‘ரெட் லேபில்’  – விமர்சனம்!

‘ரெவ்ஜென் ஃபிலிம் ஃபேக்டரி’ நிறுவனம் சார்பில், லெனின் தயாரித்து அவரது நடிப்பினில் வெளிவந்திருக்கும் திரைப்படம், ரெட் லேபில். லெனினுடன் அஸ்மின் , ஆர்.வி .உதயகுமார், அனு மோகன், முனிஸ்காந்த், தருண், கெவின், கார்மேகம், சசி, அனுஷா உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். பொன் பார்த்திபன் கதைக்கு, திரைக்கதை எழுதி இயக்கியிருக்கிறார், கே. ஆர் . வினோத். ஒளிப்பதிவு, சதீஷ் மெய்யப்பன். இசை, கைலாஷ் மேனன்.

கல்லூரியில் நடக்கும் காதல். மாணவர் தலைவர் தேர்தலில் நுழையும் அரசியல். அங்கே நடக்கும் ஒரு கொலை. இவையனைத்தையும், க்ரைம் த்ரில்லராக சொல்வது தான், ரெட் லேபில்.

எம்.எல்.ஏ ஆர்.வி .உதயகுமாரின் மகன் கல்லூரி மாணவர் தேர்தலில் போட்டியிடுகிறார். அவரை எதிர்த்து முன்னாள் மாணவர் லெனினின் உதவியோடு இன்னொருவர் போட்டியிடுகிறார். முன்னாள் மாணவர் லெனினுக்கும், எம்.எல்.ஏ ஆர்.வி .உதயகுமாரின் மகள் அஸ்மினுக்கும் காதல் ஏற்படுகிறது. இதனால், அஸ்மினின் முறைமாமனால் இடையூறு வருகிறது. இன்னொரு பக்கம் லெனினை பழிவாங்கத்துடிக்கும் இன்ஸ்பெக்டர், தக்க தருணத்தை எதிர்பார்த்துக்கொண்டிருக்கிறார். இந்த சூழலில், ஒரு கொல நடக்கிறது. கொலையாளி யார்? யாரை கொலை செய்தார், ஏன் கொலை செய்தார்? என்பது தான் ‘ரெட் லேபில்’  .

கதிர் என்ற கதாபாத்திரத்தில் நாயகனாக நடித்திருக்கும் லெனின், முதல் படம் போலில்லாமல் அனுபவப்பட்ட நடிகரைப்போல் சிறப்பாகவே நடித்திருக்கிறார். சண்டைக் காட்சிகளில் அதிரடி காட்டியும், காதல் காட்சிகளில் உருகியும் இருக்கிறார்.

நாயகியாக நடித்திருக்கும் அஸ்மின் படம் முழுவதும் பயணிப்பது போல் அவரது கதாபாத்திரம் இருக்கிறது. அவரும் கதாபாத்திரத்திற்கேற்ற நடிப்பை வழங்கியிருக்கிறார். எம்.எல்.ஏ வாக ஆர்வி உதயகுமார், அலட்டலில்லாமல் நடித்து படத்திற்கு பலம் சேர்த்துள்ளார். மற்றபடி, அனுமோகன், முனிஸ்காந்த், சதீஷ்குமார், தருண், கெவின், கார்மேகம், சசி, அனுஷா ஆகியோரும் குறிப்பிடத்தக்க  வகையில் நடித்துள்ளனர். சதீஷ் மெய்யப்பனின் ஒளிப்பதிவும்,  கைலாஷ் மேனனின் இசையும் படத்திற்கு பலம் சேர்த்துள்ளது.

படத்தின் முதல் பாதி முழுவதும் கல்லூரிக் காதல் மோதலாக பயணிக்கிறது. இரண்டாம் பாதி க்ரைம் த்ரில்லராக பயணிக்கிறது. க்ளைமாக்ஸ் சர்ப்ரைசாக இருக்கிறது. திரைக்கதை எழுதி, இயக்கியிருக்கும் இயக்குநர் ஏ ஆர் வினோத், ஆங்காங்கே தொய்வடையும் திரைக்கதையை சரி செய்து, இன்னும் சுவரசியமான முறையில் இயக்கியிருந்தால்,  சூப்பர் க்ரைம் த்ரில்லராக இருந்திருக்கும்!