‘ரேகை’ –  இணையத் தொடர் விமர்சனம்!

‘ரேகை’ இணையத் தொடரில் பாலஹாசன், பவித்ரா ஜனனி, கோபலன் பிரகதேஷ்,வினோதினி வைத்தியநாதன், அஞ்சலி ராவ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். தினகரன் இத்தொடரை இயக்கி இருக்கிறார். ‘எஸ் எஸ் குரூப் புரொடக்ஷன்’ சார்பில்,  எஸ்.சிங்காரவேலன் தயாரித்துள்ளார். Z5 தமிழ் OTT தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. இந்த இணையத் தொடர், க்ரைம் கதை எழுத்தாளர் ராஜேஷ்குமாரின் கதையை அடிப்படையாக வைத்து உருவாகி இருக்கிறது.

நான்கு மனிதர்கள், வெவ்வேறு பகுதிகளில் விபத்தின் காரணமாக உயிரிழக்கிறார்கள். போலீஸ் சப் இன்ஸ்பெக்டரான நாயகன் பாலா ஹாசன், அதை விசாரணை செய்கிறார். உயிரிழந்தவர்களின் நான்கு பேருடைய கை ரேகைகளும் ஒரே மாதிரியாக இருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைகின்றனர். விசாரணை விரிவடைந்து, துரிதப்படுத்தப்படுகிறது. முடிவில், பல திடுக்கிடும் சம்பவங்கள் வெளி வருகின்றன. அது என்ன? கொலை செய்யப்பட்டவர்கள் யார்? கொலை செய்தவர்கள் யார்? என்பதை, பரபரப்பாகவும், விறுவிறுப்பாகவும் ஆறு அத்தியாயங்களில் சொல்லப்படுகிறது. ஒவ்வொரு அத்தியாயமும் சுமார் 20 நிமிடங்கள் இருக்கிறது.

கொலையாளியைக் கண்டுபிடிக்கும் காவல் துறை அதிகாரியாக, பாலஹாசன். அவரது கம்பீரமான தோற்றமும், நடிப்பும் கதாபாத்திரத்திற்கு கச்சிதமாக இருக்கிறது. கொலையாளியை அவர் படிப்படியாக நெருங்கும் காட்சிகள் ரசனையானவை. அது, திரைக்கதைக்கு கூடுதல் சுவாரசியத்தைத் தருகிறது. பாலஹாசனின் காதலியாகவும், போலீஸ் கான்ஸ்டபிளாகவும் நடித்திருக்கிறார், பவித்ரா ஜனனி. வினோதினி வைத்தியநாதன், வித்தியாசமான கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். படத்தில் அநடித்த மற்ற கதாபாத்திரங்களும் குறிப்பிட்ட அளவில் தங்களது நடிப்பை கொடுத்துள்ளனர்.

பின்னணி இசை, காட்சிகளுக்கும் ஏற்றபடி அமைந்திருக்கிறது. ஒளிப்பதிவாளர் மகேந்திரா எம்.ஹெண்ட்ரியின் ஒளிப்பதிவு பலமாக அமைந்துள்ளது.

மருந்து தயாரிக்கும் கம்பெனிகளின், சட்டவிரோத பரிசோதனைகளும், அது சார்ந்த குற்றப்பின்னணிகளை மய்யப்படுத்தி, ஒரு ரசிக்கத்தக்க க்ரைம் டிராமாவை கொடுத்திருக்கிறார்கள்.

சில லாஜிக்குகளை மட்டும் தவிர்த்து விட்டு பார்த்தால், ‘ரேகை’ ஒரு விறுவிறுப்பான க்ரைம் த்ரில்லர்!