கள் மட்டும் சிறப்பு விருந்தினர்கள் அல்ல, இங்கு வந்திருக்கும் எல்லோருமே என்னுடைய சிறப்பு விருந்தினர்கள் தான். இந்த படம் தொடங்கிய நாளில் இருந்து இந்த நொடி வரை மிகச்சிறப்பாக நடந்து கொண்டிருக்கிறது. இந்த பிரபஞ்சத்துக்கு மிகப்பெரிய நன்றி. இரண்டு படங்கள் எடுத்து முடித்தும் இதுவரை ரிலீஸ் செய்யவில்லை. முதல் படமாக இந்த படம் தான் ரிலீஸாக வேண்டும் என்பது தான் என் ஆசை. இது ஒரு காதல் கதையோ, குடும்பக் கதையோ அல்ல. இந்தியாவை உயர்த்தி சொல்லும் ஒரு படம். இந்தியா வல்லரசு என்று சொன்னால் யாராலும் அதை மறுக்க முடியாது. இயக்குனர் ஆண்ட்ரூ பாண்டியன் இந்த தலைமுறையின் ஒரு சிறந்த இயக்குனராக வருவார்.

நடிகை காவ்யா பேசியதாவது:

2047ல் ஒரு மூன்றாம் உலகப் போர் நடந்தால் எப்படி இருக்கும், போர் நடக்கும் போது என்னவெல்லாம் நடக்கும் என்பதை மிகச்சிறப்பாக திரையில் காட்டியுள்ளார் இயக்குனர். 2047 காலகட்டத்தில் இந்தியா எப்படி இருக்கும் என்பதை சிறப்பாக காட்டியிருக்கிறார். கிரீன் மேட் காட்சிகள் எடுத்தால் நன்றாக இருக்காது என்பதால் முழுக்க முழுக்க ரியல் லொகேஷன்களில் படத்தை எடுத்திருக்கிறார். இப்படம் நிச்சயம் ஒரு புது அனுபவத்தை கொடுக்கும்”.

இயக்குனர் ஆண்ட்ரூ பாண்டியன் பேசியதாவது:

2047-ல் மால்கம் வரி செலுத்த மறுக்கும் நாடுகளின் மீது போர் தொடுக்கிறது, நேதாஜியால் உருவாக்கப்பட்ட ஒரு அமைப்பு தான் ரெட் ஃப்ளவர். அதை இந்தியா எப்படி அணுகுகிறது. இந்தியா எப்படி அதை முறியடிக்கிறது. கேமரா மேன் ஒரு நாளைக்கு 300 முதல் 350 ஷாட்ஸ் எடுப்பார். அவ்வளவு வேகமாக வேலை செய்பவர். எடிட்டரின் பங்கு அபரிமிதமானது.

நடிகர் விக்னேஷ் பேசியதாவது:

எனக்கு இயக்குனர் பாரதிராஜா மீது மிகப்பெரிய மரியாதை உண்டு. அவருக்கு இணையாக பி.வாசு சாரை பிடிக்கும். புரட்சித் தளபதி விஷால் நல்ல நடிகர் என்பதை தாண்டி நல்ல மனிதர். மனிதாபிமானம் மிக்கவர். நடிகர் சங்கத்தில் யாருக்கு எந்த பிரச்சினை என்றாலும், உதவி தேவைப்பட்டாலும் உடனே இறங்கி வேலை செய்பவர். ஒய்ஜி மகேந்திரன் அவர்களின் ஆர்வம் எனக்கு ஆச்சர்யத்தை ஏற்படுத்தியது. இந்த படத்தை பற்றி தினமும் கேட்டுக் கொண்டே இருப்பார். ஜான் விஜய், அஜய் ரத்னம், சுரேஷ் மேனன் என அத்தனை நடிகர்களும் இந்தப் படத்தில் சிறப்பாக நடித்திருக்கிறார்கள். தொழில்நுட்ப கலைஞர்களை பொறுத்தவரை எல்லோருமே இளைஞர்கள். அவர்களுடன் இணைந்து பணியாற்றியது மகிழ்ச்சி. இயக்குனர் ஆண்ட்ரூ நல்ல மனிதர், நேர்மையான உழைப்பை தந்துள்ளார். நிறைய பேர் விக்னேஷை வைத்து படம் எடுக்காதீர்கள் என தயாரிப்பாளரை தடுத்தனர். ஆனால் மாணிக்கம் சார் பின்வாங்காமல் படத்தை முடித்திருக்கிறார். அவர் சினிமாவில் சம்பாதிக்க வரவில்லை. சினிமா மீது பற்று வைத்துள்ளார். அவருக்காக மிகப்பெரிய வெற்றி அடையும். இந்த படம் வெற்றி அடைந்தால் அவர் அடுத்தடுத்து பல படங்களை தயாரிப்பார்.

30 ஆண்டுகளுக்கும் மேல் சினிமாவில் கஷ்டப்பட்டிருக்கிறேன். எவ்வளவோ உழைத்திருக்கிறேன். சினிமா தான் எனக்கு எல்லாமே. சினிமாவை அவ்வளவு பிடிக்கும். அதனால் தான் இவ்வளவு நாள் கழித்தும் மீண்டும் நடிக்க வந்திருக்கிறேன். நான் தோற்கலாம், ஆனால் என் முயற்சி தோற்கக்கூடாது.

முன்பெல்லாம் முதல் வாரம் கூட்டமே இல்லாமல் இருந்தால் கூட, ஓரிரு வாரங்கள் கழித்து லேட் பிக்கப் ஆகி வெற்றி பெறும். என்னுடைய சின்னத்தாயி, ராமன் அப்துல்லா போன்ற படங்கள் எல்லாமே லேட் பிக்கப் தான். ஆனால் இப்போது முதல் நாளே நன்றாக ஓடினால் தான் படம் வெற்றி அடையும். அதனால் ஒரு வாரம் கழித்து பார்க்கலாம், அப்புறம் பார்க்கலாம் என நினைக்காதீர்கள். தியேட்டரில் சென்று பாருங்கள் என்று கேட்டுக் கொள்கிறேன்.

நடிகர் விஷால் பேசியதாவது:

பி.வாசு சார் அன்றிலிருந்து இப்போது வரை நிற்கிறார் என்றால் அவரின் படங்கள் மற்றும் அவரின் உழைப்பு. இப்போதெல்லாம் நிறைய பேருக்கு டாக்டர் பட்டம் கொடுக்கிறார்கள், ஆனால் சுராஜ் அவர்களுக்கு கண்டிப்பாக டாக்டர் பட்டம் தரணும். அவர் இயக்கிய படங்கள் பல பேருக்கு மெடிஷன். அவர் வடிவேலுவை வைத்து இயக்கிய நகைச்சுவை காட்சிகள் தான் இன்றும் பலருக்கும் மருந்தாக இருக்கிறது.

இந்த அரங்கம் நிறைந்து இருப்பது போல அரங்கம் நிறைந்த காட்சிகளாக இந்த படம் ஓடணும். இங்கு சின்ன படம் பெரிய படம் என்று எதுவும் இல்லை. இந்த படத்தின் விழாவுக்கு வருவது என் கடமை. என் நண்பன் போராளி விக்னேஷூக்காக நான் வந்திருக்கிறேன். அதற்கு காரணம் அவர் கஷ்டம், அவமானங்களை தாண்டி இங்கு வந்திருக்கிறார். அவர் வெற்றி பெற வேண்டும். மாணிக்கம் என்ற ஒரு பொக்கிஷம் உங்களுக்கு தயாரிப்பாளராக கிடைத்திருக்கிறார்.

2025-ல் என்ன நடக்கிறது என்பதை படமாக எடுக்கவே இன்று பல இயக்குனர்கள் திண்டாடுகிறார்கள். ஆனால் இயக்குனர் ஆண்ட்ரூ 2047-ல் என்ன நடக்கும் என்பதை திரைக்கதையாக்கி படமாக எடுத்துள்ளார். எனக்குப் பிடித்த இரண்டு சுதந்திர போராட்ட வீரர்கள் பகத் சிங், நேதாஜி. அதில் நேதாஜிக்கு இந்த படத்தில் Tribute செய்தது மகிழ்ச்சி.

திரையரங்க உரிமையாளர்களுக்கு ஒரு கோரிக்கை. ஒரு திரைப்படம் வெளியாகும்போது முதல் 3 நாட்களுக்கு மட்டும் திரையரங்க உரிமையாளர்கள் பப்ளிக் ரிவியூ எடுக்க அனுமதிக்க வேண்டாம். வெளியில் அவர்கள் எடுத்துக் கொள்ளட்டும்.

தயாரிப்பாளர் சங்கத்துக்கு ஒரு முக்கியமான கோரிக்கை. தமிழ் சினிமாவில் ஒரே நாளில் 10 படங்கள் வெளியாகிறது, எந்த படத்துக்கும் சரியான அளவில் தியேட்டர் கிடைப்பதில்லை. அதனால் ரிலீஸை ஒழுங்கு முறைப்படுத்த வேண்டும்.

விரைவில் நடிகர் சங்க கட்டிடத்தை திறக்க வேலைகள் நடந்து வருகின்றது. ஆகஸ்ட் 29 என் பிறந்த நாள்.  கண்டிப்பாக நல்ல செய்தி காத்திருக்கிறது. திருமண தேதியை விரைவில் அறிவிப்பேன். என்றார்.

ரெட் ஃப்ளவர் திரைப்படத்தில் நடிகர் விக்னேஷூக்கு ஜோடியாக மனிஷா ஜஷ்னானி நடிக்கிறார். படத்தின் மற்ற முக்கிய கதாபாத்திரத்தில் நாசர், ஒய்.ஜி.மகேந்திரன், சுரேஷ் மேனன், ஜான் விஜய், அஜய் ரத்தினம், லீலா சாம்சன், டி.எம்.கார்த்திக், கோபி கண்ணதாசன், தலைவாசல் விஜய், மோகன் ராம், யோக் ஜேபி மற்றும் பலர் நடித்துள்ளனர்.

படத்திற்கு கே.தேவசூர்யா ஒளிப்பதிவு செய்ய , சந்தோஷ் ராம் இசை அமைக்க , படத்தொகுப்பு அரவிந்தன் ஆறுமுகம் கவனிக்க, கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்குகிறார் இயக்குனர் ஆண்ட்ரூ பாண்டியன். ஆகஸ்ட் 8ஆம் தேதி  திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது ரெட் ஃப்ளவர்.